Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, March 27, 2014

குக்கூ திரைப்படம் - கோட்டோவியம்

நான் ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 2001-ல் மாணவ பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ராஜு முருகன் விகடனில் உதவி ஆசிரியராக இருந்தவர்... அவருக்கு நான் ஜுனியர்...

அவரின் படைப்புதான் தற்போது திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குக்கூ' திரைப்படம். அவருக்காக நான் வரைந்த கோட்டோவியம் இங்கே...


Monday, March 08, 2010

ஜேம்ஸ் கேமரூனின் மனைவி இயக்கிய 'ஹர்ட் லாக்கர்' படத்திற்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்..!

உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படங்களான டைட்டானிக், அவதார் உள்ளிட்ட படங்கள் உலக திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை..! அவரது சமீபத்திய திரைப்படமான அவதார் பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, சிறப்பான முறையில் திரை உலகினை வலம் வந்தது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்ற ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதிக அளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என பலராலும் எதிர்பார்ரக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'(Avatar) படத்தை பின்னுக்குத் தள்ளியது 'ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) திரைப்படம்.

இத்திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது ஒரு பெண் ஆவார். அவரது பெயர் கேத்தரின் பிக்லோவ் (Kathryn Bigelow). இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி ஆவார். இத்திரைப்படம் மிகக் (அவதாரை விட) குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படமாகும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சந்திக்கும் நிகழ்வுகளை மையாமகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஹர்ட் லாக்கர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒலித் தொகுப்பு (Best Film, Best Director, Best Original Screenplay, Editing, Sound Mixing and Sound Editing) என ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் கேத்தரின் பிக்லோவ்

ஆஸ்கர் வரலாற்றில் முதன் முதலாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் பெண்மணி கேத்தரின் பிக்லோவ் ஆவார். அதை இந்த மகளிர் தினத்தில் அவருக்கு கிடைத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை அவருக்கு மட்டுமின்றி, இத்துறையில் இருக்கும் மகளிருக்கும், இத்துறையை நேசிக்கும் மகளிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

(அவதார் படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன: சிறந்த காட்சிப் படிம உருவாக்கம் (Visual Effects), கலை (Art Direction), ஒளிப்பதிவு(Cinematography) ஆகிய துறைகளில் விருது வென்றது இத்திரைப்படம்.)

Tuesday, August 12, 2008

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...


நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.



எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்


1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.


1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.

(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....