Showing posts with label தாலாட்டு. Show all posts
Showing posts with label தாலாட்டு. Show all posts

Friday, August 01, 2008

ஓர் ஏழைத் தாயின் தாலாட்டு

பணம் காசு அவளிடம் இல்லை... மாட மாளிகையும் அவர்களுக்கு இல்லை... இருப்பது குடிசையானாலும்... அதுவே அவர்களுக்கு மாளிகையாய்... இதே ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு...

''ஆராரோ...ஆரிராரோ...
ஆரிராரோ... ஆராரோ..!
சாமி பவனி வரும் நேரத்தில
என் சாமி நீ பிறந்த..!
என் சாமி நீ பொறந்த நேரம்
சாமி கொணம் உனக்கு...!
இங்கே தேருல சாமி வரும்
தெருவெல்லாம் ஊர்கோலம்..!
என் சாமி நீ சுத்திவர
தேக்குத் தேரு உனக்கில்ல..!
மண்ணுல நீ நடந்தா
மனசெல்லாம் வலிக்குதடா..!
மாளிகையில் நீ நடக்க
மனம் போல செல்வம் இல்லை..!
தங்கமே நீ குடிக்க
தங்கப் பாலாடை உனக்கில்லை..!
மாமன் வாங்கி வந்தான்
சங்குப் பாலாடை..!
சர்க்கரையாய் இனிக்குமடா
நான் ஊட்டும் பால் உனக்கு..!
சந்திரனே நீ குடித்து விட்டு
சமத்தாய் நீ உறங்கு..!

பட்டுக்குஞ்சரமே நீ தூங்க
பஞ்சுமெத்தை இங்கில்ல..!
மெத்தையாட்டம் நீ உறங்க
பெத்தவ மடி இருக்கு..!
பணம் காசு இல்லன்னாலும்
பொன்மணியே... பொன்நிலவே...
குறையாத பாசம் மட்டும் நமக்கிருக்கு...!
ஆராரோ..ஆரிராரோ..!''

- ரஜினா. அகரம் கிராமம்.

(ஏழ்மையில் இருந்தாலும், அத்தாயின் மனம் என்றுமே பாசத்தால் உயர்ந்த நிலையில் இருக்கிறது... காசு பணம் இல்லன்னாலும்... பாசம் இருக்குதடா என்கிறாள்... தன்மகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று, ஏக்கப்பட்டாலும்... உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழும் வாழ்க்கை இவர்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும்... இதற்கு நிகரான பாடல் உண்டா...)

தாயின் தாலாட்டு

பெண் குழந்தை என்றால் கிராமங்களில் வெறுத்து விடுவார்கள். அப்பிள்ளைகளை படிக்க அனுப்பாமல்... வீட்டுற்குள் அடக்கி விடுவார்கள்... மதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் விட்டு கொலை செய்யும் பாதகம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுகு மாறாக தனது பெண்குழந்தையை ஒரு கிராமத்திலிருக்கும் தாய் தாலாட்டும் அழகை கேளுங்கள்...

''அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ...
ஆராரோ... ஆரிராரோ..!
நீ பாவாடை சரசரக்க
பள்ளிக்கூடம் போயிவாயேன்..!
நீ பள்ளிக்கூடம் போயிவந்தா
அம்மா பலகாரம் செய்து வைப்பேன்..!
நீ படிச்சாக்கா எம்மா குலப்பெருமை
நம்ம சனம் அங்கே கையெடுக்கும்..!
எம்மா... பணம் காசு நமக்கிருந்தா
பலபேரு கையெடுப்பான்...
குடிப்பெருமை நமக்கிருக்கு
நம்ம குலப்பெருமை தலையெடுக்க
நீ படிச்சி ஆகவேணும்..!
களத்து மேடு நெல்லுகுத்தி
கண்மணியே உன்னை படிக்க வைப்பேன்..!
குடும்பத்துக்கே நெல்லுகுத்தி
குலவிளக்கே உன்னை படிக்க வைப்பேன்..!
பட்டணத்துக்கே நெல்லுகுத்தி
பாலகியே உன்னை படிக்க வைப்பேன்..!
பாலூறும் மனசினிலே எம்மா
பக்குவாமாய் படிக்க வேணும்..!
ஆராரோ... ஆரிராரோ...

அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ..!''

- பூங்கொடி, பென்னகர் கிராமம்.

(கல்வியின் அவசியத்தை, கிராமத்திலிருக்கும் ஒருதாய், தன் குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்... சமூகத்தால் ஓதுக்கப்பட்ட பிரிவில் அவர்கள் இருக்கிறார்கள். அதை அழித்தெடுக்க கல்விதான் ஆயுதம் என்கிறாள்... இதற்கு இணையான ஒரு படைப்பை நகரத்தில் கிடைத்துவிடுமா..?)

கிராமத்து தாயின் தாலாட்டு...

ஒவ்வொரு பெண்ணுமே படைப்பாளிகள்தான்... அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் சிறந்த படைப்பாளிகள் எனலாம்... படைப்பாளியாவதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை... பகட்டான நகரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை...படிக்காமல் இருந்தாலும் கிராமத்து பெண்கள் பலவிதங்களில், நகரத்து பெண்களைவிட சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்...

ஒரு குடும்பத்தை உருவாக்குவதும், ஒரு குழந்தையை உருவாக்குவதும் பெண்ணே... ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகும்போதுதான் என்கிறார்கள்... (இதற்கு மட்டும்தான் பெண்களா..? என்று பெண்ணியவாதிகள் கொடி தூக்க வேண்டாம்...)

ஒவ்வொரு தாயும் படைப்பாளிகளே... பாடகிகளே... அதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.. தன் வாழ்வில் பட்ட அனுபவமே போதும். படிக்காமலிருந்தாலும் அவளும் கவிதாயினிதான், படைப்பாளிதான்... பாடகிதான்...

கிராமத்தில் வாழும் ஒரு பாமர, ஏழைத்தாய் தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறாள்... அவள் படிப்பின் வாசமறியாதவள்... அவள் துன்பத்தை மட்டுமே அறிந்தவள்... சமூகத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டவள்... இதே அவளது குரல்... தென்றலாக.. தேனினும் இனிய தாலாட்டாக...

''ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...
உன்னை யானையில போடும்போது
எண்ணமிட்டு போட்டேனோ..?
உன்னை தூளியில போடும்போது
துயரமிட்டு போட்டேனோ..?
தூங்கமா நீ அழற
துக்கம் என்ன சொல்லு கண்ணே..!
தொட்டில் கட்டி தூங்க வைக்க
மச்சு வீடு கட்டவில்ல...
மங்கா என் மாணிக்கமே
கண் மலராம ஏன் அழற...
கட்டில் மெத்தை போட்டு வச்சு
கன்னலுனை தூங்க வைக்க
பொட்டுக்காசு நமக்கில்ல
பொழுது மறைஞ்சபின்னும்
பூவே நீ ஏன் அழற...
அம்மா மடி இருக்கு...
அரும்பே நீ ஏன் அழற
அப்பாவோட தோளிருக்கு...
அழகே நீ ஏன் அழற...
நாங்க செஞ்ச ஓவியமே
ஓயாம நீ அழற
உன் ஒளிவு மறைவு சொல்லு கண்ணே...!
உனக்கு நெய் போட்டு சோறூட்ட
நல்ல காலம் நமக்கு இல்ல..!
உனக்கு பசும்பாலில் சோறூட்ட
பணம் காசு நமக்கு இல்ல..!
பாக்கியம் வரும் வரைக்கும்
பால் நிலவைப் பார்த்துக்கடா..!
ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...''


- ஜெயந்தி. கலவை கிராமம்.

இவர்களுக்கு இயற்கைதான் செல்வம். ஏழ்மைதான் உடன்பிறப்பு... ஆனாலும் அத்தாயின் நம்பிக்கை தளரவில்லை... தன் குழந்தைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்... இதற்கு நிகரான படைப்பு உண்டா...
(இதை நகரத்தில் உள்ள, படித்த பெண்கள் செய்வார்களா..?செய்திருக்கிறார்களா..?)