Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Monday, January 11, 2021

பழமையான கார்களின் கண்காட்சி சென்னையில் | vintage car exibition in chenna...



இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள AVM ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 10.1.2021 அன்று நடைபெற்ற பழைய கார்களின், பழங்காலக் கார்களின் கண்காட்சியை காண இருக்கிறோம்...

தொடக்க கால பென்ஸ் கார், தொடக்க கால ரோல்ஸ் ராய்ஸ், மோரிஸ், டார்ஜ், பிளைமவுத், இம்பாலா, ஜாகுவார், அம்பாசிடர் என மாபெரும் பழைய காலத்து கார்கள், பழமை மாறாது, புதுப்பித்து இன்றும் இயங்கும் திறனுடன் வைத்திருக்கிறார்கள்.

அந்த கார் கண்காட்சியைப் பற்றிய காட்சித்தொகுப்பை உங்கள் அபிமான வாலு டிவி உங்களுக்காக தொகுத்துத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

சென்னைவாசிகளில் சிலருக்கு மட்டும் கிடைத்த அந்த நேரடி அனுபவத்தை, உலகெங்கும் உள்ள பழங்காலக் கார் ரசிகர்களுக்கு வாலு டிவி இந்த காணொலித் தொகுப்பை வழங்குகிறது...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv  #chennai_vintage_car_exibition_2021

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:     https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu



Saturday, January 09, 2021

சென்னை புத்தகக்கண்காட்சி 2021 | chennai book fair 2021| சென்னை வாசகர்வட்...



இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை வாசகர் வட்ட பொங்கல் சிறப்பு புத்தகக் கண்காட்சியை காண இருக்கிறோம்...

அந்த புத்தகக் கண்காட்சியைப் பற்றிய காட்சித்தொகுப்பை உங்கள் அபிமான வாலு டிவி உங்களுக்காக தொகுத்துத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

புத்தகங்களை (சு)வாசிப்பும். புத்துணர்ச்சி பெறுவோம். அறிவுலகின் புதிய வாசல்களைத் திறப்போம்...

உங்கள் அபிமான

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv  #chennai_book_fair_2021

Tuesday, December 01, 2020

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு யாருக்கு | global teacher prize in tamil | ...



உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு இருப்பது உங்களுக்கு தெரியுமா? 2020-க்கான டாப்டென் பரிசுப் பட்டியலில் இந்திய ஆசிரியர் ஒருவரும் இடம் பிடித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மொத்த பரிசுத்தொகை ரூ. 7 கோடியே 39 லட்சம்... இந்த விருதை உருவாக்கியவர் ஓர் இந்தியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இந்த விருது வழங்கும் விழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம்...

இந்த வீடியோவைப் பாருங்க இந்த பரிசு குறித்த முழுத் தகவல்களும் எடுத்து கொடுத்திருக்கிறோம்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

our sincere Special Thanks

sunny varkey family,
varkey foundation,
Global Teacher Prize committee
https://www.globalteacherprize.org/

#vaalu_tv #வாலு_டிவி #GTP_2020 #நாட்டு_நடப்பு, #global_teacher_prize_2020 #Ranjithsingh_disale #Ranjitsinh_Disale

Monday, December 20, 2010

சென்சுரியனில் 50-வது செஞ்சுரி அடித்து உலக சாதனை படைத்தார் சச்சின்..!


செஞ்சுரியன்: சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை நேற்று (19.12.2010) சச்சின் தெண்டுல்கர் படைத்தார்.

தென் ஆப்ரிக்காவிலுள்ள செஞ்சுரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை சச்சின் படைத்தார்.

(இந்த சென்சுரியன் மைதானத்தில் அதன் பெயருக்கேற்றாற் போல செஞ்சுரி அடித்து செஞ்சுரியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் நமது சச்சின்...)

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் பந்து வீச்சில் ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 50வது சதத்தை அடித்து வரலாறு படைத்தார். (197 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்து 100 ரன்களை எட்டினார் சச்சின்...)

தொடரும் சச்சினின் சாதனை பயணம்...

1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்: 

@ டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.

@ டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.

@ டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.

@ இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

@ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்களும் அடித்து, உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்

50 சதங்கள் கடந்து வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:

முதல் சதம் - இங்கிலாந்து - மான்செஸ்டர் - 1990
10வது சதம் - இங்கிலாந்து - நாட்டிங்காம் - 1996
20வது சதம் - நியூசிலாந்து - மொகாலி - 1999
30வது சதம் - இங்கிலாந்து - லீட்ஸ் - 2002
40வது சதம் - ஆஸ்திரேலியா - நாக்பூர் - 2008
50வது சதம் - தென் ஆப்ரிக்கா - செஞ்சுரியன் - 2010

ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக அதிக சதம்

தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7 சதங்கள் அடித்துள்ளார். 

சாதனையில் அதிசய ஒற்றுமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி - தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த இரண்டு சாதனைகளுமே தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் பந்து வீச்சில் நிகழ்த்தியது என்பது கூடுதல் சிறப்பம்சம்...


சச்சினுடைய தந்தையின் பிறந்தநாளான நேற்று, சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தி, இந்த சாதனை சதத்தை மறைந்த அவரது தந்தைக்கு அர்பணித்துள்ளார்.

சர்வதேச ஒரு தினப் போட்டியில் இன்னும் 4 சதங்களை சச்சின் அடித்தால்... அதிலும் 50 சதம் கண்ட வீரர் என்ற பெருமை மட்டுமின்றி... ஒருதின மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 முறை 100 ரன்களைக் கடந்த உலகின் முதல் (மற்றும் கடைசி) வீரர் என்ற பெருமையைப் பெறுவார்... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

அந்த சாதனை மனிதருக்கு இந்த ரசிகனின் அன்பு வாழ்த்துகள்... தொடருட்டும் உமது சாதனைப் பயணம்...! 

Wednesday, November 24, 2010

கரூரில் காவல் துறையினர் கற்பழித்ததால் இலங்கை தமிழ்ப் பெண் தற்கொலை: 8 மாதங்களுக்குப் பிறகு சிபிஜ வழக்குப் பதிவு

சென்னை, நவ. 24: அண்மையில் கோவையில் பள்ளிச் சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த ஓரு காமுகனுக்கு சைலேந்திர பாபுவின் தலைமையிலான காவல் துறை என்கவுண்டர் தண்டனை கொடுத்து, மக்களிடம் பாராட்டு பெற்றது.

ஆனால் கரூரில் உள்ள காவல் துறையினர் இந்தியாவின் மானமே பறிபோகும் அளவிற்கு மனித சமுதாயமே மன்னிக்கமுடியாத கீழ்த்தரமான செயலை செய்துள்ளனர். அந்த கொடூரச் சம்பவத்தின் பிளாஷ் பேக்...

கரூர் மாவட்டம், ராயனூரில் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பத்மாவதி (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செந்து கொள்ள முயன்றார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மூன்று வார போரட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையிலேயே கடந்த 28.03.10 அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த பத்மாவதியின் கணவரான குமார் என்பவரை, கரூர் காவல்துறையினர் ஒரு கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் இந்த நிலையில் குமார் உங்களை பார்க்க விரும்பியதாக பத்மாவதியிடம் கூறி, அவரையும் அவரது தாயையும் காவல் துறையின் வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளனர்.

முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவல்துறையினருடன் காவல் நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவ்விருவரையும் காவல் நிலையத்திற்குச் செல்லாது தனியார் வீடொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளன்ர், பத்மாவதியின் தாயாரை வெளியே இருக்க வைத்து விட்டு, பத்மாவதியை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பத்மாவதியின் தாயார் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். பத்மாவதியை அவர் பார்த்த போது அலங்கோலமான நிலையில், உடல் நடுங்கியபடி, கசங்கிய காகிதம் போல் கிடந்திருக்கிறார். அவர் தன்னை மூன்று காவலர்கள் கற்பழித்து விட்டதாக தாயாரிடம் கதறியபடி கூறியிருக்கிறார். அழுது கொண்டிருந்த இருவரேயும் அதட்டி, இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டால் பத்மாவதியின் கணவரைச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். பின்பு இருவரையும் அதே வாகனத்தில் ஏற்றி முகாமிற்கே திரும்ப கொண்டு வந்து விட்டு விட்டனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய பத்மாவதி அவமானம் தாங்காமல் தனக்குத் தானே எண்ணை ஊற்றி தீமூட்டிக் கொண்டுள்ளார். பின்னர் பலத்த தீக்காயங்களுடன் கரூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதி, மூன்று வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்குச் சற்று முன் மனித உரிமைவாதியும்,பெண்ணிலைவாதியுமான ஒருவரிடம் தனது மரண வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அதை அவர் தனது வீடியோ மொபைலில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த வாக்கு மூலத்தில் முக்கிய விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண்ணிலைவாதி அதன் சிறு பகுதியை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை காட்டுவதாகக் கூறி தன்னையும் தனது தாயாரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் எனினும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் தனியான கம்பவுண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை காவலர்கள்  கற்பழித்தார்கள் என்றும், கடைசி வரை தனது கணவரைக் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தபோது ‘இந்தப் பெண் வயிற்றுவலிகாரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக’ தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவர் இறந்த அன்றே அவசர அவசரமாக பத்மாவதியின் சடலத்தை காவல் துறையினர் தகனம் செய்துள்ளனர். இதற்காக FIR  எனப்படும் முதல் தகவல் அறிக்கையும், வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. கற்பழிப்பு செய்தோர் கைது செய்யப்படவுமில்லை.

இது குறித்து இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை அப்போதே வெளியிட்டனர். ஆனால் பலனில்லை... பிளாஷ் பேக் முடிந்தது.

இனி விஷயத்திற்கு வருவோம்... இந்த விவகாரம் தற்போது உயர் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 


இனியேனும் காமவெறி பிடித்த அந்த காவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களா..? ஒரு சிறுமியை கற்பழித்தவனை என்கவுண்டர் செய்த காவல் துறையினர், இந்த கறுப்பு ஆடுகளை இனங்கண்டு என்கவுண்டர் செய்யுமா..? தமிழக முதல்வரின் பொறுப்பில் இருக்கும் இந்த துறையில் இனியேனும் இது போன்ற சம்பவங்கள்  நடைபெறாமலிருக்குமா...


வீடிழந்து, நாடிழந்து நம்மையே சரணம் என்று நாடி வந்த நம் உடன் பிறவா தமிழனத்தாரை, தரங்கெட்ட நாய்கள் சூறையாடுவது தகுமோ... அந்த கேடுகெட்ட மூன்று நாய்களும் செய்த இந்த இழி செயல், அவர்கள் அவர்களது தாயை, தங்கையை, அக்காவையே இப்படி அழித்தற்குச் சமமாகும்...


நெஞ்சு பொறுக்கவில்லை தோழர்களே... இந்த நாய்களை இனியேனும் நம்மண்ணில் விட்டு வைத்தால் தமிழனம் தலை நிமிராது... நிமிரவே நிமிராது...


வாழ்க தமிழக காவல் துறை... வளர்க தமிழ் சமுதாயம்... அடபோங்கடாங்க... நீங்களும் உங்க சமுதாயமும்...!

(இதன் ஆங்கில மூலச் செந்திக்கு:  http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-moved-for-probe-into-womans-rape/articleshow/6978470.cms)

Friday, June 25, 2010

இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு...


ஆளும் காங்கிரஸ் அரசின் தற்போதைய மகத்தான சாதனை மீண்டும் ஒரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு..! இதனால் இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்ரவை கூட்டம், இன்று தில்லியில் கூடி விவாதித்தது. ‌ விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் , பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3. 73 அதிகரிக்கிறது. இத்தகவலை பெட்ரோலிய துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார். அது மட்டுமின்றி இனி பெட்ரோலியப் பொருற்களின் நிறுவனங்களே அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையினை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் முடிவு செய்துள்ளது.

இந்த விலை உயர்வால் சாமன்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார்.  மண்ணெண்ணெய்க்கான மானியம் தொடரும் என்றார். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3% பேர் மட்டுமே பணக்காரர்கள் ஆவர்.. மீதமுள்ள  97 சதவீத மக்களனைவரும் நடுத்தர, மற்றும் ஏழை வர்க்கத்தினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவரே ஆவர்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், விலைவாசி விண்ணை உடைத்துக் கொண்டு செல்லப் போகிறது. ஏற்கனவே தற்போது விலைவாசி விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

ஒரு கிலோ அரிசியில் விலை 30 ரூபாய்... சர்க்கரை விலை 40 ரூபாய்... இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போதே உச்சத்தில் இருக்க, இந்த விலையேற்றம் மேலும் அதனை உச்சாணிக்குத்தான் கொண்டு செல்லும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணை உட்பட அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தான் போகின்றன. இதனை சாக்காக வைத்துக் கொண்டு பதுக்கல்காரர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத்தான் போகின்றனர்.

இவ்விலை உயர்வால் அம்பானியோ, அமிதாப்போ, சோனியாவோ, மத்திய அமைச்சர்களோ, அரசிழல்வாதிகளோ பாதிக்கப் படப்போவதில்லை. கோடி வீட்டு குப்பனும், குடிசை வீட்டு சுப்பனும்.. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும்தான்.


இனி உணவகங்கள், விடுதிகள் எவற்றிலும் சென்று நிம்மதியாய் சாப்பிடக் கூட முடியாது... நம் தேசம் முன்னேறுகிறதோ இல்லையோ... விலைவாசியில் ஏறுகிறதய்யா..?

நம் மக்கள் என்று விழிக்கிறார்களோ... அன்றுதான் அவர்களுக்கு விடிவுகாலமே..! வாழ்க சனநாயகம்...!

Wednesday, March 31, 2010

சென்னை மாநகர பேருந்துச் சீட்டில் செம்மொழித் தமிழ் மாநாடு விளம்பரம்..!


இன்று மதியம் எனது அலுவலகத்திறகு வருவதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினேன். பேருந்துச் சீட்டு வாங்கினேன்... அச்சீட்டில் எப்போதும் போல் இல்லமால் இன்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவே, உற்றுப் பார்க்கவே, அய்யன் திருவள்ளுவர் உருவம் காணப்பட்டது.

அட என ஆச்சர்யப்பட்டு உற்றுப் பார்த்தேன்... கோவையில், வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விளம்பரம் என கண்டு கொண்டேன்...

மிகவும் அகமகிழ்ந்து போனேன்... இது ஒரு நல்ல யுக்தி. செம்மொழித் தமிழ் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இது உதவும்,  ரயில் பயணச்சீட்டில் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு, வருவாய் ஈட்டுவதைப் போல்... பிற்காலத்தில் பேருந்துச் சீட்டுகளிலும் கொண்டு வர இது அடித்தளமாகவும் உதவும்...

அது மட்டுமின்றி, போலியோ தினம், விழிப்புணர்வு தினம் போன்றவற்றை பேருந்துச் சீட்டில் வெளியிடலாம்... பேருந்துச் சீட்டில் அய்யன் வள்ளுவனைக் காணும் அழகே அழகு...

Thursday, March 11, 2010

அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் சிறப்பு நாணயம்..!

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு வெளியிட்ட அண்ணா உருவம் பொறித்த சிறப்பு வெள்ளி நாணயம்

அன்று முதல் நேற்று வரை கிடைக்காமல் இருந்த அந்நாணயம், தற்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

ஐந்து ரூபாய் நாணயத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அவருடைய கையெழுத்து அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

நானறிந்த வரை இந்திய ரூபாய் நோட்டுகளில் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கண்டிருக்கிறேன். சுதந்திர இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் இடம்பெற்றதில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்ட நான், இந்திய நாணயங்களில் தமிழ் இடம்பெறவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய நீண்ட நாளைய வருத்தத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் போக்கி விட்டார். அதுவும் நாணய வடிவில்..!

இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள அண்ணா நாணயம்

நாணயத்தின் மறுபுறம் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வுருவத்தில் அண்ணா சிரித்தபடியே வலது புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உருவத்தின் கீழே அவரது கையெழுத்து தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகளில் ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த ஆண்டினையும், அவர் மறைந்த ஆண்டினையும் குறிப்பிடும் வகையில் 1909-1969 என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் ஒரு குறை இருப்பதாகக் கருதுகிறேன். நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும், அந்த நாணயத்தில் குறிப்பிடபட்டிருக்கும். இந்நாணயம் 2009ல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்நாணயத்தில் குறிப்பிடப் படவேயில்லை.

செப்டம்பர் 15-ம் தேதி இநாநணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் மறு நாள் எந்த ஒரு பத்திரிகையிலும் இந்நாணயம் பற்றிய செய்தியோ படங்களோ இடம்பெறவில்லை. அதைத் தேடித் தேடி ஏமாந்து போனத்தான் மிச்சம்.

சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.

அவர்கள் என்னிடம் ‘வெளியீட்டிற்காக வெள்ளியில் அச்சடிக்கப்பட்ட நாணயம் அது. சில நாணயங்கள் மட்டுமே அச்சடித்திருப்பார்கள், வெளிவர பல நாட்களாகும் என்றனர். அதற்கு இத்தனை மாதங்களாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்நாணயந்தை சில நாட்களுக்கு முன்பு, தாம்பரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மன்றாடிப் பெற்றேன். அங்கே இந்த நாணயம் இல்லை என்று விட்டனர். அங்கு பணியாளராக இருக்கும் அம்மையார் ஒருவர், அவருக்கு கொடுத்திருந்த இந்நாணயத்தை, (இது வெள்ளி நாணயமல்ல) எனக்கு கொடுத்தார். மிகவும் மகிழ்ந்து போனேன். பெயர் தெரியா அந்த அம்மையாருக்கு எனது நன்றிகள்.

காசாளரிடம் கேட்டதற்கு, இரண்டு நாணயங்கள், நான்கு நாணயங்கள் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மீதமுள்ள 496 நாணயங்களை எண்ண வேண்டுமே. ஆதலால் அப்படித் தரமாட்டோம், வேண்டுமெனில் மொத்தமாக (ரூ 5,000) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்படியென்றால் மட்டுமே நாணயம் கிடைக்கும் என்றார். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

என் போன்ற (வசதியற்ற) நாணயச் சேகரிப்பாளர்களுக்கு வங்கிகளே இப்படிச் செய்தால், நாணயங்களை சேகரிக்க முடியுமா..? பணம் படைத்தவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சேகரிப்பில் ஈடுபட வேண்டுமா..? வங்கிகள் மாற வேண்டும்..? மாறுமா..?

பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

 இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Wednesday, February 24, 2010

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஓரு தின கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!

தற்போது குவாலியரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒரு தினப் போட்டியின், ஒவ்வொரு பந்து வீச்சிற்குமான (Ball by ball Tamil Commentary) தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276166/276168_Tamil_mini.html

இந்திய நேரப்படி 2.30 மணியிலிருந்து.... உங்களுக்காக...
----------------------

இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும்  ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..!

ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!

இணையதள வரலாற்றில் கிரிக்கெட்  வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.

இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமெனில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com

இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வரணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளலாம்.


(இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..!)

Tuesday, February 16, 2010

இந்திய அணி விளையாடும் கிரிக்கெட்போட்டிகளின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!


இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள், ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..!

ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!

இணையதள வரலாற்றில் கிரிக்கெட்  வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.

இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமெனில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com

இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வரணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளலாம்.

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276166/276166_Tamil_mini.html


(இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..!)

Friday, January 22, 2010

பிறப்பு சான்றிதழ் கேட்ட தேதியில் இறப்பு சான்றிதழ்..! - எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலத்தில் இப்படி ஒரு கூத்து..!

திருவனந்தபுரம், ஜன .22: திருவனந்தபுரம் மாநாகராட்சியில், கடந்த ஜனவரி 18-ம் தேதி, முகம்முது (13 வயது) என்ற சிறுவனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அவனது தந்தையார் விண்ணப்பித்திருந்தார்.



இரு நாட்களுக்கு முன்பு, அச்சிறுவன் பிறந்த தேதியான டிசம்பர் 1, 1997 தேதியிட்டு,  ஒரு சான்றிதழ் வந்தது. அதை வாங்கிப் பார்த்த, அச்சிறுவனின் தந்தை அதிர்ச்சியில் உறைந்து விட்டார். காரணம், அவன் பிறந்த அதே தேதியில் அச்சிறுவன் இறந்து போனதாகவும், அவன் பிறந்த மருத்துவமனையிலேயே அவன் இறந்து போனதாகவும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப் பட்டிருந்தது.

பள்ளியில் சேர்ப்பதற்காக சான்றிதழ் கேட்டால், அவன் பாடையில் போய்விட்டான் என்று அரசியந்திரம் அதிகார பூர்வமாக சான்று வழங்கியிருக்கிறது..! அட என்ட கேரளமே..! உனக்கேன் இந்த கேவலமே..!

தற்போது இது குறித்து மாநாகராட்சியிடம் புகார் கூறியிருக்கிறார் அச்சிறுவனின் தந்தை. இது குறித்து மாநாகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு கிளர்க் பதவியுலுள்ளோர் செய்த தவறு என்றபடி நழுவி விட்டனர்.

பின்னே முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கே சம்மன் அனிப்பிய நாடல்லவா இது... இந்தியாவின் முதல் குடிமகனுக்கே அப்படி நடந்தபோது... கடைக்கோடி குடிமகனுக்கு நடவாமலா போய்விடும்..!

அதுவும் இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமான கேரளத்தில், அதுவும் அதன் தலைநகரத்திலே இக்கூத்து என்றால்... கிராமங்களெல்லாம் எம்மாத்திரம்..!

வாழ்க பாரதம்... வளர்க அரசு ஊழியர்கள்..! ஒழிக பாவப்பட்ட இந்திய மக்கள்..!

Friday, November 20, 2009

சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 30,000 ரன்களைக் கடந்தார்..!



சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இன்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் புதியதொரு சாதனையைப் படைத்தார். டெஸ்ட், ஒருதின மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டி என மூன்று போட்டிகளிலும்  சேர்த்து 30,000 ரன்களைக் கடந்தார்.

அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் அவரைப்பற்றி…

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.

பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…

சச்சினின் சாதனைகள்

சர்வதேச அளவில்…

கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டி சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஒருதினப் போட்டி  சாதனைகள்

அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  இந்தியா ஆடிய  இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…

ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்  (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.

1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த  முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின்  தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.

இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்…  இந்திய அணிக்கு  திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை.

இவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார், வரும் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

Thursday, November 19, 2009

உலகில் லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84வது இடம்..!

உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் சோமாலியா முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல் 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த அளவு புள்ளிகளைப் பெறும். அதிக புள்ளிகளைப் பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக
லஞ்சம் தாண்டவமாடும் நாடாக சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான், 5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8 புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.

நன்றி: Times of India and Dinakaran

Monday, November 16, 2009

ஹேமந்த் கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை..? இந்தியர்களால் கொல்லப்பட்டார்..?! - திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

ஹேமந்த் கார்க்கரே… பெயரைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறதா..? இந்தியாவின் மானம் காக்க, வீர மரணம் எய்திய மாவீரர். இவர் யார் என்று இன்னும் தெரியவில்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது, அவர்களை கொன்று குவித்து விட்டு, அங்குள்ளோரை காப்பாற்றும் போது தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் இந்த  ஹேமந்த் கார்க்கரே. அதுமட்டுமின்றி பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரராக இருந்து அந்த தாக்குதலை முறியடிக்க முன்னின்று நடத்திய வீரர்.

புல்லட் புரூப் எனப்படுகின்ற குண்டு துளைக்காத சட்டை அணிந்திருந்த கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இல்லை, அவர் உண்மையில் இந்தியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் – சிறு பிளாஷ் பேக்


தேதி : 26 செப்டம்பர் 2008. இடம் : மும்பை, தாஜ் (ஐந்து நட்சத்திர) ஹோட்டல்

பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக வந்த தீவிரவாதிகள் வழியெங்கும் துப்பாக்கி சூடு நடத்தியபடியே, தாஜ் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர். அங்குள்ளோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இத்தா‌க்குத‌லையடு‌த்து அ‌‌ங்கு பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அ‌திர‌ப்ப‌டை தாஜ் ஹோட்டலுக்கு ‌விரை‌ந்தது. அங்கு பய‌ங்கரவா‌திக‌ள் ‌பிடி‌த்து வை‌த்‌திரு‌ந்த 7 அய‌ல்நாட்டினர் உள்பட 15 பேரை ‌மீ‌ட்க அ‌திர‌டி‌ப்படை முற்பட்டது.

அப்போது பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம், அ‌திரடி‌ப்படை‌யினரு‌க்கு‌ம் இடையே ந‌ட‌ந்த து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌ல் பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். கார்க்கரே புல்லட் புரூப் சட்டை அணிந்‌திருந்தும், அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.

இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவா‌திகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அ‌ப்போது நட‌ந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவ‌ல்துறை அதிகாரியும் பய‌ங்கரவா‌திக‌ளுட‌ன் நடந்த சண்டையில் பலியானார்.

இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அ‌திரடி‌ப்படை‌யின‌ர் நட‌‌த்‌திய ப‌தி‌ல் தா‌க்குத‌லி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி உயிரோடு பிடிக்கப்பட்டான்.

இதுதான் அன்று நடைபெற்ற சம்பவங்கள்…

தற்போது விடயத்திற்கு வருகிறேன்...

மாவீரன் ஹேமந்த் கார்க்கரே பயன்படுத்திய புல்லட் ப்ரூப் ஜாக்கெட் பயன்படுத்தத் தகுதியற்றது என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன் தரம் பற்றி தெரிந்திருந்தும்… அது பயன் படுத்தத் தகுதியற்றது எனத் தெரிந்திருந்தும் நமது ஈனமிகு அதிகாரிகள் அதை அரசின் செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஊழல் செய்ததின் விளைவு… பல மாவீரர்களின் உயிர்களை அது குடித்து விட்டது.

இது குறித்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சந்தோஷ் டாண்ட்கர் (Santhosh Dountkar) மேற்சொன்ன திடுக்கிடும் தகவலகளை வெளியிட்டுள்ளார்.

இவரும், இவரது வழக்கறிஞரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒய்.பி.சிங் ஆகிய மூவரும் சேர்ந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் என்பது குண்டு, கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கினாலும், அது நம் உடலைத் தாக்காது. அந்த ஆடை உலோக இழைகளைக் கொண்டும், பைபர் இழைகக் கொண்டும் தயாரிக்கப்படுவது ஆகும். (படம் பார்க்க)



இதை அணிந்து கொண்டால் குண்டு நம் உடலைத் தாக்காதாவறு தற்காத்துக் கொள்ளலாம். வெடிகுண்டு நிபுணர்களும் இதைப் பயன்படுத்துவர். இது கழுத்திலிருந்து அடி வயிறுவரை பாதுகாக்கும் கவசம் போன்று இருக்கும். (இதிகாசத்தில் வரும் கர்ணனின் கவச குண்டலம் போன்று…)

அப்படிப்பட்ட கவசத்தை அணிந்திருந்தும், குண்டு துளைத்து கார்க்கரே இறந்தது ஏன்?. இதுபற்றி அறிந்து கொள்ள, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘தாக்குதலின் போது அணியப்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டவை, யாரிடம்,  எப்போது, எவ்வளவு கொடுத்து வாங்கப்பட்டது, என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்று நம்மவர்கள், நியாயமான கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளனர்.

இது, கடந்த 2008 டிசம்பர் மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்த்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்க்கான பதில் இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் கிடைத்தது. அதுவும் எப்படி..? ‘அதற்க்கான கோப்புகள் காணவில்லை என்பதால்… நீங்கள் கேட்ட தகவல்களை எங்களால் தர இயலவில்லை’ என்று..!?

அதாவது காவல் துறையின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அலுவலகத்திலேயே கோப்புகளைக் காணோமாம்… (நாம் ஏதேனும் காணவில்லை எனில் காவல் துறையை நாடுவோம்... அங்கேயே கோப்புகளைக் காணோமாம்... அடங்கப்பா... தலை சுத்துடாங்கப்பா...) இருந்தாலும் விடாது போராடிய நம்மவர்கள்.. பரவாயில்ல.. இருக்கும் வரையிலான தகவல்களைக் கொடுங்கள் என மீண்டும் முறையிட.. ‘ அதன் பிறகு, அவர்கள் பட்டும் படாத தகவல்களைக் கொண்ட கோப்புகளை அளித்தனர்.

அதனை ஆய்வு செய்த போதே…இதில் பலவிதமான ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதை நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அவர்கள் அளித்த விவரத்தின்படி நம்மவர்கள்  கண்டுபிடித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: (இத்தகவல்களை எல்லாம் நம்மவர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை ஆகும்)

1)    ஐம்பத்தி ஐந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டுமென்று மும்பை காவல் துறை ஆணையர் அலுவலகம், 2001 டிசம்பர் 6 அன்று டெண்டர் கோருகிறது.

2)    பூனேவிலிருக்கும் என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த  புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிப்பதில் எந்த ஒரு அனுபவமே இல்லாத நிறுவனமாக இருந்தும், தனது விலை விவர விண்ணப்பத்தை (கொட்டேஷனை) 2002, ஜனவரி 3-ம் தேதி சமர்ப்பிக்கிறது.

3)    2002, மார்ச் 30-ம் தேதி இந்த விலை விவர விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை காவல்துறை ஆணையரக அலுவகம் கடிதம் வாயிலாக தெரிவிக்கிறது.

4)    இதே தேதியில், என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் நிறுவனம் இந்த புல்லட் ப்ரூப் ஆடைகளை, காவல் துறை ஆணையரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக கடிதம் அனுப்பி இருக்கிறது.

5)   ஆனால், தணிக்கைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஜூன் 4, 2002 அன்றுதான் இந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதையடுத்த ஒரு மாதத்திலேயே 55 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளுக்குப் பதிலாக 110 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

6)    இதனுடைய மொத்த கொள்முதல் விலை ரூபாய் 24.71 லட்சம் ஆகும். ஆனால் 2004-ல்தான் இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வந்து சேர்ந்துள்ளன. இதன் பிறகே காசோலை மூலம் அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

7)    வந்து சேர்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை சோதனையிட்டதில், அவைகள் தரமற்றவை என்றும், அவைகளைப் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகும் என்றும் தெரிய வந்தது. ஆதலால் அந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளனைத்தும் அதே நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டன. பணமும் திரும்பப் பெறப்பட்டது. இது நடந்தது 2004. செப்டம்பர் 2.

8)    தரமற்ற பொருட்களை கொடுத்தற்காகவும், காலம் தாழ்த்தி கொடுத்ததற்காகவும் அந்த நிறுவனத்தின் மேல் அபாராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையை அந்த காவல் துறை ஆணையரக அலுவலகம் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏனோ அது எடுக்கப்படவில்லை.

9)    2004, டிசம்பரில் அதே நிறிவனம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளில் இருந்த குறைகளை சரிசெய்து விட்டதாகக் கூறி, அதே தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை ஒப்படைத்துள்ளது.

10)    அது முறையாக சரிசெய்யப்பட்டிருக்கிறதா..? பயன்படுத்த முடியுமா..? தரமானதாக இருக்கிறதா..? என்று யாரும் அதை சோதனை செய்யவில்லை. (சோதனை செய்ததற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை…) அப்படியே வாங்கி வைத்துக் கொண்டனர். அந்நிறுவனமோ கொடுத்த பணத்தை 2005, ஜூலை 14 அன்று வாங்கிக் கொண்டது.

இந்த தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத்தான் அன்று பல உயிர்களைக் காப்பற்றுவதற்க்காக ஹேமந்த் கார்க்ரே உள்ளிட்ட பல மாவீரர்கள் அணிந்து கொண்டு போரிட்டனர். அந்த வீரப்போராட்டத்தில் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகி அவர்கள் வீரமரணம் எய்தினர்.



(தாக்குதலுக்கு முன்பாக கார்க்கரே புல்லட் ப்ரூப் உடையை அணிந்து கொண்டிந்த காட்சி...)

இந்திய ராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரிக்கும் அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( Defence Research & Development Organisation: DRDO)) வின் தர அளவீட்டின்படி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் என்பது கழுத்திலிருந்து, அடிவயிறு வரை கவசமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாங்கிய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளோ பனியன் போன்ற அமைப்பில் இருந்தது.. (பார்க்க படம்…)

இந்த ஜாக்கெட்டுகள் தரமானவைகளாக இருந்திருந்தால்... அன்று அத்துனை மாவீரர்களின் உயிர்களும் பறிபோயிருக்குமா..? அவர்களுடைய திறமைகள் மண்ணோடு மண்ணாகியிருக்குமா..?

இப்போது சொல்லுங்கள்..? ஹேமந்த் கார்க்கரே போன்ற மாவீரர்களை தீவிரவாதிகள் கொன்றார்களா..? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த இந்தியர்கள் கொன்றார்களா..? வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும்.. இந்த ஈனப்பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…

இந்த வழக்கின் மூலம் நம்மவர்கள் … இது குறித்து தனியாக விசாரணைக் கமிஷன் அமைத்து… உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என மனு செய்திருக்கிறார்கள்.

ஏனோ… தானோ என்று கிடைத்த கோப்பிலேயே இவ்வளவு தகவல்கள்  என்றால், சரியான கோப்புகள் கிடைத்தால்..? இந்த நாய்களின்.. இல்லை… இல்லை… நாய்கள் நன்றி உள்ளவை… இந்த ஈனப் பன்றிகளின் ஈனச்செயல்கள் வெளிக்கொண்டு வந்துவிடமுடியாதா என்ன..?

இது தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்… இதற்குண்டானவர்களை கண்டு பிடித்து இதே புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை அணியவைத்து அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்…

இது போன்ற ஈனப் பன்றிகள் இருக்கும் வரை எம் தேசம் நிம்மதியாக வாழுமா..? வாழ்க எம் தேசம்..! வளர்க தேசத் துரோகிகள்..!

(இந்தச் செய்தியை எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு தமிழ் நாளிதழ்களும் வெளியிடவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (13.11.2009) வெளியிட்டுள்ளது. இதன் முழுமையான ஆங்கில மூலத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்…)

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/11/13&PageLabel=10&EntityId=Ar01001&ViewMode=HTML&GZ=T

(எனக்கு அவ்வளவாக ஆங்கிலப் புலமையில்லை, ஆன வரை முயற்சித்திருக்கிறேன்… தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்…)

செய்தி மற்றும் புகைப்பட உதவி: http://timesofindia.indiatimes.com/

Monday, November 02, 2009

வலை முகவரிகள் அனைத்தும் இனி அவரவர் தாய்மொழியிலேயே கிடைக்கும்..!

நாம் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால், இணையத்தில்  (உதாரணத்திற்கு) www.moganan.org என்று முழுவதுமாக ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. இதை மாற்றி இனி அவரவர்களின் தாய்மொழியிலேயே வலைத்தளம் மட்டுமன்றி அவர்களின் வலை முகவரியையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.



 அதன்படி நமது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வலை முகவரிகள் விரைவில் கிடைக்கவிருக்கின்றன. உதாரணத்திற்கு உஉஉ.மோகனன்.தொகு என நாம் தமிழிலேயே வலை முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம். ( இங்கு www-க்கும் org -க்கும் எனக்குத் தெரிந்த உதரணத்தில் எழுதியிருக்கிறேன்... www, com. org, in, net...போன்றவற்றிற்கு தமிழாய்ந்தவர்கள் இனி சுந்தரத் தமிழில், சுதந்திரமாகப் பெயரிடுவார்கள் என நம்புவோமாக... )



இந்த அறிவிப்பை உலகளவில் இணையத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையமான ஐ.சி.ஏ.என்.என் ( ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) அறிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவிலுள்ள சியோல் நகரில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான ராடு பெகுஸ்ட்ரோம் கூறுகையில் '' இந்த முறை நம்பமுடியாததாக  இருந்தாலும், உலகை இணைக்கும் இணையங்களை உலகம் முழுவதும் இணைக்கும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க, முதல் முயற்சியாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இப்படி, உலக மொழிகளில் இணைய முகவரிகளை உருவாக்கிக் கொள்ள வருகிற நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினத்தந்தி மற்றும் http://www.icann.org/

இச்செய்தியின் முழுமையான ஆங்கில மூலத்தைப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... http://www.icann.org/en/announcements/announcement-30oct09-en.htm

Thursday, October 29, 2009

பூரி ஜெகன் நாதர் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்த தேவதாசி முறை ஒழிந்தது

பூரி, அக். 29: ஒரிஸ்ஸாவிலுள்ள  பூரி ஜெகன் நாதர் கோவிலில் கடந்த 800 ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறை அடியோடு ஒழி்ந்தது.

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வரை வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது ‘அதிகார வர்க்கத்தினர்’களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இம்முறைக்கு 1920 முதற்க்கொண்டு இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும் பூரி ஜெகன் நாதர் கோவிலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்ந 1990 களின் தொடக்கத்தில் புதிய தேவதாசிகளைக் கொண்டு வந்து இக்கோவிலில் வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் தேசிய அளவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,  அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு எந்த பெண்ணும் அக்கோவிலில் தேவதாசியாக இருக்க முன்வரவில்லை. ஆதலால் இந்த தேவதாசி முறை அடியோடு இங்கு ஒழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

கோவிலில் நடனமாடுவது, கோவிலை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட 36 விதமான சேவைகளை இந்த தேவதாசிகள் அக்கோவிலில் செயவார்களாம். இம்முறை கடந்த 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் மட்டுமே இறைவனுக்கு பெண்கள் சேவை செய்வது அனுமதிக்கப்படுகிறது என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 07, 2009

ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் படுகொலை: உடல் கண்டுபிடிப்பு

மெல்போர்ன், அக்.7: ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்திய தொழில் அதிபர் பிரதீப் குமார்  (வயது 33) கொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் அவரது உடல் புதன்கிழமை (இன்று) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதீப் குமார் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்துரா நகரத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தொழில் நிமித்தம் காரணமாக சிலரை சந்திப்பதற்காக, மில்துராவிலுள்ள நூலகத்திற்கு செல்வதாக கிளம்பியுள்ளார். அதிலிருந்துதான் அவர் காணவில்லை என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய காரை, மில்துரா நகரத்திற்கு வெளியேயுள்ள ரயில் நிலையம் அருகே நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ, கிரெடிட் கார்டுகளிலிருந்தோ எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கண்டு பிடித்துள்ளனர்
.
இந்த கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிறவெறி காரணமாக ஏற்ப்ட்ட அமளியின் காரணமாக மற்றொரு இந்தியர் கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, September 30, 2009

நியூசிலாந்து அருகே சுனாமி தாக்குதல்... 100 பேர் பலி.... பலர் மாயம்


சமோயா தீவுக்கரையினை சிதறடித்த சுனாமி

பசுபிக் பெருங்கடல் தீவான சமோயாவை சுனாமி அலை  தாக்கியது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சமோயா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாயா சென்றடைந்துள்ளன.

21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாவது சுனாமி தாக்குதல் இதுவாகும்... 


நன்றி: http://www.guardian.co.uk/

Tuesday, September 30, 2008

பேருந்து சீட்டில் எங்கே தமிழ்..?

தமிழக அரசில் அனைத்தும் தமிழ் மொழியால் கையாளப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. அதற்கு உதாரணமாக, நீதிமன்றங்களில் வாதாடுதல், ஆவணங்கள், தீர்ப்புகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டது.

அதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து சீட்டு தூய தமிழில் வழங்கப்பட்டது.

அண்மையில் பேருந்து சீட்டை வழங்குவதற்கு கையடக்க இயந்திரங்களில் பேருந்து சீட்டு அச்சடித்து வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. ''தமிழ்... செந்தமிழ்... செம்மொழித் தமிழ்...'' என்று கூவிய தமிழக அரசு, நவீன பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...

இக்குறை தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்து பேருந்துகளிலும், அவர்கள் வழங்குகின்ற பேருந்து சீட்டுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.


சேலம் - சென்னை மார்க்கம் வழியாக செல்லும் அரசு விரைவுப் பேருந்தில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு



காரணம் கேட்டல்..?, பெங்களூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட்டது... (எவ்வளவு பணம் சுருட்டப்பட்டதோ..?) அதனால்தான் ஆங்கிலத்தில் உள்ளது என பதில் வருகிறது.

இதே பெங்களூர் இருக்கும் கர்நாடகாவில் ஓடும் பேருந்துகளில் வழங்கப்படும் கையடக்க இயந்திரத்தால் வழங்கப்படும் பயணச்சீட்டில் அவர்களது தாய்மொழியான கன்னடம் இருக்கிறது...

இதைப்பார்க்கும்போது யாருக்கு இருக்கிறது மொழிப்பற்று... தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முதற்கொண்டு, தமிழகம் முழுதும் பயணிக்கும் அதிவிரைவு பேருந்துகள் வரை ஆங்கிலத்தில், பேருந்து சீட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பிற நகரங்களில், தனியாரால் நடத்தப்படும் பேருந்துகளில் இதே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் பயணச்சீட்டில் தாய்த்தமிழில் அச்சிடப்பட்டு தரப்படுகிறது...


கடலூர் - பண்ருட்டி மார்க்கம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் தமிழில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு


இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று அவர்களடம் வினவினால்..? கோயமுத்தூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் இதற்கான மென்பொருளை தமிழில் வழங்குகிறார்கள் என்றனர்.

தமிழகத்தில் பயணம் செய்தால் தமிழில் பயணச்சீட்டில்லை... தலைகுனிவு. தமிழ் பட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 70% பேர்... ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை... தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டாம், உரிய மதிப்பை கொடுத்தால் போதும்... அதன் கீழ் ஆங்கிலம் வரட்டும்...

நீதிமன்றத்தில் தமிழ்... மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் பயணச்சீட்டு... ஆகா... தமிழக அரசின் தமிழ்ப்பற்றை நினைத்தால் குமரியில் குன்றென நிற்கும் திருவள்ளுவருக்கே தலைசுற்றும்... அட போங்கய்யா... நீங்களும் ... உங்கள் தமிழ்ப்பற்றும்..?