அமைச்சர் பொன்னுரங்கம் இன்று சட்டசபையில் பேசியது எல்லோரையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.
சட்டசபைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என்றுமே வாய்திறக்காத அவர், இன்றுதான் வாய் திறந்திருக்கிறார். மற்றவர்களை வாய் பிளக்கவும் வைத்து விட்டார்!
"இன்று நாட்டில் எங்கே பார்த்தாலும் சாதிப்பிரச்னைகள், சாதிச் சண்டைகள்தான். பள்ளியில் சேரப்போனாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்தாலும் சரி... சாதிதான் பூதம் போல் குறுக்கே நின்று பயமுறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்துச் சாதிகளையும் ஒழித்து விட்டு, இந்தியன் என்கிற பொதுவான ஓர் இனத்தை நாம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் என்ன சாதி என்று கேட்பதைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..!'' இதுதான் சட்டசபையில் அவர் ஆவேசமாய் பேசியது.
சட்டசபையை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரே அழைத்துப் பாராட்டியது அமைச்சர் பொன்னுரங்கத்தைக் குஷிப்படுத்தியது.
''இலவச வீடுகள் வழங்குறதுல அந்தச் சாதிக்காரனுக்கு, இந்தச் சாதிக்காரனுக்குன்னு ஆயிரம் சிக்கல் இருக்கு. அதை இனிமே நீங்கதான் கவனிக்க போறீங்க...'' என்று முதல்வர் சொல்லவும், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னுரங்கம்.
தனது அலுவலகத்தில் பி.ஏ.வுக்கு சரமாரியாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம்.
''எலேய்... இலவச வூடு தர்றமுல்ல... முதல்ல நம்ம சாதிக்காரனுக்கு முன்னுரிமை குடுத்துடு. அப்புறமா மத்த சாதிக்காரனுக்குப் பார்த்துக்கலாம்!''
''என்ன தலைவா... சட்டசபையில சாதிக்கு எதிரா அவ்வளவு காட்டமா பேசினீங்களே..?''
''அட, யார்ரா இவன் புரியாதவன். அப்படி பேசினதாலதானே வீட்டு மனைகள் ஒதுக்குற அதிகாரமே என்கிட்ட வந்துச்சு. இதுக்குப் பேருதாண்டா அரசியல்! சரி சரி... வேலையைப் பாரு!''
பி.ஏ.வுக்கு தலை சுற்றியது.
****************************
(ஆனந்த விகடன் குழுமத்தில் மாணவ பத்திரிகையாளராக இருந்த போது, நானெழுதிய ஒரு பக்க கதை, 30.09.2001 தேதியிட்ட ஆனந்த விகடனில், 105-ஆம் பக்கத்தில் வெளியானது. இந்த கதை எழுதி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலை இப்போதுள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது என்பதால், இங்கே பதிவிலிடுகிறேன்.
நன்றி: ஆனந்த விகடன்)