Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, December 31, 2009

இனிக்க இனிக்க இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து...



போதுமடா
நண்பா...
போதுமடா...
2009-ல் பட்டதெல்லாம்
போதுமடா..!

வேலையில்லாத் திண்டாட்டம்...
உணவு விலை ராக்கெட் ஓட்டம்...
தங்க விலை தகிடுதத்தம்...
வீணர்களின் விரச ஆட்டம்...
ஏழைகளின் போராட்டம்...

பட்டதெல்லாம்
போதுமடா..
அனைத்தும்
பட்டென்று போகுமடா...
இழி நிறைந்த துன்பங்களெல்லாம்
இன்றோடு போகுமடா...
இதுவும் கடந்து போகுமடா..!

ஆங்கிலப் புத்தாண்டு
பிறக்குதடா..!
ஆனந்தம் பொங்குதடா..!
அனைவருக்கும்
ஏற்றம் தரும் வித்தடா..! ...
வாழ்வில் பெரும் மாற்றம் தரும்
இண்டாயிரத்தி பத்தடா..!
இது இவ்வருடத்தின் சொத்தடா..!

நல்லதை நினைப்போமடா...
நல்லதை செய்குவோமடா...
நானிலத்தை காப்போமடா...
நாடு சிறக்க வாழ்வோமடா...

வருக வருக புத்தாண்டே...
வளம் பெருக வருக...
நலம் பெருக வருக...
எழிலாய் நீ வருக..!
முத்தே நீ வருக... - இரண்டாயிரத்தி
பத்தே நீ வருக.. வருக..!

எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன். 

Friday, September 19, 2008

காதல் பிரிவு

நன்னாளிது பொன்னாளிது என்னவனைக் கண்டநாளிது
 கண்ணாளனைக் கண்டு களிப்புற்று, கலந்திட்ட நாளிது
சீறி வரும் காளை போல என்னவனின் நடை கண்டு
 சிலிர்த்துப் போனேன்... அவன் கண்ணில் காந்தமுண்டு
ம் என்றதும் அவனருகில் சென்றேன்... அவன் தோளில்
 சாய்ந்தேன்... அவனிதழில் என்னிதழ் தேன்.. தேன்.. தேன்..!

மோகனப் புன்னகையாளைக் கண்டேனடா... கசிந்'தேனடா'
 ஆகயத் தாமரை முகம்... சந்தன முல்லையவள் முகம்
கன்னியவள் கரம் பிடித்து காளை நான் நடக்கையிலே
 காதல் பிறக்க, காமம் வெடிக்க... - அழைத்தாள் அவளன்னை..!
னயன விழியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள... பாவையவள்
 பயந்நு நடுங்கும் மானானாள்... அவள் கொவ்வையிதழில்
ன்றும் நினைக்கும்படி முத்தமிட்டு, அவள் நெற்றியிலே
 பொட்டிட்டு அனுப்பி வைத்தேன்... போனாளென் தே'வதை..!'

(முதற்ப் பாடல் காதலி, தனது காதலனை சந்தித்தது பற்றி கூறுகிறாள், இரண்டாவது பாடலில் காதலன், தன் காதலியை சந்தித்தது பற்றி கூறுகிறான்...)

Tuesday, August 19, 2008

என்றன் தாய் - மரபுக் கவிதை முயற்சி


எனைப் படைத்த பிரம்மாக்கள்

வெண்பா

அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளும்நீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!

செய்யுள்

கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!


{இது எனது நூறாவது பதிவு ஆகும். ஆகவே.. எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபுக் கவிதை(யாக எழுத முயற்சித்துள்ளேன்... தமிழாய்ந்த அறிஞர்கள்.. இதில் பிழையிருப்பின், தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...) முயற்சி சமர்ப்பணம்.}

Thursday, August 14, 2008

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!



வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
ஆசுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
தமுமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாதமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேதமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் - தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீரங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மனமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே...
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஒன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

ஊறு விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபத்தியிரண்டாவது சுதந்திர தினத்திலேனும் வீறு கொண்டெழுவோம் வாரீர்!


-மோகனன். ஆகஸ்டு 15, 2008
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Wednesday, August 13, 2008

தங்கம் வென்ற சிங்கத்திற்கு வாழ்த்துக் கவிதை..!



இந்தியாவின் இதயத்தை
இன்பக்கடலில் ஆழ்த்திய
இனிய தங்கமே..!

நூற்றிப்பத்து கோடி மக்களின்
தங்கம் வெல்லும் ஆவலை
தனியாளாய் நின்று
வென்று வந்த சிங்கமே..!

ஒலிம்பிக் என்ற உலக மேடையில்
இந்தியாவின் பெருமையை
இருத்தி வைத்த தங்கமே..!

உத்திரகண்ட் பெற்றெடுத்த உதயமே
உழைப்பின் சிகரமே
சீனத்தில் முத்திரை பதித்த சிங்கமே..!

உந்தன் சாதனையால்
இந்தியத்தாய் பெருமிதம் கொள்கிறாள்
உன் திறமைக்கு வாழ்த்து சொல்கிறாள்..!

நீன் புகழ் வாழி... நீ நீடுழி வாழி...
என வாயார வாழ்த்துகிறாள்...
அதனோடு எங்கள் வாழ்த்தும்...

உந்தன் உழைப்பால் நாங்களனைவரும்
பெருமையடைகிறோம்...
வாழ்க நீ எம்மான்..!

--@--@--@--@--@--@--

ஒலிம்பிக் குறித்த எனது முந்தைய பதிவுகள்...

*தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......

*இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

*பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

Tuesday, August 12, 2008

சுமை

குழந்தை பருவத்தில்
என் தாய்க்குச் சுமை..!
படிக்கும் வயதில்
புத்தகச் சுமை..!
பருவ வயதில்
பாழும் காதல் சுமை..!
நடுத்தர வயதில்
குடும்பச்சுமை..!
நரைத்த வயதில்
கூன் விழுந்த முதுகு சுமை..!
முதிய வயதில் என்
பிள்ளைகளுக்கு நானே சுமை..!
இதுதான் உலக உருண்டை தத்துவமோ..?

Monday, August 11, 2008

அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...

அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!

இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!

உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?

மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!

மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!

அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!

Tuesday, August 05, 2008

கவியமுதம்

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக்
காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின்
காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை கடிப்பேன்..!

கட்டிக்
கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்
..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு

இதோ கவியமுதம்..!

உன்னில் நான்
என்னில் நீ
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ
உன் கண்ணில் நான்
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்
கனவில் நாம்
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்
உன் உறவுகள் நம் தேடலில்
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை
நான் கருமை
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்
நானுந்தன் பிரியம்
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்
நீ எந்தன் தாகம்
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்
நான் பொல்லாத மான்
அமுதம் நம் புள்ளிமான்..!

Monday, August 04, 2008

பெண் சிசுவின் கேள்வி

அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...

என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...

பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?

பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?

இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?

நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...

அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று

அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?

இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...

இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)

Thursday, July 31, 2008

குழந்தையின் உறவுகள்

அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!

(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)

இயற்கை

இவ்வுலகத்தை
படைத்து...
அதைக் காக்கவும்
அழிக்கவும்
பற்பல காரணிகளையும்
கானல் உயிர்களையும்
கண்டு உயிர்ப்பித்த
பிரம்மா..!

(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)

பணம் ஒரு வேசி..!

விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)

Friday, July 25, 2008

காதலின் நியதி

இருட்டும் வெளிச்சமும்
பிரபஞ்சத்தின் நியதி..!
பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி..!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் நியதி..!
வெற்றியும் தோல்வியும்
வீரத்தின் நியதி..!
உலக நியதிகளெல்லாம்
இப்படியிருக்க
நீ யுவதியாகி என்னை
அவதிப்பட வைப்பது மட்டும்
எவ்வகை நியதி..?
ஓ... இது காதலின் நியதி..!

என் தேகத்தில் சந்தேகம்

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)

Thursday, July 24, 2008

'காதி'யின் புலம்பல்

கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்...

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

கற்றுக்கொள்

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

நீர்க்குமிழிகள்

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.