Showing posts with label சச்சின் தெண்டுல்கர். Show all posts
Showing posts with label சச்சின் தெண்டுல்கர். Show all posts

Friday, November 15, 2013

டிஜி கிராப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

ஆட்டோகிராப் கேள்விப்பட்டிருக்கிறோம். சம்மர் கிராப் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன டிஜி கிராப். மின்னணு தொழில்நுடப் வளர்ச்சியில் டிஜி கிராப் புதுவரவு.

அதாவது டிஜிட்டல் முறையில் ஆட்டோகிராப் போட்டுத்தருவதுதான் இந்த டிஜி கிராப். இந்த டிஜி கிராப் சச்சின் எனக்கு அனுப்பிய அவரது போட்டோவில்தான் அறிமுகமானது.

அதாவது, உங்களுடைய கையெழுத்தை வடிவ முறையினையும் கையொப்பத்தையும் டிஜிட்டல் முறையில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். நாம் சொல்லக்கூடிய வாசகங்களை நமது கையெழுத்திலேயே போட்டோவிலோ, கடிதத்திலோ, மின்னஞ்சலிலோ அனுப்பும். அதைப்பார்க்கும் போது நமது கையெழுத்தை அச்சு அசலாகப் பார்ப்பது போல் இருக்கும். ஆங்கிலத்தில் இருக்கும் இந்த டிஜி கிராப் விரைவில் தமிழ் மொழிக்கும் வரும் என எதிர்பார்க்கலாம்.

அது சரி சச்சின் உனக்கு எப்படிப்பா போட்டோ அனுப்பினாருன்னா கேட்டீங்கன்னா... கீச்சுக் கணக்கு அதாங்க டிவிட்டர் கணக்கு உங்களுக்கும் இருந்தா, அவர் உங்களுக்கு அவர் கையெழுத்திட்ட, டிஜி கிராப் போட்டோவை அனுப்பி வைப்பாரு.

உங்க டிவிட்டரில் இருந்து @bcci க்கும் @sachin_rtக்கும் சேர்த்து #ThankYouSachin இந்த வாசகத்தை டிவிட்டினால் போதும். அடுத்த சில நொடிகளில் உங்களுக்கு இந்த டிஜி கிராப் அனுப்பி வைக்கப்படும். நான் சச்சினிடமிருந்து பல டிஜிகிராப் போட்டோக்களை பெற்றுள்ளேன். அவற்றில் மிகவும் பிடித்த 2 டிஜி கிராப்கள் இங்கே... 




Monday, December 20, 2010

சென்சுரியனில் 50-வது செஞ்சுரி அடித்து உலக சாதனை படைத்தார் சச்சின்..!


செஞ்சுரியன்: சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை நேற்று (19.12.2010) சச்சின் தெண்டுல்கர் படைத்தார்.

தென் ஆப்ரிக்காவிலுள்ள செஞ்சுரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை சச்சின் படைத்தார்.

(இந்த சென்சுரியன் மைதானத்தில் அதன் பெயருக்கேற்றாற் போல செஞ்சுரி அடித்து செஞ்சுரியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் நமது சச்சின்...)

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் பந்து வீச்சில் ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 50வது சதத்தை அடித்து வரலாறு படைத்தார். (197 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்து 100 ரன்களை எட்டினார் சச்சின்...)

தொடரும் சச்சினின் சாதனை பயணம்...

1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்: 

@ டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.

@ டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.

@ டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.

@ இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

@ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்களும் அடித்து, உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்

50 சதங்கள் கடந்து வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:

முதல் சதம் - இங்கிலாந்து - மான்செஸ்டர் - 1990
10வது சதம் - இங்கிலாந்து - நாட்டிங்காம் - 1996
20வது சதம் - நியூசிலாந்து - மொகாலி - 1999
30வது சதம் - இங்கிலாந்து - லீட்ஸ் - 2002
40வது சதம் - ஆஸ்திரேலியா - நாக்பூர் - 2008
50வது சதம் - தென் ஆப்ரிக்கா - செஞ்சுரியன் - 2010

ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக அதிக சதம்

தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7 சதங்கள் அடித்துள்ளார். 

சாதனையில் அதிசய ஒற்றுமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி - தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த இரண்டு சாதனைகளுமே தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் பந்து வீச்சில் நிகழ்த்தியது என்பது கூடுதல் சிறப்பம்சம்...


சச்சினுடைய தந்தையின் பிறந்தநாளான நேற்று, சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தி, இந்த சாதனை சதத்தை மறைந்த அவரது தந்தைக்கு அர்பணித்துள்ளார்.

சர்வதேச ஒரு தினப் போட்டியில் இன்னும் 4 சதங்களை சச்சின் அடித்தால்... அதிலும் 50 சதம் கண்ட வீரர் என்ற பெருமை மட்டுமின்றி... ஒருதின மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 முறை 100 ரன்களைக் கடந்த உலகின் முதல் (மற்றும் கடைசி) வீரர் என்ற பெருமையைப் பெறுவார்... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

அந்த சாதனை மனிதருக்கு இந்த ரசிகனின் அன்பு வாழ்த்துகள்... தொடருட்டும் உமது சாதனைப் பயணம்...! 

Wednesday, February 24, 2010

சச்சினின் உலக சாதனை! ஒரு தின கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச்சதம்


பிப்ரவரி, 24, குவாலியர்: இந்திய அணிக்கும், தென்னாப்பிர்க்க அணிக்கும் இடையே இன்று குவாலியரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இரண்டாவது ஒரு தின கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார் சச்சின் தெண்டுல்கர்.

சச்சின் தெண்டுல்கர்,  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு தினப் போட்டிகளில் பல  உலக சாதனைகளு தன்னகத்தே கொண்டுள்ள உலகின் முதல் வீரர் இவரே.

சர்வதேச ஒரு தின அரங்கில் அதிக பட்ச ரன்களைக் குவித்த முதல் மூன்று வீரர்கள் விவரம்

1)     சச்சின் தெண்டுல்கர், 24.02.2010 அன்று குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 200* ரன்கள்
2)     பாகிஸ்தான் வீரர். சயித் அன்வர், 21.05.1997 அன்று சென்னையில், இந்தியாவிற்கு எதிராக 146 பந்துகளில் 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 194 ரன்கள்
3)     ஜிம்பாப்வே வீரர். கவென்ட்ரி, 16.08.2009 அன்று புலவாயோவில், வங்க தேசத்திற்கு எதிராக 156 பந்துகளில் 16 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 194* ரன்கள்.

(* = கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை)

Friday, November 20, 2009

சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 30,000 ரன்களைக் கடந்தார்..!



சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இன்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் புதியதொரு சாதனையைப் படைத்தார். டெஸ்ட், ஒருதின மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டி என மூன்று போட்டிகளிலும்  சேர்த்து 30,000 ரன்களைக் கடந்தார்.

அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் அவரைப்பற்றி…

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.

பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…

சச்சினின் சாதனைகள்

சர்வதேச அளவில்…

கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டி சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஒருதினப் போட்டி  சாதனைகள்

அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  இந்தியா ஆடிய  இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…

ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்  (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.

1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த  முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின்  தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.

இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்…  இந்திய அணிக்கு  திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை.

இவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார், வரும் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

Thursday, November 05, 2009

17,000 ரன்களைக் கடந்தார் சச்சின் தெண்டுல்கர்...



ஹைதராபாத், நவ. 5: உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. சச்சின் தெண்டுல்கர்...

ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் இவர் பலவிதமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அச்சாதனைகளில் இன்று இன்னுமொரு மணிமகுடம் இது என்றே சொல்லாலாம்.

ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில், ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு தினப் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 7 ரன்களைக் கடந்த போது, 17,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சாதனையை அவர் 435 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார். இதுவரை இவர் 91 அரை சதங்களும், 45 சதங்களும் குவித்துள்ளார்.

ஒருதினப்போட்டிகளில், இவர்தான் முதன்முறையாக 12000 ரன்கள், 13000 ரன்கள், 14000 ரன்கள், 15000 ரன்கள், 16000 ரன்கள், 17000 ரன்கள் என வரிசையாக குவித்து சாதனை படைத்தவர் ஆவர்.. அதில் முதன் முறையாக இச்சாதனைகளைப் படைத்ததும், அதை மீண்டும் மீண்டும் முறியடித்ததும் இவரேதான்...