Saturday, October 31, 2020

வாலு டிவிக்கு 3000 சப்ஸ்கிரைபர்கள் | vaalu tv reached 3k Subscribers | V...


வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

உங்கள் அபிமான வாலு டிவி அக்டோபர் 20, 2020 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கிய இரண்டரை மாதங்களில் 3000 சப்ஸ்கிரைபர்ஸ்களை தொட்டது வாலு டிவி... இது மென்மேலும் தொடரவேண்டும் உங்களின் பேராதரவோடு...

இத்தனைக்கும் காரணமான எங்களன்பு நேயர்களான உங்கள் அனைவருக்கும் எங்களின் பேரன்பும் பெரு நன்றியும்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#vaalu_tv #வாலு_டிவி #vaalu_meame

Tuesday, October 27, 2020

தேசிய கல்விக்கொள்கை 2020 - ஓர் அலசல் | தேசிய கல்விக்கொள்கையின் நன்மை தீம...தேசிய கல்விக்கொள்கை - 2020 நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். இது குறித்த பருந்துப்பார்வை... தேசிய கல்வி கொள்கை குறித்து உங்கள் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.. அது குறித்த விவரங்களும் கொடுத்திருக்கிறோம்...

இந்த தேசிய கல்விக்கொள்கையை தமிழில் மொழிபெயர்த்த தோழர் விழியன் மற்றும் அவர் குழுவினர், பாரதி புத்தகாலய தோழர் நாகரஜன் மற்றும் அவர் குழுவினருக்கு இத்தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்...

மிக்க அன்புடன்
மோ.கணேசன்
வாலு டிவி

*************
தேசிய கல்விக் கொள்கை – ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால்
https://innovateindia.mygov.in/wp-con...

தேசிய கல்விக் கொள்கை - 2020 தமிழில் படிக்க விரும்பினால்...
https://bookday.co.in/nep_2020_tamil

தேசிய கல்விக் கொள்கை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க கடைசி தேதி - அக்டோபர் 31, 2020

கருத்துகளைத் தெரிவிக்க: https://innovateindia.mygov.in/nep202...

*****************
#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Sunday, October 25, 2020

காமராஜர் கிங்மேக்கர் ஆனது எப்படி| காமராஜர் திட்டம்| K plan in tamil| kam...காமராஜர் திட்டம் என்றால் என்ன? காமராஜர் கிங் மேக்கர் ஆனது எப்படி? லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனது எப்படி? இந்திரா காந்தி பிரதமர் ஆனது எப்படி? 1965 இந்திய பாகிஸ்தான் போரில் காமராஜரின் பங்கு என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ... முழுமையாகப் பாருங்க.... 

காமராஜரின் ஒரு பக்க அரசியல் வரலாற்றை தேடிப்பிடித்து கொடுத்திருக்கிறோம். இந்தியாவின் வரலாறு என்றும் சொல்லலாம்.

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை வீடியோவாக எடுத்து 9600045295 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்க... மின்னஞ்சல் எனில் channelvaalu@gmail.com க்கு அனுப்பி வையுங்க... கேள்விகள் உங்களிடமிருந்து கிடைத்தால்,,, இதுபோல் பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்....

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Friday, October 23, 2020

நமக்கு பேஸ்ட் வெளிநாட்டுக்காரனுக்கு வேப்பங்குச்சி | எதைக்கொண்டு பல் விளக்குவது நல்லது?எதைக்கொண்டு பல் துலக்குவது நல்லது என்று ஒரு சுட்டி பொண்ணு கேட்ட கேள்விக்கு விடையைத் தேடியபோது... பல்வேறு திடுக் தகவல்கள் கிடைச்சது... 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நாம்  பயன்படுத்துற பேஸ்ட்டையே பயன்படுத்தக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியுமா?

நமக்கு பேஸ்ட்டை கொடுத்துட்டு வெள்ளக்காரங்க வேப்பங்குச்சியில விளக்குறானுங்க... இன்னும் பல திடுக் தகவல்கள் இந்த வீடியோவில் இருக்கு... முழுமையாக பாருங்க... உங்களுக்கே தெரியும்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி  #vaalu_tv  #ask_vaalu #askvaalu #வாலுடிவி #vaalutv

Wednesday, October 21, 2020

டும் டும் டும் தண்டோரா புத்தகத்துக்கு கிடைத்த விமர்சனம் - தமிழ் இந்து நாளிதழ்கடந்த ஜனவரி 2020-ல் குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டேன்...

அதில் டும் டும் டும் தண்டோரா புத்தகம் சிறுவர்களுக்கான பாடல்களாகும். 60 சிறார் பாடல்கள். 40 நறுங்குறள்கள் எழுதியிருந்தேன்.
கொரோனா ஊரடங்கால் புத்தகங்கள் வாசகர்களின் கைகளுக்கு சென்றடையாமல் இருந்தது. தற்போது இந்நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது என நம்புகிறேன்.
இன்றைய தமிழ் இந்து நாளிதழின் மாயாபஜார் பகுதியை எதேச்சையாக புரட்டியபோது, நானெழுதிய டும் டும் டும் தண்டோரா புத்தகம் குறித்து, நாலடியார் போல நாலைந்தே வரிகளில் நறுக் விமர்சனம் தந்திருந்தார் ஆதி வள்ளியப்பன். நன்றி சார்...
அவர் தந்த விமர்சனம் அப்படியே எடுத்துத் தந்திருக்கிறேன்...
*//‘ஒரெழுத்து ஒரு மொழி’ பாடலில் தமிழின் ஒவ்வோர் எழுத்துக்கும் உள்ள அர்த்தத்தை விளக்கியுள்ளார். ‘ஒரு சொல்லில் இரு பொருள்கள்’ பாடலும் சுவாரசியம். பாடுவதற்குத் தோதான பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தாய், தந்தை, ஆசிரியர், நட்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து தலா 4 நறுங்குறள்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924//*
டும் டும் டும் தண்டோரா புத்தகத்திற்கு கிடைத்த முதல் (நாளிதழ்) விமர்சனம் இது...
இந்த விமர்சனப் பகுதியில் அழ.வள்ளியப்பா, தோழர் ஆயிஷா நடராஜனின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கிறது. ஜாம்பவான்களுடன் நமது படைப்பும் இடம்பெற்றிருப்பது... சிறு மகிழ்ச்சியைத் தருகிறது... அந்த மகிழ்ச்சியின் பகிர்வே இது...
டும் டும் டும் தண்டோரா புத்தகத்தின் விலை 110 ரூபாய். தற்போது தள்ளுபடி விலையில் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்க விரும்பினால்...
உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது நன்றிகள்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
இந்த விமர்சனத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர்...

இலைகள் ஏன் பச்சையாக இருக்கிறது? | why leaves are green color


இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன? பழங்கள் எப்படி சிவப்பாக மாறுகின்றன?

செடிகளும் அதன் இலைகளும் ஏன் பச்சையாக இருக்கிறது? அதற்கு காரணம் என்ன? சில இலைகள் சிவப்பு நிறத்திலும், சில இலைகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறதே... காரணம் என்ன? காய் எப்படி கனியாகிறது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_Tv  #askvaalu #வாலுடிவி #vallutv

Monday, October 19, 2020

கோங்குரா சட்னி செய்வது எப்படி? | புளிச்சகீரை சட்னி செய்வது எப்படி? | how...


ஆந்திரா ஸ்டைலில் புளிச்சக்கீரை செய்வது எப்படி? ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சட்னி செய்வது எப்படி? கோங்குரா செய்வது எப்படி? புளிச்சக்கீரை சட்னி செய்வது எப்படி? இந்த வீடியோவைப் பாருங்க... ருசியான கீரையை நீங்களே சமைப்பீங்க...

மிக்க அன்புடன்

உங்கள்

வாலு @ மோ.கணேசன்

Saturday, October 17, 2020

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் பெயர்களும் அதன் சிறப்புகளும்| நாளைய நட்சத...தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாவட்டங்கள் இருக்கு என்று கேட்டாலே பதில் சொல்ல தடுமாறுவோம். இந்த நிகழ்ச்சியில் பேசும் 10 வயது சிறுவன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயர்களையும் சொல்வது மட்டுமின்றி, அதன் சிறப்புகளையும் சொல்கிறான். எதையும் பார்க்காமல் சொல்கிறான்...
அந்த சிறுவன் யார்? அவனது அசாத்திய நினைவுத் திறன் எப்படி? உங்கள் மாவடத்திற்கு என்ன சிறப்பு இருக்கிறது என்பதை கேட்க வாங்க...
மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர், வாலு டிவி

Thursday, October 15, 2020

வாலு டிவி 2 மாதங்களில் 3000 சப்ஸ்கிரைபர்கள் பெற்றது எப்படி?வாலு டிவி தொடங்கி இரண்டரை மாதங்களில் 3000 சப்ஸ்கிரைபர்கள் என்ற இலக்கை அடைந்தது எப்படி? வாலு டிவிக்கு ஆதரவு அளித்த பிரபலங்கள் யார் யார்? எதனால் ஆதரவு தந்தார்கள் உள்ளிட்ட தகவல்களை இதில் எடுத்து தந்திருக்கிறோம்.
நீங்கள் இன்றி இந்த இலக்கைத் தொட்டிருக்க முடியாது. தொட்டுத் தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களது நன்றி!
சிறப்பு நன்றி: இஸ்ரேல் ஜெபசிங் ஐஏஎஸ்.
மிக்க அன்புடன்
வாலு டிவி
#வாலு_டிவி #vallu_tv #வாலுடிவி #vaalutv

Tuesday, October 13, 2020

கண்ணாடி டம்ளரில் புல்லாங்குழலின் சத்தம் வரவைப்பது எப்படி?
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... இது உங்கள் அபிமான வாலு டிவியின் விளையாட்டாய் அறிவியல் நிகழ்ச்சி...

இதை ஒரு எளிய அறிவியல் பரிசோதனை மூலம் உங்களுக்கு விளக்குகிறார் விஞ்ஞானரதம் அறிவரசன்...

தொடர்ந்து இணைந்திருங்கள்... இன்னும் பல சுவாரசியமான வீடியோக்களுக்கு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

https://youtu.be/vOAqiU_H_Q4

Sunday, October 11, 2020

குழந்தைகளுக்கென புதிதாய் ஒரு மாத இதழ் - சுட்டி யானை வெளிவந்துவிட்டது!


நேற்று இரவு வீட்டிற்குள் நுழைந்தபோது, நூலால் கட்டப்பட்ட ஏ4 பிரவுன் நிற கவர் என்னை வரவேற்றது. இதுக்கு எதுக்கு நூலைக்கட்டணும். பசையைத் தடவி நன்றாக ஒட்டி அனுப்பியிருந்தாலே போதுமே... என்று நினைத்தபடி அனுப்புநர் முகவரியைப் பார்த்தேன்.

சுட்டி யானை சிறுவர் இதழ் என்று இருந்தது... அடடே... சிறார்களுக்கு என்று... குறிப்பாக யானைகளுக்கு என்றே ஒரு தனி மாத இதழா..? என்று ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை அடைந்தேன். இதழின் பெயரையும் குட்டியானையின் உருவத்திலேயே பொறித்திருந்தது அசத்தலாக இருந்தது.

34 பக்க புத்தகம் இது. அட்டைப்பக்கம் வழுவழு தாளிலும், உள்பக்கங்கள் தரமான தாள்களிலும் அச்சிட்டிருக்கிறார்கள். (பத்திரிகையாளன் என்பதால் இதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவேன்). தரமான தாள்களைப் பயன்படுத்தினால், புத்தகம் நீண்டகாலத்திற்கு அழியாமல் இருக்கும். படங்கள் தெளிவாக, அழகாக அச்சிட்டுவரும். அது வாசகரை அந்த புத்தகத்தோடு ஒன்றிப்போகச் செய்யும். அதனால்தான் தாள்களின் தரத்தைப்பற்றி இங்கே சொன்னேன்.
அடுத்து அதன் கருப்பொருளைக் கவனித்தேன். அதாவது அந்த புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது. எது அதன் மையக்கருப்பொருளாக இருக்கிறது என்பதற்காக ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்கொண்டே வந்தேன். முதல் பக்கம் யானை. இரண்டாம் பக்கம் யானை... மூன்று, நான்கு, ஐந்து என அனைத்து பக்கங்களிலும் யானையைப் பற்றிய தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள்.
குழந்தைகள் வண்ணம் தீட்டி மகிழ, புள்ளிகளை ஒன்றிணைத்து ஓவியம் வரைய என்றாலும் அதிலும் யானைகள்தான். சுட்டி யானை என்ற பெயருக்கு ஏற்றாற்போல... யானைகள்தான்.
இப்போது நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும். இது முழுக்க முழுக்க யானைகளைப் பற்றி தகவல்களைத் தரும் புத்தகம் என்று...
யானையின் மூதாதைகள் யார்? யானை தொடர்பான தாவரங்கள், செடிகொடிகள், யானையின் பெயர் கொண்ட செடி, கொடி, விதை வகைகள் என பொது அறிவுத் தகவல்களும், பாட்டி சொன்ன கதை, யானை பற்றிய கதை என்று கதைப்பக்கங்களும், யானையைப் பற்றிய சிறார் பாடலும் இதில் இருக்கின்றன...
சிறுவர்களுக்கான இதழ் என்று சொல்லி அச்சிட்டுத் தருபவர்கள், சிறிய அளவிலான எழுத்து வடிவத்தையே புத்தகம் முழுக்க பயன்படுத்துவார்கள். குழந்தைகளாயிற்றே... சற்றே பெரிய எழுத்து வடிவத்தை பயன்படுத்துவோம் என்று எண்ண மாட்டார்கள்.
அதையும் நுணுக்கமாக கருத்தில் கொண்டு, பெரிய எழுத்து வடிவில் கட்டுரை, கதை, பாடல் என அனைத்தையும் சுட்டி யானை கொண்டிருப்பது சிறப்பான முன்னெடுப்பாகக் கருதுகிறேன்.
புத்தகத்தை திறந்ததும், தும்பி சிறார் இதழின் வடிவமைப்பை நினைவுபடுத்தின. ஆயினும் சிறப்பாகவே இருந்தது. ஒருபுறம் ஆசிரியர் குழு குறித்த விவரங்கள் (Imprint என்று பத்திரிகை உலகில் சொல்லுவோம்), மறுபக்கம் இதன் ஆக்கத்திற்கு பேருதவி புரிந்த நல்லுள்ளங்களின் பெயர்களைப் பொறித்து, அவர்களுக்கு நன்றியறிவித்திருந்தது. இதில் எனக்கு நன்கு பரிச்சயமான நண்பர் இயக்குநர் குழந்தை வேலப்பனின் பெயரும் இருந்தது ஆச்சர்யம் கலந்த உவகையைத் தந்தது. திரைத்துறையைச் சார்ந்த படைப்பாளி, இந்த தளத்திலும் இயங்குகிறாரே என்ற உவகைதான் அது. நம் பெயர் இல்லாமல் போயிற்றே என்ற வருத்தமும் மேலிட்டதை பதிவு செய்யாமல் போனால் என் மனசாட்சி என்னை மன்னிக்காது.
புத்தக்கத்தை வரிவிடாமல் படிக்க வேண்டும். படித்தால் அதில் பல நன்மைகள் உண்டு என்பதையும் இப்புத்தகத்தைப் படித்தபின் தெரிந்து கொண்டேன். அது எப்படின்னு கேக்கறவங்க மட்டும்? தொடர்ந்து படிங்க... வேண்டாம்னு நினைக்கறவங்க அடுத்து வரும் மூன்று பத்திகளை தாண்டி, படித்துக்கொள்ளலாம்.
அடுத்த இரு பக்கங்களும்... சுட்டியானை ஆசிரியர் குழுவின் அறிமுகம்... ஏன் இந்த இதழ்? எதற்காக? எப்படி? உள்ளிட்ட தகவல்கள் இருந்தன. அதன் கடைசி வரியில் ஒரு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தோடு காய்கறி விதை பொட்டலமும் வைத்திருக்கிறோம். உங்கள் வீட்டில் விதையுங்கள் என்று கொடுத்திருந்தது.

என்ன... காய்கறி விதைகளா..? அதுவும் மரபுக் காய்கறி விதைகளா? புத்தகத்தை வெளியே எடுத்ததும் பிரவுன் கவரை தூக்கிப்போட்டதை தேடி எடுத்து உள்ளே கையை விட்டுப்பார்த்தால், மரபுக் காய்கறி விதைகள். உள்ளே என்னென்ன விதைகள் என்று பார்க்கவில்லை. அதற்கு தொட்டிகள் வேண்டுமே என்றுதான் சிந்தனை ஓடியது. விதைக்காக மூன்று தொட்டிகளை வாங்கிவிட வேண்டியதுதான் என முடிவு செய்துகொண்டேன்.
விதைகளைப் பார்த்ததும் உள்ளத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு வாரங்களுக்கு முன்பு மரபு சார் காய்கறி விதை தேடி, பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் அலைந்து திரிந்தது நினைவுக்கு வந்தது. கிடைத்த விதை களை வாங்கி மொட்டைமாடியில் கத்தரியையும், வெண்டையையும் விதைத்தேன். இப்போதுதான் தழைத்துவளர ஆரம்பித்திருக்கிறது. வரி விடாமல் படித்ததால்தான் காய்கறி விதை இதனுள் இருப்பது தெரிய வந்தது. இல்லையெனில் குப்பையோடு குப்பையாக போயிருக்கும். இதற்காகவே இந்த சுட்டி யானை ஆசிரியர் குழுவை மேடை போட்டு பாராட்டலாம். நூலால் கட்டியிருந்தன் காரணமும் புரிந்தது.
ஒரு யானை, தான் சாப்பிடும் உணவில் 60 சதவீதம் செரித்தும், 40 சதவீதம் செரிக்காமலும் வைத்துவிடும். செரிக்காதவை பல்வேறு ரசாயன மாற்றங்களோடு, வீரியம் பெற்று, யானையின் சாணத்தின் வழியே வெளியே வந்துவிழும். அந்த சாணத்தில் இருந்து பல்வேறு செடி, கொடி, மரங்கள் முளைத்து, குட்டி வனமாக மாறும். அப்படி ஒரு செயல்பாட்டை சுட்டியானை விதைக்க ஆரம்பித்திருக்கிறது.
இதன் ஆசிரியர் குழுவில் உள்ள ஆற்றல் பிரவின்குமார் நானறிந்த முகநூல் நண்பர். அவர்தான் இந்த இதழை எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் ஆசிரியர் குழுவில் உள்ள அத்தனை உள்ளங்களுக்கும் பத்திரிகையாளனாக மட்டுமின்றி, சிறார் எழுத்தாளனாக மட்டுமின்றி, முதலில் ஒரு வாசகனாக நன்றி கூறிக்கொள்கிறேன். சிறுவயதில் வறுமையின் உழன்ற எனது உலகத்தை உயிர்ப்போடு வைத்திருந்தது பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணிகாமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஞானபூமி போன்ற சிறார் இதழ்கள்தான்.
இன்று அவையெல்லாம் கால வெள்ளத்தில் காணமல்போய்விட்டன. அடுத்து வந்த சுட்டிவிகடனும் மறைந்துவிட்டான். தும்பி, பொம்மி, பஞ்சுமிட்டாய் என நம்பிக்கை கீற்றுகள் ஆங்காங்கே தென்படும்போது, மற்றொரு ஒளிக்கீற்றாய் வெளிவரும் சுட்டியானையை என்னிரு கைகளை விரித்து அணைத்து, வாஞ்சையோடு வரவேற்கிறேன். வாடா என் சுட்டியானைப் பயலே... உனது புத்தகத்தில் நிச்சயம் எனது எழுத்துக்களும் அவ்வப்போது வாலாட்டும் என்று இப்போதே வாக்கு தந்துவிடுகிறேன்.
கடைசி பக்கத்தில் ஆசிரியர் குழு கொடுத்த சுட்டியானை இதழ் குறித்த வாசக(விளம்பர)ம் அசர வைத்தது.


தினம் 1 ரூபாய் சேமித்து, மாதம் 30 ரூபாயில் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்...
குழந்தைகளுக்கு அன்பளிப்பாக சுட்டி யானையைக் கொடுங்கள்
நீங்கள் படித்த பள்ளிகளுக்கு சுட்டி யானையை பரிசளியுங்கள்...
என்று குறிப்பிட்டிருந்தது. வாழ்த்துகள்.
புத்தகம் வேண்டுவோர்...
சுட்டி யானை மாத இதழ்,
7.கதித்த மலை சாலை,
ஊத்துக்குளி - 638751,
திருப்பூர் - மாவட்டம்.
அலைபேசி: 9500125125,
மின்னஞ்சல்: chuttiyaanai@gmail.com
திருப்பூரில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் அச்சிட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சுட்டியானையை இயல்வாகை வெளியிடுகிறது.
கொரோனாவால் ஆறுமாத காலம் முடங்கிப்போயிருந்த மனிதகுலம், இப்போதுதான் மெல்ல மெல்ல நம்பிக்கையோடு எழ ஆரம்பித்திருக்கிறது. இதே காலத்தில் சிறுவர்களுக்கு நம்பிக்கையூட்ட, சுட்டியானை துள்ளிக்குதித்து வர ஆரம்பித்துவிட்டது.
இந்த புத்தகத்திற்காக செயல்படும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பேரன்பும் பெருவாழ்த்தும்...
இனி ஒவ்வொரு மாதமும் சுட்டி யானை, கம்பீர நடைபோட்டு வர இருக்கிறது. வரவேற்கத் தயாராகுங்கள் குழந்தைகளே...
மிக்க அன்புடன்
உங்கள்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#chutti_yaanai #சுட்டி_யானை #வாலு_டிவி

ஒழியட்டும் மது என்ற தலைப்பில் 8 வயது சிறுமியின் மது ஒழிப்புக் கவிதை கேட்க வாங்க...ஒழியட்டும் மது என்ற தலைப்பில் 8 வயது சிறுமியின் மது ஒழிப்புக் கவிதை கேட்க வாங்க...

உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... மறக்காம வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

உங்க வீட்டு குழந்தைகளும் இது போல திறமைகள் இருந்தால் அந்த திறமைகளுக்கு வாலு டிவி மேடை அமைத்து கொடுக்க இருக்கிறது...

உங்கள் குழந்தையின் திறமையை, மூன்று நிமிடத்திற்கும் குறையாத அளவில்,  வீடியோவாக எடுத்து channelvaalu@gamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்க... 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #வாலுடிவி #vaalu_tv #மது_ஒழிப்பு_கவிதை

Saturday, October 10, 2020

மோ.கணேசனின் புத்தக வெளியீட்டு விழா| குறுக்கெழுத்து அறுபது| டும் டும் டும் ...பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான மோ.கணேசன் எழுதிய புத்தகங்களான  குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா,  வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களும், கடந்த ஜனவரி 2020-ல், சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவினை வடசென்னை தமிழ்ச்சங்கம் முன்னின்று நடத்தியது. இன்று அதன் தலைவர் எ.த.இளங்கோவின் பிறந்தநாள்... அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியபடி... இந்த நிகழ்வை ஒவ்வொரு பாகமாக அரங்கேற்றுகிறேன்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்

Thursday, October 08, 2020

ஒழுக்கத்தின் மேன்மை குறித்து 13 வயது சிறுமியின் எழுச்சியுரை| நாளைய நட்சத...வாலு டிவியின் நாளைய நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் பதிமூன்று வயது சிறுமியின் 'ஒழுக்கத்தின் மேன்மை' என்ற தலைப்பிலான எழுச்சியுரையை கேட்க வாருங்கள்.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... மறக்காம வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
உங்க வீட்டு குழந்தைகளும் இது போல திறமைகள் இருந்தால் அந்த திறமைகளுக்கு வாலு டிவி மேடை அமைத்து கொடுக்க இருக்கிறது... மூன்று நிமிடத்திற்கும் குறையாத அளவில், உங்கள் குழந்தையின் திறமையை வீடியோவாக எடுத்து channelvaalu@gamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்க... 9600045295 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி வைக்கலாம்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #வாலுடிவி #vaalu_tv

Tuesday, October 06, 2020

ஐஸ்கிரீம் குச்சியில் மவுத் ஆர்கன் செய்வது எப்படி | விளையாட்டாய் அறிவியல...ஐஸ் கிரீம் குச்சிகளைக் கொண்டு மிக எளிதாக மவுத் ஆர்கன் செய்வது எப்படி என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. இதன் மூலம் ஒலி எப்படி உருவாகிறது? என்பதை விஞ்ஞான ரதம் அறிவரசன் எளிதாக விளக்குகிறார்.
தொடரும் உங்களின் ஆதரவிற்கு எங்களின் நன்றி!
மிக்க அன்புடன்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalui_tv #vallutv

Sunday, October 04, 2020

கிரிக்கெட் பேட் எப்படி செய்கிறார்கள் தெரியுமா? | how to make a cricket b...கிரிக்கெட் பேட்டை எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

நாம் விளையாடும் கிரிக்கெட் பேட்டுகளை எந்த மரத்தில் செய்கிறார்கள் தெரியுமா? எப்படி செய்கிறார்கள்? அதன் நீளம், அகலம் எடை என்ன தெரியுமா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த வீடியோ...

தொடரும் உங்களின் ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv #how_to_make_bat

https://youtu.be/-wdoSUpJGko

Saturday, October 03, 2020

தொடர்ந்து இதே தவறுகளைத்தான் செய்துவருகிறோம் - தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!

 

நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 13வது  ஐபிஎல் தொடரிடன் 14-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் இரண்டு தோல்விகளைக் கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு அணியில் சில மாற்றங்களைச் செய்தது.

கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோருக்கு பதிலாக அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்கூர், டிவெய்ன் பிராவோ ஆகியோர் களமிறங்கினர்.

ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். டாஸ் வென்றிருந்தால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்திருக்கும் என்று தோனியும் சொன்னார்.

ஹைதராபாத் அணியின்  தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்ட்டோவும் களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் பேர்ஸ்ட்டோ.

வார்னருடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் பவர் பிளேவில் நிதானமாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.  மணீஷ் பாண்டே 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் சாம் கர்ரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7.1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். இவரையடுத்து வார்னருடன் கேன் வில்லியம்ஸன் ஜோடி சேர்ந்தார்.

பியூஷ் சாவ்லா வீசிய 10-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது ஹைதராபாத்.  சாவ்லா வீசிய 5-வது பந்தை லாங் ஆன் திசையில் வார்னர் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அந்தரத்தில் பாய்ந்து பிடித்த பாப் டுபிளிஸிஸ், பந்தை மைதானத்திற்குள் தூக்கிப் போட்டுவிட்டு, எல்லைக்கோட்டிற்கு வெளியே குதித்தவர் மீண்டும் மைதானத்திற்குள் வந்து அந்த பந்தை பிடித்து ஆச்சர்யம் அளித்தார். அடுத்த பந்திலேயே, கேன் வில்லியம்ஸன் 9 ரன்கள் எடுத்திருந்தநிலையில், அம்பதி ராயுடுவின் அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார்.

11 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது ஹைதராபாத். இவர்களையடுத்து ஹைதராபாத்தின் இளம் வீரர்களான பிரியம் கார்க், அபிஷேக் சர்மா ஆகியோர் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க ஆரம்பித்தனர்.

16வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 111 ரன்கள் எடுத்திருந்தது. ஆரம்பத்தில் நிதானம் காட்டிய பிரியம் கார்க் போகப்போகஅதிரடிக்கு மாறினார். சாம் கர்ரண் வீசிய  17-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என ரன் மழை பொழிந்தார் பிரியம் கார்க். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கிடைத்தது.

17-வது ஓவரை தீபக் சஹார் வீச, அந்த ஓவரில் அபிஷேக் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை ஜடேஜாவும், தாக்கூரும் தவறவிட்டு ஏமாற்றமளித்தனர். அதே ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக் சர்மா. அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

அதிரடியாக ஆடிய பிரியம் கார்க் 23 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதலாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. 

பிரியம் கார்க் 51 ரன்களுடனும் அப்துல் சமது 8 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. புவனேஷ்குமாரின் அற்புதமான வேகப்பந்துவீச்சில் ஷேன் வாட்ஸன் 1 ரன் எடுத்திருந்தபோது ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து பாப் டுபிளிஸிஸுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். ராயுடுவும் நிலைக்கவில்லை. 8 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜனின் பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். இவரையடுத்து பாப் டுபிளிஸிஸுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். பாப் டுபிளிஸிஸ் 22 ரன்கள் எடுத்திருந்தபோது பிரியம் கார்க்கினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஜாதவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். மிகவும் மந்தமாக ஆடிய கேதர் ஜாதவ் 10 பந்துகளைச் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, அப்துல் சமது பந்துவீச்சில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது சென்னை அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

தோனியுடன் ரவீந்திர ஜடோஜா ஜோடி சேர்ந்தார். நடுப்பகுதி ஓவரை ரஷீத் கான் வீசினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, சென்னை அணியின் ரன்குவிப்பை மேலும் மட்டுப்படுத்தினார். இதன் விளைவாக சென்னை அணி 17-வது ஓவரில்தான் 100 ரன்களையே எட்ட முடிந்தது. அதன் பிறகு தோனியும் மறுபுறம் ஜடேஜாவும் எதிரணியின் பந்துவீச்சை அடித்து ஆட ஆரம்பித்தனர். 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசிய ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். 

தோனியுடன் கை கோர்த்த டாம் கர்ரண், தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். 18 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 12 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

19வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தினை வீசியபோது, தொடையில் தசைப்பிடிப்பு ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். அந்த ஓவரை கலீல் அஹமது வீச, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை விளாசினார் தோனி.

கடைசி ஓவரில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை. அப்துல் சமது வீசிய முதல் பந்து வைடாகப்போக, கீப்பர் பிடிக்கத் தவறியதால் 5 ரன்கள் சென்னை அணிக்கு கிடைத்தது.

6 பந்துகளில் 23 ரன்கள் தேவை. முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசிய தோனியால் அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்த இரு பந்துகளில் இரண்டு ரன்கள் கிடைக்க, கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி ஆறுதல் அளித்தார் சாம் கர்ரண். கடைசி வரை போராடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து 7 ரன்களில் தோல்வியைத் தழுவியது. தோனி 36 பந்துகளில் 47 ரன்களுடனும், சாம் கர்ரண் 5 பந்துகளில் 15 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்த ப்ரியம் கார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி  "முதலில் பேட்டிங் செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். டாஸ் தோல்வியால் அது நடக்கவில்லை. பந்துவீச்சின்போது, நோல் பால் வீசியதும்,  பீல்டிங்கில் செய்த தவறுகளும், கேட்ச்களை தவறவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணம். தொடர்ந்து இதே தவறுகளைத்தான் செய்துவருகிறோம். இதை சரிசெய்தாக வேண்டும். 15 ஓவர்கள் வரை கட்டுக்கோப்பாகத்தான் பந்து வீசினோம். இரண்டு ஓவர்கள் மட்டும் மோசமாக அமைந்துவிட்டது.  பேட்டிங்கில் தொடக்கவரிசை ஆட்டக்காரர்கள் சரியாக ஆடவில்லை. ஆட்டத்தின் நடுவரிசை ஓவர்களில் ரன்கள் குவிக்கத் தவறிவிட்டோம். தொடர்ச்சியாக நாங்கள் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது கிடையாது. தவறுகளை சரிசெய்து கொண்டு மீண்டு வருவோம். இன்னும் போட்டிகள் இருக்கின்றன" என்றார்.

ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் "விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பந்து வீசவில்லை. சரியான திசையில், சரியான வேகத்தில் வீசினால் போதும் என்று நினைத்து, செயல்படுத்தினேன். அதனால்தான் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க முடிந்தது. இது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைத் தந்தது. மற்ற பந்துவீச்சளர்களிடம் அவர்கள் விக்கெட்டை பறிகொடுக்க நான் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம்" என்றார்.

மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற ஹைதராபாத் அணியின் ப்ரியம் கார்க் "மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய களம். உலகத்தரம் வாய்ந்த மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. முதல் போட்டியில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும், அணி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கையை இப்போது காப்பாற்றி இருக்கிறேன். எனது இயல்பான ஆட்டத்தைத்தான் விளையாடினேன். அபிஷேக்குடன் சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாடி வருவதால் அருடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் சிறப்பானதாக இருந்தது. இந்த வெற்றி என்னுள் மேலும் தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் இதை மேலும் வளர்த்துக்கொள்வேன்" என்றார்.

வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் "புவனேஷ்குமார் தசைபிடிப்பால் களத்தில் இருந்து வெளியேறும்போது, அடுத்து  யாரிடம் பந்தைக் கொடுப்பது என்று யோசித்தேன். 5 பந்துகளில் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். அபிஷேக்கை விட, கலீல் அஹமது உயரமானவர், பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடமே கொடுத்தேன். அவரால் முடிந்த அளவு சிறப்பாக பந்துவீசினார். தொடக்கத்தில் இந்த பிட்ச் ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. போகப்போக அதன் தன்மை மாறியது. கடினமான நேரங்களில் உங்கள் திறமையை வெளிக்காட்டினால்தான் வாய்ப்புகள்  அனைத்தும் வெற்றியாகும் என்று எனது அணியின் இளம் வீரர்களிடம் அடிக்கடி சொல்லுவேன். அதைத்தான் இப்போட்டியில் செய்து காட்டி இருக்கிறார்கள். யார்க்கர், ஸ்லோயர் பால் என பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெற்றிருக்கிறோம்" என்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் பெற்ற ஹைதராபாத் அணி, தரவரிசைப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் தோல்விகளால் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தை தக்க வைத்துக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி 4500 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சென்னை அணியின் தோல்வியால் இந்த சாதனை அமுங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.

இன்று முதல் சனி, ஞாயிறுகளில் இரண்டு தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இன்றைய ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியையும், டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்த்து ஆடுகின்றன.

#ஐபிஎல்2020 #IPL_2020 #dhoni_records

Friday, October 02, 2020

பஞ்சாப் அணியை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்! - ரோஹித், பொல்லார்டு, ஹர்திக் அதிரடி!


மோ.கணேசன்

நேற்று, அபுதாபியில் உள்ள ஷேக் சையது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 13-வது ஐபிஎல் தொடரின் 13-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

பஞ்சாப் அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. மும்பை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மட்டும் கடந்த போட்டியில் விளையாடிய அஸ்வின் நீக்கப்பட்டு, கிருஷ்ணப்பா கவுதம் அணியில் சேர்க்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ஷெல்டன் கார்ட்டெலின் துல்லியமான வேகப்பந்து வீச்சில் டிகாக், ரன் ஏதும் எடுக்காமலேயே ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஓவர் மெய்டெனாக முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட்டுட்டுடன் முதல் மெய்டென் ஓவர் இதுவாகத்தான் இருக்கும்.

இவரையடுத்து ரோஹித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்கவிட்ட ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடர்களில் 5000 ரன்களைக் கடந்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரியை விரட்டினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவிக்க, டிஆர் எஸ் ரிவியூ முறையில் தப்பித்தார்  ரோஹித் சர்மா.

கார்ட்டெல் வீசிய 2 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய் வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஸான் ஜோடி சேர்ந்தார். 13 ஓவர் வரையிலும் கிஸான் மிக நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க, அணியின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.

13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. 14-வது ஓவரை கிருஷ்ணப்பா கௌதம் வீசினார். அவர் வீசிய முதல் பந்தினை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, கருண் நாயர் கையில் தஞ்சமடைந்தது. இஷான் கிஸான் கணக்கில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் உள்பட 32 பந்துகளில் 28 ரன்கள் அடங்கும். 

அடுத்து பொல்லார்டு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். 14 ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 15 ஓவரில் இருந்து இருவரும் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே சொல்லவேண்டும். மைதானாத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்க விட, ஆமை வேகத்தில் இருந்த ரன் விகிதம், ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.

16-வது ஓவரை ஜிம்மி நீஷம் வீச, அந்த ஓவரில் முதல் பவுண்டரியை விரட்டிய ரோஹித் சர்மா அரை சதத்தை எட்டினார். அதனை அடுத்து தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி எதிரணியை கலங்கடித்தார்.

17-வது ஓவரை முகமது ஷமி வீச, அவர் வீசிய முதல் பந்தை ரோஹித் சர்மா லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். சிக்ஸருக்கு போன பந்தை ஓடி வந்த வேகத்தில் பாய்ந்து பிடித்த கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்லும் முன்னர் அருகில் இருந்த ஜிம்மி நீஷமிடம் தூக்கிப்போட, அவர் கச்சிதமாகப் பிடித்து, ரோஹித் சர்மாவை வெளியேற்றினார். மேக்ஸ்வெல்லின் அட்டகாசமான பீல்டிங்கை பாராட்டியே ஆகவேண்டும். ரோஹித் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களாக இருந்தது.

பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா இணைய, வாண வேடிக்கை இருவரிடமிருந்தும் கிளம்பியது. யார் போட்டாலும் வாணவேடிக்கைதான்.  முகமது ஷமி வீசிய 19வது ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டரியும், பொல்லார்டு 3 பவுண்டரிகளையும் அடித்தனர். 20-வது ஓவரை கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச, பொல்லார்டுக்கு வசதியாகப் போனது. அந்த ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்களைப் பறக்க விட்டு, அணியின் எண்ணிக்கையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.

15 ஓவர் வரை தடுமாறிக் கொண்டிருந்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து அசத்தியது. பொல்லார்டு 20 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவர் மட்டுமே 31 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து 120 பந்துகளில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியினை, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பஞ்சாய்ப் பறக்க வைத்தனர்.

தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கிய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இவரை அடுத்து வந்த கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணப்பா கவுதம் 22 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக மும்பை அணியின் கிரென் பொல்லார்டு தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் "இந்த தோல்வி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று சொல்லமாட்டேன். ஆனால் வருத்தமடைய வைத்திருக்கிறது. முதல் 15 ஓவர்கள் மிகச்சிறப்பாகவே பந்து வீசினோம். கடைசி 5 ஓவர்கள்தான் மோசமாகப் போய்விட்டது. கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்பதை உணர்கிறோம். தோல்வியிலிருந்து புதிய உத்வேகத்துடன் மீண்டு வருவோம். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன" என்றார்.

வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா "சிறப்பான வெற்றி. பஞ்சாப் அணியின் பலம் எங்களுக்குத் தெரியும். முதலில் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடினால் போதும். கடைசி 5 ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதை கனகச்சிதமாக பொல்லார்டும், பாண்டியாவும் செய்து முடித்தார்கள். பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை கனகச்சிதமாக செய்து முடித்தார்கள். இதுதான் கேப்டனுக்குத் தேவை. 5000 ரன்களைக் கடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை. அணியின் வெற்றியே முக்கியம்" என்றார்.

மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற கிரென் பொல்லார்ட் "மகிழ்ச்சியாக இருக்கிறது. 15 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். காரணம் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்கள் மிச்சமிருந்தது. பயன்படுத்திக்கொண்டோம். பாண்டியாவின் அதிரடியும் அணிக்கு கை கொடுத்தது. சென்ற போட்டியில் தோல்வியடைந்திருந்தோம். அதில் இருந்த மீளவேண்டும் என்ற உத்வேகம், இந்த போட்டியில் வெற்றியைத் தந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் இது தொடரும்" என்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகளுடன் மொத்தம் நான்கு புள்ளிகளோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை அணி.பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியதால் 2 புள்ளிகளோடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இன்று நடைபெறும் 14-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

ipl2020 #MI_vs_KXIP #rohith_5000_runs, #ஐபிஎல்2020

இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க சீனாக்காரன் காத்துகிட்டிருக்கான் - காமராசர...1965-ல் காந்தியைப் பற்றி கர்மவீரர் காமராஜர்  பேசிய பேச்சு...

மகாத்மா காந்தி பிறந்தநாளன்று கர்ம வீரர் காமராசர் ஆற்றிய வீர உரை... இதில் காந்தியடிகளின் பெருமையையும்... சீனாவின் சதித்திட்டத்தையும் 
1965 லேயே அம்பலப்படுத்தி இருக்கிறார் காமராசர்...

காமராசரின் குரலைக் கேட்க விரும்புவோர் இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv #gandhi_jayanthi

Thursday, October 01, 2020

கொல்கத்தாவுக்கு இரண்டாவது வெற்றி - ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி!


மோ.கணேசன்

நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, ஐபிஎல் தொடரின் 12-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இரண்டு வெற்றியைப் பெற்ற தெம்புடன் ராஜஸ்தான் அணியும், முதல் போட்டியில் தோல்வியைக்கண்டாலும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற நம்பிக்கையில் கொல்கத்தாவும் களமிறங்கின.

கொல்கத்தா அணியிலும், ராஜஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இந்த போட்டியிலும் இடம் பெற்றனர்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன்சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் நேர்த்தியாக வீச அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ஜெயதேவ் உனத்கட் வீச, அந்த ஓவரில் சுனில் நரைன் கொடுத்த எளிதான கேட்ச்சைக் கோட்டைவிட்டார் ராபின் உத்தப்பா. அதன் பலனாக ஐந்தாவது ஓவரை உனத்கட் வீசும்போது, டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரும், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியும் விளாசினார் சுனில் நரைன். அடுத்த பந்திலேயே ஸ்டம்புகளை தெறிக்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டார் உனத்கட்.

இவரையடுத்து சுப்மன் கில்லுடன் நிதீஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். அவ்வப்போது அடித்து விளையாடிய நிதீஷ் ராணா 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 22 ரன்கள் எடுத்திருந்தபோது திவேட்டியா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

சுப்மன் கில்லுடன் ஆந்த்ரே ரஸ்ஸல் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அதுவும் நிலைக்கவில்லை. 12 ஓவரின் தொடக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்கொடுத்து வெளியேறினார் சுப்மன் கில். 34 பந்துகளில் 1 சிக்ஸ் 5 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் அவரது கணக்கில் அடங்கும். 

அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் நிலைக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சில் 1 ரன் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்திருந்தபோது அங்கிட் ராஜ்புத் பந்துவீச்சில் உனத்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 12 ரன்களில்  ஆட்டமிழக்க,  இயான் மோர்கன் தன் பங்கிற்கு 34 ரன்கள் விளாச, கமலேஷ் நாகர்கோட்டி 8 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. சீரான இடைவெளியில் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்தாலும், தினேஷ் கார்த்திக்கைத் தவிர மற்ற அனைவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்ததால் 20 ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. 

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்செய்யத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கம்மின்ஸின் அற்புதமான வேகப்பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து சஞ்சு சாம்சன் ஜாஸ் பட்லருடன் கைகோர்த்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்கள் எடுத்திருந்தபோதும், பட்லர் 21 ரன்கள் எடுத்திருந்தபோதும் ஷிவம் மாவியின் வேகப்பந்துவீச்சுக்கு பலியானார்கள். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா 2 ரன்கள் எடுத்திருந்தபோதும், ரியான் பராக் 1 ரன் எடுத்திருந்தபோதும் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

கடந்த போட்டியில் ஆட்டத்தையே மாற்றிக்காட்டிய ராகுல் திவேட்டியா இப்போட்டியில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 10.5 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய டாம் கரண் ஒரு புறம் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினாலும், மறுபுறம் வந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்தனர்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்ததால், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் டாம் கரண் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன், பேட் கம்மின்ஸ்,  குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும், வருண், நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தோல்விக்குப்பிறகு பேட்டியளித்த ஸ்டீவ் ஸ்மித்  “திட்டமிட்டபடி எங்களால் செயல்பட முடியவில்லை. தொடக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். எதிரணியினர் மிகச்சிறப்பாக விளையாடினர். களத்திற்கு ஏற்றபடி எங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இனிவரும் போட்டிகளில் சரி செய்து கொள்வோம்.” என்றார்.

வெற்றிக்குப்பிறகு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்  “இது சிறந்தபோட்டி என்று சொல்ல மாட்டேன். பல விஷயங்களில் இன்னும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுப்மன் கில், ரஸ்ஸல், இயான் மோர்கன் ஆகியோரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது. ஆர்ச்சர் அற்புதமாக பந்துவீசினார். டாஸ் நாங்கள் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருப்போம். அதிக ரன்களைக் குவித்து, பின் எதிரணியை கட்டுப்படுத்துவதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இளம் வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்றார்.

மேன் ஆப் தி மேட்ச் விருது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளரான ஷிவம் மாவிக்கு வழங்கப்பட்டது.

சிறப்பாக ஆடி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியைக் கண்டதால் 4 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாமிடத்திற்கு சரிந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 13-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

#IPL2020 #KKRvsRR #ஐபிஎல்2020