Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, December 24, 2012

எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்! - சில அபூர்வ தகவல்கள்..!




1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் கட்டி ஆண்டது என்றால் அது மிகையாகா. திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார்.

1972-ல் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து
1977-ல்ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு அசைக்கமுடியா சக்தியாக விளங்கினார். 11 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போது காலன் அவரை கவர்ந்து கொண்டான். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார். இன்று அவரது 25-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நான் சேகரித்த எம்.ஜி.ஆர் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் இங்கே...

* இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

* மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது

* எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு வந்தது 1932-ல். இங்கு வந்து வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும்.

* நாடக உலகில் அறிமுகமாகி திரு. கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமானார் எம்.ஜி.ஆர்.

* எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி. கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. இருப்பினும் மலைக்கள்ளன் படத்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார்.

* எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் வி.என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

* ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த தேதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917).

*  எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.

* எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும்.

*  எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.

* அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவரது வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத் தொகை 7 ஆகும்.

* எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137.

* இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

* எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ: பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம்.

* 1951-ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1963-ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் அவர்கள் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1967-ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘இதயக்கனி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1972-ல் எம்.ஜி.ஆருக்கு ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார். (கலைஞர் கருணாநிதி திரு எம்.ஜி‌.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தார். அந்த பட்டம் அ.தி.மு,க ஆரம்பிக்கும் வரை எம்.ஜி‌.ஆரின் பெயருக்கு முன்னால் போட்டு வந்தார்கள். புதுக் கட்சி ஆரம்பித்தவுடன், கே. ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் அதை புரட்சித் தலைவர் என்று மாற்றினார்)*

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா படம் என்ற பெருமையை ‘மலைக்கள்ளன்’ பெற்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

*  ‘அடிமைப்பெண்’ பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.

* சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987 –ல் மறைந்தார்.

Thursday, March 11, 2010

அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் சிறப்பு நாணயம்..!

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு வெளியிட்ட அண்ணா உருவம் பொறித்த சிறப்பு வெள்ளி நாணயம்

அன்று முதல் நேற்று வரை கிடைக்காமல் இருந்த அந்நாணயம், தற்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

ஐந்து ரூபாய் நாணயத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அவருடைய கையெழுத்து அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

நானறிந்த வரை இந்திய ரூபாய் நோட்டுகளில் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கண்டிருக்கிறேன். சுதந்திர இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் இடம்பெற்றதில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்ட நான், இந்திய நாணயங்களில் தமிழ் இடம்பெறவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய நீண்ட நாளைய வருத்தத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் போக்கி விட்டார். அதுவும் நாணய வடிவில்..!

இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள அண்ணா நாணயம்

நாணயத்தின் மறுபுறம் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வுருவத்தில் அண்ணா சிரித்தபடியே வலது புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உருவத்தின் கீழே அவரது கையெழுத்து தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகளில் ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த ஆண்டினையும், அவர் மறைந்த ஆண்டினையும் குறிப்பிடும் வகையில் 1909-1969 என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் ஒரு குறை இருப்பதாகக் கருதுகிறேன். நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும், அந்த நாணயத்தில் குறிப்பிடபட்டிருக்கும். இந்நாணயம் 2009ல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்நாணயத்தில் குறிப்பிடப் படவேயில்லை.

செப்டம்பர் 15-ம் தேதி இநாநணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் மறு நாள் எந்த ஒரு பத்திரிகையிலும் இந்நாணயம் பற்றிய செய்தியோ படங்களோ இடம்பெறவில்லை. அதைத் தேடித் தேடி ஏமாந்து போனத்தான் மிச்சம்.

சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.

அவர்கள் என்னிடம் ‘வெளியீட்டிற்காக வெள்ளியில் அச்சடிக்கப்பட்ட நாணயம் அது. சில நாணயங்கள் மட்டுமே அச்சடித்திருப்பார்கள், வெளிவர பல நாட்களாகும் என்றனர். அதற்கு இத்தனை மாதங்களாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்நாணயந்தை சில நாட்களுக்கு முன்பு, தாம்பரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மன்றாடிப் பெற்றேன். அங்கே இந்த நாணயம் இல்லை என்று விட்டனர். அங்கு பணியாளராக இருக்கும் அம்மையார் ஒருவர், அவருக்கு கொடுத்திருந்த இந்நாணயத்தை, (இது வெள்ளி நாணயமல்ல) எனக்கு கொடுத்தார். மிகவும் மகிழ்ந்து போனேன். பெயர் தெரியா அந்த அம்மையாருக்கு எனது நன்றிகள்.

காசாளரிடம் கேட்டதற்கு, இரண்டு நாணயங்கள், நான்கு நாணயங்கள் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மீதமுள்ள 496 நாணயங்களை எண்ண வேண்டுமே. ஆதலால் அப்படித் தரமாட்டோம், வேண்டுமெனில் மொத்தமாக (ரூ 5,000) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்படியென்றால் மட்டுமே நாணயம் கிடைக்கும் என்றார். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

என் போன்ற (வசதியற்ற) நாணயச் சேகரிப்பாளர்களுக்கு வங்கிகளே இப்படிச் செய்தால், நாணயங்களை சேகரிக்க முடியுமா..? பணம் படைத்தவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சேகரிப்பில் ஈடுபட வேண்டுமா..? வங்கிகள் மாற வேண்டும்..? மாறுமா..?

பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

 இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Thursday, November 19, 2009

உலகில் லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84வது இடம்..!

உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் சோமாலியா முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல் 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த அளவு புள்ளிகளைப் பெறும். அதிக புள்ளிகளைப் பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக
லஞ்சம் தாண்டவமாடும் நாடாக சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான், 5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8 புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.

நன்றி: Times of India and Dinakaran

Monday, November 16, 2009

ஹேமந்த் கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை..? இந்தியர்களால் கொல்லப்பட்டார்..?! - திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

ஹேமந்த் கார்க்கரே… பெயரைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறதா..? இந்தியாவின் மானம் காக்க, வீர மரணம் எய்திய மாவீரர். இவர் யார் என்று இன்னும் தெரியவில்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது, அவர்களை கொன்று குவித்து விட்டு, அங்குள்ளோரை காப்பாற்றும் போது தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் இந்த  ஹேமந்த் கார்க்கரே. அதுமட்டுமின்றி பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரராக இருந்து அந்த தாக்குதலை முறியடிக்க முன்னின்று நடத்திய வீரர்.

புல்லட் புரூப் எனப்படுகின்ற குண்டு துளைக்காத சட்டை அணிந்திருந்த கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இல்லை, அவர் உண்மையில் இந்தியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் – சிறு பிளாஷ் பேக்


தேதி : 26 செப்டம்பர் 2008. இடம் : மும்பை, தாஜ் (ஐந்து நட்சத்திர) ஹோட்டல்

பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக வந்த தீவிரவாதிகள் வழியெங்கும் துப்பாக்கி சூடு நடத்தியபடியே, தாஜ் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர். அங்குள்ளோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இத்தா‌க்குத‌லையடு‌த்து அ‌‌ங்கு பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அ‌திர‌ப்ப‌டை தாஜ் ஹோட்டலுக்கு ‌விரை‌ந்தது. அங்கு பய‌ங்கரவா‌திக‌ள் ‌பிடி‌த்து வை‌த்‌திரு‌ந்த 7 அய‌ல்நாட்டினர் உள்பட 15 பேரை ‌மீ‌ட்க அ‌திர‌டி‌ப்படை முற்பட்டது.

அப்போது பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம், அ‌திரடி‌ப்படை‌யினரு‌க்கு‌ம் இடையே ந‌ட‌ந்த து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌ல் பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். கார்க்கரே புல்லட் புரூப் சட்டை அணிந்‌திருந்தும், அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.

இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவா‌திகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அ‌ப்போது நட‌ந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவ‌ல்துறை அதிகாரியும் பய‌ங்கரவா‌திக‌ளுட‌ன் நடந்த சண்டையில் பலியானார்.

இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அ‌திரடி‌ப்படை‌யின‌ர் நட‌‌த்‌திய ப‌தி‌ல் தா‌க்குத‌லி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி உயிரோடு பிடிக்கப்பட்டான்.

இதுதான் அன்று நடைபெற்ற சம்பவங்கள்…

தற்போது விடயத்திற்கு வருகிறேன்...

மாவீரன் ஹேமந்த் கார்க்கரே பயன்படுத்திய புல்லட் ப்ரூப் ஜாக்கெட் பயன்படுத்தத் தகுதியற்றது என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன் தரம் பற்றி தெரிந்திருந்தும்… அது பயன் படுத்தத் தகுதியற்றது எனத் தெரிந்திருந்தும் நமது ஈனமிகு அதிகாரிகள் அதை அரசின் செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஊழல் செய்ததின் விளைவு… பல மாவீரர்களின் உயிர்களை அது குடித்து விட்டது.

இது குறித்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சந்தோஷ் டாண்ட்கர் (Santhosh Dountkar) மேற்சொன்ன திடுக்கிடும் தகவலகளை வெளியிட்டுள்ளார்.

இவரும், இவரது வழக்கறிஞரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒய்.பி.சிங் ஆகிய மூவரும் சேர்ந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் என்பது குண்டு, கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கினாலும், அது நம் உடலைத் தாக்காது. அந்த ஆடை உலோக இழைகளைக் கொண்டும், பைபர் இழைகக் கொண்டும் தயாரிக்கப்படுவது ஆகும். (படம் பார்க்க)



இதை அணிந்து கொண்டால் குண்டு நம் உடலைத் தாக்காதாவறு தற்காத்துக் கொள்ளலாம். வெடிகுண்டு நிபுணர்களும் இதைப் பயன்படுத்துவர். இது கழுத்திலிருந்து அடி வயிறுவரை பாதுகாக்கும் கவசம் போன்று இருக்கும். (இதிகாசத்தில் வரும் கர்ணனின் கவச குண்டலம் போன்று…)

அப்படிப்பட்ட கவசத்தை அணிந்திருந்தும், குண்டு துளைத்து கார்க்கரே இறந்தது ஏன்?. இதுபற்றி அறிந்து கொள்ள, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘தாக்குதலின் போது அணியப்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டவை, யாரிடம்,  எப்போது, எவ்வளவு கொடுத்து வாங்கப்பட்டது, என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்று நம்மவர்கள், நியாயமான கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளனர்.

இது, கடந்த 2008 டிசம்பர் மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்த்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்க்கான பதில் இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் கிடைத்தது. அதுவும் எப்படி..? ‘அதற்க்கான கோப்புகள் காணவில்லை என்பதால்… நீங்கள் கேட்ட தகவல்களை எங்களால் தர இயலவில்லை’ என்று..!?

அதாவது காவல் துறையின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அலுவலகத்திலேயே கோப்புகளைக் காணோமாம்… (நாம் ஏதேனும் காணவில்லை எனில் காவல் துறையை நாடுவோம்... அங்கேயே கோப்புகளைக் காணோமாம்... அடங்கப்பா... தலை சுத்துடாங்கப்பா...) இருந்தாலும் விடாது போராடிய நம்மவர்கள்.. பரவாயில்ல.. இருக்கும் வரையிலான தகவல்களைக் கொடுங்கள் என மீண்டும் முறையிட.. ‘ அதன் பிறகு, அவர்கள் பட்டும் படாத தகவல்களைக் கொண்ட கோப்புகளை அளித்தனர்.

அதனை ஆய்வு செய்த போதே…இதில் பலவிதமான ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதை நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அவர்கள் அளித்த விவரத்தின்படி நம்மவர்கள்  கண்டுபிடித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: (இத்தகவல்களை எல்லாம் நம்மவர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை ஆகும்)

1)    ஐம்பத்தி ஐந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டுமென்று மும்பை காவல் துறை ஆணையர் அலுவலகம், 2001 டிசம்பர் 6 அன்று டெண்டர் கோருகிறது.

2)    பூனேவிலிருக்கும் என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த  புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிப்பதில் எந்த ஒரு அனுபவமே இல்லாத நிறுவனமாக இருந்தும், தனது விலை விவர விண்ணப்பத்தை (கொட்டேஷனை) 2002, ஜனவரி 3-ம் தேதி சமர்ப்பிக்கிறது.

3)    2002, மார்ச் 30-ம் தேதி இந்த விலை விவர விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை காவல்துறை ஆணையரக அலுவகம் கடிதம் வாயிலாக தெரிவிக்கிறது.

4)    இதே தேதியில், என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் நிறுவனம் இந்த புல்லட் ப்ரூப் ஆடைகளை, காவல் துறை ஆணையரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக கடிதம் அனுப்பி இருக்கிறது.

5)   ஆனால், தணிக்கைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஜூன் 4, 2002 அன்றுதான் இந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதையடுத்த ஒரு மாதத்திலேயே 55 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளுக்குப் பதிலாக 110 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

6)    இதனுடைய மொத்த கொள்முதல் விலை ரூபாய் 24.71 லட்சம் ஆகும். ஆனால் 2004-ல்தான் இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வந்து சேர்ந்துள்ளன. இதன் பிறகே காசோலை மூலம் அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

7)    வந்து சேர்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை சோதனையிட்டதில், அவைகள் தரமற்றவை என்றும், அவைகளைப் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகும் என்றும் தெரிய வந்தது. ஆதலால் அந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளனைத்தும் அதே நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டன. பணமும் திரும்பப் பெறப்பட்டது. இது நடந்தது 2004. செப்டம்பர் 2.

8)    தரமற்ற பொருட்களை கொடுத்தற்காகவும், காலம் தாழ்த்தி கொடுத்ததற்காகவும் அந்த நிறுவனத்தின் மேல் அபாராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையை அந்த காவல் துறை ஆணையரக அலுவலகம் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏனோ அது எடுக்கப்படவில்லை.

9)    2004, டிசம்பரில் அதே நிறிவனம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளில் இருந்த குறைகளை சரிசெய்து விட்டதாகக் கூறி, அதே தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை ஒப்படைத்துள்ளது.

10)    அது முறையாக சரிசெய்யப்பட்டிருக்கிறதா..? பயன்படுத்த முடியுமா..? தரமானதாக இருக்கிறதா..? என்று யாரும் அதை சோதனை செய்யவில்லை. (சோதனை செய்ததற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை…) அப்படியே வாங்கி வைத்துக் கொண்டனர். அந்நிறுவனமோ கொடுத்த பணத்தை 2005, ஜூலை 14 அன்று வாங்கிக் கொண்டது.

இந்த தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத்தான் அன்று பல உயிர்களைக் காப்பற்றுவதற்க்காக ஹேமந்த் கார்க்ரே உள்ளிட்ட பல மாவீரர்கள் அணிந்து கொண்டு போரிட்டனர். அந்த வீரப்போராட்டத்தில் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகி அவர்கள் வீரமரணம் எய்தினர்.



(தாக்குதலுக்கு முன்பாக கார்க்கரே புல்லட் ப்ரூப் உடையை அணிந்து கொண்டிந்த காட்சி...)

இந்திய ராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரிக்கும் அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( Defence Research & Development Organisation: DRDO)) வின் தர அளவீட்டின்படி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் என்பது கழுத்திலிருந்து, அடிவயிறு வரை கவசமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாங்கிய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளோ பனியன் போன்ற அமைப்பில் இருந்தது.. (பார்க்க படம்…)

இந்த ஜாக்கெட்டுகள் தரமானவைகளாக இருந்திருந்தால்... அன்று அத்துனை மாவீரர்களின் உயிர்களும் பறிபோயிருக்குமா..? அவர்களுடைய திறமைகள் மண்ணோடு மண்ணாகியிருக்குமா..?

இப்போது சொல்லுங்கள்..? ஹேமந்த் கார்க்கரே போன்ற மாவீரர்களை தீவிரவாதிகள் கொன்றார்களா..? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த இந்தியர்கள் கொன்றார்களா..? வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும்.. இந்த ஈனப்பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…

இந்த வழக்கின் மூலம் நம்மவர்கள் … இது குறித்து தனியாக விசாரணைக் கமிஷன் அமைத்து… உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என மனு செய்திருக்கிறார்கள்.

ஏனோ… தானோ என்று கிடைத்த கோப்பிலேயே இவ்வளவு தகவல்கள்  என்றால், சரியான கோப்புகள் கிடைத்தால்..? இந்த நாய்களின்.. இல்லை… இல்லை… நாய்கள் நன்றி உள்ளவை… இந்த ஈனப் பன்றிகளின் ஈனச்செயல்கள் வெளிக்கொண்டு வந்துவிடமுடியாதா என்ன..?

இது தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்… இதற்குண்டானவர்களை கண்டு பிடித்து இதே புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை அணியவைத்து அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்…

இது போன்ற ஈனப் பன்றிகள் இருக்கும் வரை எம் தேசம் நிம்மதியாக வாழுமா..? வாழ்க எம் தேசம்..! வளர்க தேசத் துரோகிகள்..!

(இந்தச் செய்தியை எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு தமிழ் நாளிதழ்களும் வெளியிடவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (13.11.2009) வெளியிட்டுள்ளது. இதன் முழுமையான ஆங்கில மூலத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்…)

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/11/13&PageLabel=10&EntityId=Ar01001&ViewMode=HTML&GZ=T

(எனக்கு அவ்வளவாக ஆங்கிலப் புலமையில்லை, ஆன வரை முயற்சித்திருக்கிறேன்… தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்…)

செய்தி மற்றும் புகைப்பட உதவி: http://timesofindia.indiatimes.com/

Monday, August 11, 2008

கன்னடர்களுக்கு ஒரு தமிழனின் கடிதம்

வணக்கம் கன்னடத் தோழர்களே...

நலம், நலமே விழைய ஆவல்... என்றுதான் என்றுமே தமிழன் நலம் விசாரிப்பான். தம்மை நாடி வந்தோரை ஏற்றம் பெற வைப்பான். இதன் வழியாகவே ''வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'' என்று சிறப்புப் பெயரும் எந்தன் தமிழகத்திற்கு கிடைத்தது.

ஏன்யா... உங்களுக்கு வேற வேலையே இல்லையா... எப்ப பாரு தமிழனை நோண்டறதையே ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க... உங்க மொழி செம்மொழியாவதை நாங்க எங்கய்யா தடுத்தோம். அது உம்ம மொழி.. உன் விருப்பம்... என்னவேணா செஞ்சிக்கோ... யாரு கேட்டா..?

மத்திய அரசுக்கு ஆதரவு கொடு... நிர்பந்தி... என்ன எழவோ செய்... எதுக்குய்யா தமிழனை இழுக்குறீங்க... ஏமாந்தவன் தமிழன்கறதாலயா..?

ஏன்யா... எதுக்கெடுத்தாலும், உங்கபகுதியில இருக்குற தமிழர்களை அடிக்கறீங்க... வாகனங்களை கொளுத்தறீங்க... ஏன் உங்க மக்களை அடிக்க வேண்டியதுதானே... நீங்க எல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள்தானே.. மாக்களில்லையே..?

வீரப்பன் விவகாரத்துல ஒண்ணு சேருவீங்க.. தண்ணின்னு வந்துட்டா வெட்டு குத்துங்கிறீங்க... அந்த எழவையும்தான் எங்க மானமிகு..? அரசியல்வாதிகள் கிடப்பில போட்டுட்டாங்க... அப்புறம் என்னதான்யா உங்களுக்கு வேணும்.

சென்னைங்கிறது, இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று. உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்.. அது அவரது விருப்பம்... இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க தம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது... அப்படி, இங்குள்ள உச்சநீதி மன்றத்தில் உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்... சட்டப்படி அதை சந்திக்க திரணியற்ற, முதுகெலும்பில்லாத பிரணிகளாகவா ஆகி விட்டீர்கள்..? ஏன் இந்த பயம்..! அப்ப 'செம்மொழி... செம்மொழி'ன்னு சொல்றது மக்களுக்கு வித்தை காட்டவா..?

ஏன்யா... வாங்கு வங்கியையும், மக்களையையும் குறி வைத்து நீங்கள் பண்ணும் அலம்பல்களுக்கு... தமிழன்தான் பலிகிடாவா...

எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்தியுங்கள்.. உங்கள் சார்பில் சரியான ஆதாரங்களைக் காட்டினால் நீதிமன்றம் சரியான நீதி வழங்கப்போகிறது... அதைவிடுத்து தமிழனை தாக்குவது, தமிழர்களின் வாகனங்களை உடைப்பது என்று வன்முறையில் இறங்காதீர்கள்...

அப்படிச் செய்தால் தீவிரவாதிகளுக்கும், கொடூரவாதிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்... நீங்கள் செய்யும் அதே அயோக்கிய தனத்தை தமிழகத்திலுள்ள கன்னடர்களிடம் காட்டுவதற்கு கண நேரம் ஆகாது... ஆனால் நாங்கள் கண்ணியவாதிகள்... காத்துத்தான் பழக்கமே தவிர... அழித்தல்ல...

இனியேனும் உங்களது பேடித்தனமான வீரத்தை அங்குள்ள தமிழர்களிடம் காட்டாதீர்கள்... சாது மிரண்டால் காடு கொள்ளாது...

இப்படிக்கு

உங்களிடம் நட்பை எதிர்பார்க்கும் ஒரு தமிழன்.

(செம்மொழி
... செம்மொழி என்று கூவுகிறார்களே..? அதன் வரையறை, வரைமுறை என்னென்று தெரியுமா..? இதனை அறிய இதன் கீழ் உள்ள கட்டுரையை .. . அல்லது செம்மொழி மீது சொடுக்குங்கள்..!)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....

Monday, July 28, 2008

தொடர் குண்டு வெடிப்புகள்- மத்திய அரசின் கையாலாகத்தனம்..!

பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு... அஹமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு... 45க்கும் மேற்பட்டோர் பலி... 100 மேற்பட்டோர் படுகாயம்... நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா.. ஈராக்கில் இருக்கிறோமா... எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் தேசம்.

''........தண்ணீர் விட்ட வளர்த்தோம்..........
எங்கள் கண்ணீரல் காத்தோம்...'' என்று அன்றே முழங்கினான் முண்டாசு கவிஞன் பாரதி. இன்று அத்தேசத்தை வெடிகுண்டுகளுக்கும், அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்குமல்லவா இடம் கொடுத்து விட்டோம்...

அமைதிப் பூங்காவில் வெடிகுண்டு... அப்பாவி மக்கள் உயிரிழப்பு... இதற்கு மானங்கெட்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு அடங்கி விட்டது. அட அயோக்கிய அரசே... உங்கள் கண்டனம் யாருக்கடா வேண்டும்... எந்தன் சகோதரர்கள் அங்கே வெடிகுண்டிற்கு பலியாகி விட்டனரே... யார் அவர்களை திருப்பித் தருவார்கள்... உனது கண்டனம் அவர்களைத் திருப்பித் தருமா..? இல்லை உந்தன் கண்டனம்தான் அந்த தீவிரவாதிகளை திருந்தச் செய்து விடுமா..?

நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே 100 கோடி மக்களில் 60 கோடி மக்கள் உங்களை ஆட்சியில் ஏற வைத்தனர்... மக்களைக் காக்க வேண்டிய நீங்கள்... மனிதர்களை இரையாக்கி விட்டீர்கள்..? நாங்கள் என்னடா பாவம் செய்தோம்...

இதற்கு 'மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது' என்று எதிர்கட்சியினர் அறிக்கை விட்டுள்ளனர். அவ்வளவே... அவர்களுக்கு தேவை அந்த அரியணை...

ஐயா.. உளவுத்துறை செயலிழக்கவில்லை ... அவர்களுக்கு (ஆளும் மத்திய அரசிற்கு) சாதகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொண்ணனுடன், ஆளும் கட்சி அணுசக்தி கூட்டு, பொறியல், அவியல் என்ற விவகாரத்தில் பங்கு போட்டது. இதில் சம்பந்தி கிடைக்கவில்லையோ அல்லது சம்பங்கு கிடைக்கவில்லையோ (அவர்களுக்கே வெளிச்சம்) இடதுசரிகள் பின்வாங்கிவிட்டனர்.. ஆதரவு மறுத்தோம் உமக்கு... ஆட்சியை விட்டு இறக்கு... என வாய்ப்பந்தலிட்டனர்.

ஆளும்கட்சி விட்டார்களா... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்றார்கள்... அங்கே செயலாற்றியது உளவுத்துறை.. எந்த அமைச்சர் என்ன செய்கிறார்.. அவர் யாருக்கு சாதகமாக இருக்கிறார்... ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால்... அவரது (சுய) தேவைகள்..(?!) என்ன..? எப்படி அவர்களை ஆளுங்கட்சி தரப்பில் திருப்பலாம் என்று அத்துறையினரை முடுக்கி விட்டு வேலை வாங்கினர்.

விளைவு... ஆளுங்கட்சி பல கோடிகளை கொட்டியது... வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.. அவர்களை நம்பி வாக்களித்த ஏமாளி மக்களுக்கு குண்டுவெடுப்புகள் மூலம் வாய்க்கரிசி போட்டது.

ஆளுங்கட்சியின் கைப்பாவைகள்தானே அரசியந்திரங்கள்.. அப்புறம் எங்கே... அந்நியர் சதி, ஊடுருவல்... குண்டு வெடிப்பு... தீவிரவாதச் சதி... இவற்றையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்... அவர்களை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்...

'ஊசி இடம் கொடுத்தால்தான்... நூல் நுழைய முடியும்' என்பது நமது மூத்தோர்களின் (பட்டறிவால் கிடைத்த) சொலவடை. அதுபோல அந்நிய சக்திகளுக்கு இந்திய மண்ணில் இடமளித்தது முதல் தவறு... அவர்களை சுதந்திரமாக உள்ளே நடமாட விட்டது அதைவிட மாபெரும் தவறு...

விளைவு தொடர் குண்டு வெடிப்புகள்... கோவை, மும்பை, இந்திய பாராளுமன்றம், காஷ்மீர், பெங்களூர், அஹமதாபாத் என குண்டுவெடிப்பு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

பெங்களூரில் கட்டவிழ்து விடப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் அடுத்த நிமிடமாவது சுதாரித்திருக்க வேண்டாமா... இவைகளை ஏன் செய்யவில்லை... என்னாயிற்று உளவுத்துறைக்கு... காவல் துறைக்கு..? அவர்களை சரியான முறையில் வேலைவாங்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்னாயிற்று..?

'அட போங்க தம்பி.. அவனுங்க அரசாங்கத்தை காப்பத்தறதுக்கே... அவனுங்களால முடியல... ஆதரவு இல்லை..அதான் தொல்லை...ன்னு அமைச்சர்களை சந்தோஷப்படுத்தறானுங்க.. மக்களை காப்பத்தறதாவது... போப்பா...' என்று எனது பக்கத்து வீட்டு பெரியவர் இரு தினங்களுக்கு முன்பு சொன்னது இன்னும் என் மனதில் அசிரிரியாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு... அடுத்த தாக்குதல் அஹமதாபாத்தில்... அப்பாவி மக்கள் கைசிதறி, கால் சிதறி... எதனால் இறக்கிறோம் என்றுணரும் முன்னே மரணவாசலுக்குள் இழுத்துக் கொள்ள(ல்ல)ப்படும் அவலம்...எல்லாம் அரசின் மெத்தனத்தால் வந்ததுதானே...

மக்களைக் காப்பாற்றவே மக்களாட்சி... அழிப்பதற்கு அல்ல... உளவுத்துறையை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடுங்கள்... அந்நியர்களை இந்திய மண்ணில் கால் அல்ல அந்த கேடு கெட்ட நாய்களின் நிழல் கூட நம்மண்ணில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மீறினால் பார்ததும் அவர்களைக் கொல்லுங்கள்...

என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டது... 'அட மடையா... நாடாளுமன்றத்தையே குண்டு வீசித்தாக்கிய கொலைபாதகன் அப்சல் குருவுக்கு ஆயுதம் தாங்கிய காவல் வைத்து, ஊட்டமுடன் இருக்க கறி சோறு இட்டு காத்து வருகின்றனர்...

இம்மாதிரியான ஈனப்பன்றிகளை இன்னும் வைத்திருக்கிறது இந்த அரசு... இவன் இங்கு செய்தது போல் சவுதியிலேயோ, குவைத்திலேயோ குண்டுவெடிப்பை நிகழ்த்தி, மாட்டிக் கொண்டால்... இன்னேரம் அவனை விட்டு வைத்திருப்பார்களா.... அவனை உப்புக்கண்டம் போட்டு கைமா (அ) மவுத்தாக்கியிருப்பார்கள்... இந்தியாவாயிற்றே... போடா....

அவர்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவார்களே தவிர... தீவிரவாதிகளை அல்ல... பாவம் நமது தேசம் தாங்கிகள் (எமது இராணுவத்தினர்)... கடுங்குளிரென்றும் பாராமல், சூறாவளியென்றும் பாராமல்... கார்கில், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் தமது இன்னுயிரையும் ஈந்து காத்து வருகின்றனர்...

இங்குள்ள ஆட்சியாளர்களோ.. அவர்களை காவு கொடுப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களையும் காவு கொடுக்கின்றனர்... அவனவன் மடி நிறைந்தால் போதும்.. அடுத்தவன் நிலை எப்படி ஆனால் என்ன என்ற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களிடம்...' என்று குமுறுகிறது.

நாம் இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்து வந்த (அக்னி) ஏவுகணைகளின் வேகத்தை மிஞ்சியது... விலைவாசி... பெருந்தனக்காரனின் வயிறு போல் பணவீக்கம்... சோம்பித் திரியும் ஓநாய்கள் போல் அரசியல் வாதிகள்... அதில் அண்ட நினைக்கும் அரசு இயந்திரங்கள்...

ஏழை, பணக்காரன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். வேலை உள்ளவன், வேலை இல்லாதவன்... என ஏற்றத்தாழ்வு நிலை இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது... அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 8 மணி நேரம் குளுகுளு அறையில் இருந்தபடி அந்நிய நாட்டிற்கு பணிசெய்கிறவருக்கு 5 முதல் 6 லகரத்தில் சம்பளம். வாரம் இருநாள் விடுமுறை.. உல்லாச வாழ்க்கை...

24 மணி நேரமும் மக்களைக் காக்கும் (?) காவல்துறை நண்பர்களுக்கு 4 லகரத்தில் சம்பளம்... விடுமுறையா... மூச்..... (அதிலு பலர் மாமூல் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை...)

இப்படி இருந்தால் காவல் துறை ஏன் கள்ளத்துறையாக மாறாது... கயவர்களை விட்டுவிட்டு கண்ணியமானவர்களை அடிக்காது... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்... அவர்களுடைய சேவை மேம்படும்.

அந்நிய நாட்டு சக்திகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். எவ்வளவு அந்நிய செலவாணி கொட்டுகிறது என்றாலும் யாரையும் அனுமதியாதே... தீவிரவாதிகளை அழிக்க ஆயுதம் தூக்கு... விரைவான விசாரணை.. உடனடி தீர்ப்பு... நிறைவேறட்டும் தண்டனை.

ஒரு அப்சல்குருவை விட்டு வைத்ததன் விளைவு.. இன்று பல அப்சல் குருக்கள் இந்தியத்தாயின் மடியில் வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்... இவர்களை எப்படி ஒழிப்பது.. அழிப்பது...

இவ்விஷக்கிருமிகள் செய்யும் வேலையால், இவர்களது சமுதாயமே தலைகுனிகிறது... எங்கே நிமிரும் இந்தியா... எப்போது வல்லரசாகும்... என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்...

வாழ்க பாரத அரசியல்... வளர்க அதன் புகழ்... வாழ்க மக்கள் (நெற்றியில் பட்டை) நாமம்

Thursday, July 24, 2008

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

Tuesday, June 17, 2008

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)