Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, August 15, 2021

நாதஸ்வர இசையில் தேசியகீதம் | நாதஸ்வர இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து | nati...


ரசிகப்பெருமக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் நமக்கு இரு கண்களைப் போல, பள்ளி கல்லூரி விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாக்களாக இருந்தாலும் சரி... கட்டாயம் இந்த இரு பாடல்களும் பாடப்படும்.

இந்த சுதந்திர தினத்தில் கிராமிய இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கிராமிய இசையில் தேசிய கீதமும் பாடினால் எப்படி இருக்கும் என்ற உந்துதலே இந்த காணொலி உருவாகக் காரணம்.

கேட்டதும் இதற்கு ஏற்பாடு செய்த கரகாட்டக் கலைஞர் திருமதி. முத்துக்கண்ணம்மாவிற்கும், உடன் இதை செய்து முடித்து அனுப்பிய கல்குறிச்சி இ.எஸ்.ராஜ் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

மீண்டும் ஒருமுறை உங்களனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

மிக்க அன்புடன்

வாலு @ மோ.கணேசன்

Saturday, August 09, 2008

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழ் மொழியின் செவ்வியல் (செம்மொழி) தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.

மத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.

1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.

2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.

எனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.

1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.

2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.

3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.

வல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில், உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு, கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.

1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.

2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.

3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.

4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.

இந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.

செவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

பழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.

மேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை.

செவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

தமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.

வல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 - 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

(நன்றி: வா.செ. குழந்தைசாமி, தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)

Tuesday, July 29, 2008

தமிழுக்கும் பதினாறு பேறு..!

உலகில் 'கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி... நம் தமிழ்க்குடி' என்றார்கள் நம் தமிழாய்ந்த ஆன்றோர்கள். உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அச்சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உலகறிந்த உண்மை. அது என்றுமே செம்மொழிதான் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி'. ஆயினும் நமது நடுவண் அரசு. அதிகாரபூர்வமாக 12-10-2004-இல் தான் தமிழ் மொழி செம்மொழி என அறிவித்தது. அதன் சிறப்புகள் அரசியல் பின்புலம் காரணமாகவே வெளியே வந்தது போல் ஒரு மாயையும் ஏற்பட்டிருக்கிறது..(அதாங்க... எங்களுக்கு ஆதரவு தந்தா... உங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு ஆளும் மத்திய அரசு சொல்லிச்சே...)

'ஞாயிறைக் கையால் மறைப்பார் இல்' என்பது நம் முன்னோர் வாக்கு. அதுபோல தமிழ்த்தாயின் சிறப்பை இவர்கள் மறைத்தாலும். காலந்தாழ்த்தி அனுமதி வழங்கினாலும், அவளுக்குரிய சிறப்பை அவள் இழக்கமாட்டாள்.

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் (மட்டும்தான்) மொழிகிறார்கள். ஆனால் தமிழ் மரபில் பிறந்தவன் மொழிய மறுக்கிறான்...? (அவனுக்கு அது தெரிந்தால்நானே என்று கேள்வி கேட்பது புரிகிறது). ஆனால் பிற நாட்டினர் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியக்கிறார்கள், போற்றுகிறார்கள்.

தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். இவற்றைக் களைய 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு


(முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபட வேண்டாம். அவளை சிதைக்காமல், நவீன முறையில் வாழவிட்டால் போதும். நன்றி)

Monday, July 28, 2008

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' சரி..! அந்த பதினாறு..?

திருமணத்திற்கு செல்கிறோம். திருமணம் முடிகிறது. புதுமணத் தம்பதிகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என பெரியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது திருமண வீடே சிரிப்பினால் அதிரும்.

இதற்கு "பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதற்கு அது சரியான பொருள் இல்லை. பெரியவர்கள் கூறும் பதினாறு பேறுகளில் ஒரு பேறு குழந்தை ஆகும். மற்றவை எவை..? எங்கிருந்து வந்தது இந்த வாக்கியம்..? யார் சொன்னது..?

நமது தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர்தான் இதன் ஆசிரியர். அவர்தான், அவருக்கு பிடித்த அபிராமியிடம், மக்களுக்கு பதினாறு பேறுகளை வழங்கு என வேண்டினார்...

அச்செய்யுள்...

''சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில்
நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!''


--அபிராமி பட்டர்

பதினாறு
பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.

(இது குறித்து மேலும் அறிந்த தமிழ் கூறும் நல்லுலகவாதிகள், இதில் பிழையிருப்பின் தகுந்த சான்றுகளுடன் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.)

Wednesday, July 23, 2008

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்... அந்த பத்து எது?

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!

இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'

- நல்வழி, 26வது செய்யுள்

இதன்
பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.

ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!