Monday, April 28, 2014

கன்னிப்பேச்சு! - ஆனந்த விகடனில் வெளியான எனது குட்டிக்கதை


அமைச்சர் பொன்னுரங்கம் இன்று சட்டசபையில் பேசியது எல்லோரையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

சட்டசபைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என்றுமே வாய்திறக்காத அவர், இன்றுதான் வாய் திறந்திருக்கிறார். மற்றவர்களை வாய் பிளக்கவும் வைத்து விட்டார்!

"இன்று நாட்டில் எங்கே பார்த்தாலும் சாதிப்பிரச்னைகள், சாதிச் சண்டைகள்தான். பள்ளியில் சேரப்போனாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்தாலும் சரி... சாதிதான் பூதம் போல் குறுக்கே நின்று பயமுறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்துச் சாதிகளையும் ஒழித்து விட்டு, இந்தியன் என்கிற பொதுவான ஓர் இனத்தை நாம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் என்ன சாதி என்று கேட்பதைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..!'' இதுதான் சட்டசபையில் அவர் ஆவேசமாய் பேசியது.

சட்டசபையை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரே அழைத்துப் பாராட்டியது அமைச்சர் பொன்னுரங்கத்தைக் குஷிப்படுத்தியது.

''இலவச வீடுகள் வழங்குறதுல அந்தச் சாதிக்காரனுக்கு, இந்தச் சாதிக்காரனுக்குன்னு ஆயிரம் சிக்கல் இருக்கு. அதை இனிமே நீங்கதான் கவனிக்க போறீங்க...'' என்று முதல்வர் சொல்லவும், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னுரங்கம். 

தனது அலுவலகத்தில் பி.ஏ.வுக்கு சரமாரியாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம். 

''எலேய்... இலவச வூடு தர்றமுல்ல... முதல்ல நம்ம சாதிக்காரனுக்கு முன்னுரிமை குடுத்துடு. அப்புறமா மத்த சாதிக்காரனுக்குப் பார்த்துக்கலாம்!''

''என்ன தலைவா... சட்டசபையில சாதிக்கு எதிரா அவ்வளவு காட்டமா பேசினீங்களே..?''

''அட, யார்ரா இவன் புரியாதவன். அப்படி பேசினதாலதானே வீட்டு மனைகள் ஒதுக்குற அதிகாரமே என்கிட்ட வந்துச்சு. இதுக்குப் பேருதாண்டா அரசியல்! சரி சரி... வேலையைப் பாரு!''

பி.ஏ.வுக்கு தலை சுற்றியது.

****************************

(ஆனந்த விகடன் குழுமத்தில் மாணவ பத்திரிகையாளராக இருந்த போது, நானெழுதிய ஒரு பக்க கதை, 30.09.2001 தேதியிட்ட ஆனந்த விகடனில், 105-ஆம் பக்கத்தில் வெளியானது. இந்த கதை எழுதி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலை இப்போதுள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது என்பதால், இங்கே பதிவிலிடுகிறேன்.

நன்றி: ஆனந்த விகடன்)

Sunday, April 06, 2014

எனது பிறந்தநாளுக்கு கூகுள் சொன்ன வாழ்த்து!

கூகுள் தனது பயனாளர்களின் பிறந்தநாளிற்கு அது வாழ்த்து தெரிவிக்கிறது... இன்று எனக்கு அது வாழ்த்து தெரிவித்திருக்கிறது... கூகுளுக்கு எனது நன்றி...

நமது ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துவிட்டு, கூகுள்.காம் கொடுத்துப் பார்த்தால், பர்த்டே கேக் வடிவில் கூகுள் இருக்கும். அன்றைய தினம் உங்கள் பிறந்தநாள் எனில் (ஜிமெயிலில் உங்கள் சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும்), அன்று உங்களுக்கும் இந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கும்... இதுபோன்ற விஷயங்களால்தான் கூகுள் என்றும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது... 

கூகுள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனேன்... நீங்களும் பாருங்களேன்...


Friday, April 04, 2014

கவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு



ஏவிஎம் ஸ்டுடியோவின் நான்காவது ப்ளோரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு கவுண்டமணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ’49ஓ’ படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இடைவேளையில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறார் கவுண்டமணி.



அவரைத்தேடி கருத்த உருவம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அடங்கொக்கமக்கா… கருங்கரடி ஒண்ணு நம்மள தேடித்தான் வருது… ‘’அடியேய் சிகப்பி… எடுறி அந்த துப்பாக்கிய… இன்னிக்கி இந்த கரடியவாச்சும் சுட்டு நான் யாருன்னு ஊருக்கு காட்டுறேன்…’’ என்று பழைய படப்பிடிப்பு ஞாபகத்தில் தன்னையறியாமல் சவுண்ட் விடுகிறார்.

அந்த கருப்பு உருவம் கவுண்டமணியை நெருங்கும்போது கூட அவருக்கு வந்தது யாரென்று பிடிபடவில்லை.

வந்தவர் ஆதிவாசி போல் பார்வைக்கு தென்படவே, ‘யார் இந்த ஆதிவாசி? எதுக்கு என்னை தேடிகிட்டு வரான்? ஒன்னும் புரியலையே என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடி, தன்னை நோக்கி வரும் ஆதிவாசியையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 



அருகில் ஆதிவாசி வந்ததும், திடீரென்று சுதாரித்துக் கொண்ட கவுண்டமணி ‘ஓஹோய்… ஒருவேளை இவன் (சூரியன் பட) குஞ்சாணி குரூப்பை சேர்ந்தவனா இருப்பானோ… ரெண்டு மூணு செக்ஸி கேர்ள்ஸ் சைடுல வச்சிகிட்டு… ‘சாமி… பூ மிதிக்க வாங்க சாமி’ன்னு கூப்பிட வந்துருப்பானோ…? இவனுங்ககிட்ட ஒருதரம் சிக்கி சீரழிஞ்சதே போதும்டா சாமி…’’ என யோசித்துக் கொண்டே, ஆதிவாசியைப் பார்க்கிறார். 

ஆதிவாசியின் கையில செல்போன் இருப்பதைப் பார்த்ததும்… டோய்… பாக்க ஆப்ரிக்கன் மாதிரி இருக்கான். அவங்கிட்ட செல்லுடோய்… ஒருவேலை செல்லுலயே கான்டாக்ட் வச்சிருப்பானோ.. நாமதான் போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆன டெலிபோன்ல இல்ல பேசுவோம்… இவன் எப்படி நம்மள கண்டுபிடிச்சான். ஒரு வேள செட்டியார் மதர் சொல்லியிருப்பாங்களோ… என் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 

அப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
அந்த உருவம் ‘அண்ணே…’ என்ற குரல் கொடுக்கிறது.



குரலைக் கேட்டதும் ‘இந்த குரலை நான் எங்கேயே கேட்டிருக்கேனே… என கவுண்டமணி யோசித்துக்கொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த உருவம் ‘’அண்ணே… அண்ணே…’’ என்று குரல் கொடுக்கிறது.

“ஐயோ… அம்மா… கருங்கரடி பேசுது… என்னை வேற அண்ணேண்ணு கூப்பிடுதடா சாமி…” என்று கதறியபடி தலைதெறிக்க ஓடப்போனவரை, ஆதிவாசியின் குரல் சட்டென்று தடுத்துநிறுத்தியது.

அண்ணே… நான்தான்னே ஒண்டிப்புலி செந்திலு…

அடேய்… டிபன்பாக்ஸ் தலையா… நாயே நீயாடா… ஏன்டா இப்படி ஆதிவாசி மாதிரி வந்து என்னை பயமுறுத்துற… என்ன சொன்ன? நீ ஒண்டிப்புலி செந்திலா…. இல்லடா… எங்கிட்ட ஒதைவாங்குன செந்திலு… 

அண்ணே… எப்பவுமே நான் உங்ககிட்ட ஒதை வாங்குன செந்திலுதான்…
என்னடா நாயே இது கோலம்… குஞ்சாணி குரூப்புதான் மறுபடியும் வந்துடிச்சோன்னு பயந்துட்டேன்டா…

இல்லண்ணே ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு எங்கிட்ட வந்து ‘ஆதிவாசியும் அதிசய செல்பேசியும்’ படம் எடுக்கறோம். நீங்கதான் ஹீரோன்னானுங்க… அதுக்காக போட்டோ எல்லாம் எடுத்தானுங்க… அதுக்கப்புறம் என்ன ஆச்சின்னே தெரியலண்ணே… ஆளுங்களையே காணோம். நானும் அப்போ இருந்து இதே காஸ்ட்யூம்லதான் ஸ்டுடியோ ஸ்டுடியோவா அவங்களை தேடி சுத்தறேன். 

நீ நரியாச்சேடா… உன்னை வச்சி படம் எடுக்கறன்னு சொன்னவன், முதல் நாளே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடிட்டானே… உன் முகராசி அப்படி..?

அண்ணே… எனக்கு வாய்ப்பு யாருமே தரமாட்டேங்கறாங்க…

பின்னே… உன் வாய வச்சிகிட்டு சும்மா இருந்தாதான… உனக்கெதுக்கு நாயே அரசியல்… அரசியல்வாதிங்கதான் அஞ்சிக்கும் பத்துக்கும் மேடையேறி கத்துறானுங்கன்னா… உனக்கேண்டா நாயே இந்த வேலை… சினிமாக்காரன் அரசியலுக்கு வந்து சாதிக்கறதெல்லாம் ஹீரோக்களுக்கு சரியாகும்… உனக்கெல்லாம் சரியா வருமா..? 

அண்ணே… தெரியாம பேசிபுட்டேண்ணே…

நீ தெரிஞ்சி பேசினியோ… தெரியாம பேசினியோ… இப்ப என்னையே இண்டஸ்ட்ரியில மதிக்க மாட்டேங்கறானுங்க… ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்தேன். இப்ப ஒரு படத்துக்கே சிங்கியடிக்கிறேன்…

அண்ணே… அண்ணே… இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கண்ணே… என்று செந்தில் கவுண்டமணியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அரச உடையில் ஒருவர் வந்து நிற்கிறார்.

யாருங்க நீங்க..? என்று செந்தில் அவரைப் பார்த்து கேட்க, ‘’என்னைத் தெரியல… என்னைத் தெரியல…’’

நீ என்ன அமெரிக்க அதிபராடா… பார்த்த உடனே தெரிஞ்சுகறதுக்கு… நீ யார்னு தெரியலன்னுதான கேக்கறான்… சொல்றா நாயே என்று கவுண்டமணி எகிற… வந்தவர் ‘’நான்தான் தெனாலி’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், இடைமறிக்கினார் கவுண்டமணி.


சொரி புடிச்ச பெருச்சாளி மாதிரி இருக்க… நீ தெனாலியா?… கமலுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியமாடா… 

ஐயோ… நான் தெனாலி ராமன்னு சொல்ல வந்தேங்க… என்றவரிடம்
"அப்படி யாரையும் எங்கண்ணன் கேள்விப்பட்டதில்லையே?" என்று பக்கத்திலிருக்கும் செந்தில் கேள்வியை வீசுகிறார்.

‘’ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’’ என்கிறார் வந்தவர்.

அடங்கோ… என்கிட்டயே டக்கால்டி வேலை காட்டுறியா… நீ யார்ரான்னா..? ராமன், சோமன்னுகிட்டு… அப்ப நாங்கள்ளலாம் ராவணனாடா… என்று கோபம் பீறிட்டு வந்தவரை உதைப்பதற்கு காலைத் தூக்குகிறார் கவுண்டமணி.

அண்ணே… அண்ணே… உணர்ச்சி வசப்படாதீங்க… நாந்தான்னே… நாந்தான்னே… என வந்தவர் அலறுகிறார்.

இந்தக் குரலையும் எங்கேயோ கேட்டிருக்கேனே… என்று மண்டையைக் கீறியபடியே யோசித்தபடியே... நான்தான்னா.. யார்ரா நீ.. என்கிறார் கவுண்டமணி.

அண்ணே… நான்தான்னே உங்க வடிவேலு… வடிவேலு…

அடேய் வடிவேலு நீயாடா… நீ எதுக்குடா இங்க வந்த…

நான் வந்த கதைய சொல்லவா..? நொந்த கதையை சொல்லவா….ஆஆஆஆஆ… என்று ஒப்பாரி வைக்கிறார் வடிவேலு.

அடேய் ஆப்ரிக்கா குரங்கே… ஏண்டா இப்ப ஒப்பாரி வைக்கிற…
என்னத்தடா சொல்ல வந்த… சொல்லு..?

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால சொல்லுவேன்…
அப்ப சொல்லாத…

இந்த நாயி உங்கள விட்டா… வேற யாருக்கிட்டண்ண போயி சொல்லும்..
அப்ப சொல்லு…

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வாயிலேயே அடிக்கிறார் கவுண்டமணி.
மவனே… இதுக்கு மேல ஏதாச்சும் பேசின… இந்தா நிக்கறான் பாரு ஆதிவாசி… இவனுக்கு உன்ன மனுசக்கறியாக்கிடுவேன்.
விஷயத்த சொல்றா…

அண்ணே… உங்களுக்கு அப்புறம் ஆஹா ஒஹோன்னு வளர்ந்தண்ணே… ஒரு வீணாப்போனவனால வீதிக்கு வந்துட்டண்ணே… வீதிக்கு வந்துட்டண்ணே…

சொல்றா நாயே….

கேப்டனை எதுத்துதான் அரசியலுக்கு போனேன். மேடை மேடையா பேசினேன்… ஊரு ஊரா போயி பேசி, சின்னப்பட்டு, சீக்குப்பட்டு, அடிபட்டு, ஆவேசப்பட்டு, அசிங்கப்பட்டு…... என்று இழுத்துக் கொண்டே போக...

இடையில் குறுக்கிடும் கவுண்டமணி 'பிஞ்ச செருப்பாலயே அடிப்பேன்… சொல்ல வந்தத சொல்றா…'

'எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணே… என் சோலிய முடிச்சுப்புட்டாங்கண்ணே…''

நான் அப்பவே சொல்லல… அரசியல்ல இதெல்லாம் சாதரணம்னு… சரி விடு… இப்ப என்ன வேணும் உனக்கு…

அண்ணே… அரசியலே வேணாம்னு… அவனுக்கு ஓட்டுப் போடு… இவனுக்கு ஓட்டுப் போடுன்னு பேசிப் பேசியே என்னை வீணாக்கிக்கிட்டேன்.

பின்னே… அம்மா பாவம் சும்மா உடுமா..?

நீங்கதான் 49 ஓ படத்துல நடிக்கறீங்களே… யாருக்கும் ஓட்டு போடாதீங்கன்னு சொல்றதாமே இந்த ’49 ஓ’. அதான் இந்த கருத்தை சொல்றமாதிரி, இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தீங்கன்னா… இந்த வடிவேலு உங்க காலுக்கு செருப்பா இருப்பண்ணே…

நம்மள காலி பண்றதுக்கு இந்த ரெண்டு தடிப்பசங்களும் வந்திருக்கானுங்களே… என்று மனதில் நினைத்துக் கொண்ட கவுண்டமணி, ‘டேய் நானே இப்பவோ அப்பவோன்னு நடிச்சுகிட்டிருக்கேன். இந்த வயசுக்கப்புறமும் என்னை ஹீரோவா வச்சு படம் எடுக்குறாங்க. என்னை ஆள விடுங்கடா சாமி… அவன் அவன் வேலைய பாத்துகிட்டு போயிடுங்க… மீண்டும் என்கிட்ட வந்தீங்க அடிச்சே கொன்னுடுவேன்… இந்த டைரக்டர் வேற நம்மள கூப்பிட மாட்டேங்கறானே… என்ற கவுண்டமணி நினைத்துக் கொண்டிருக்கையில்…

சார்… ஷாட் ரெடி.. வாங்க என்று டைரக்டரிடமிருந்து குரல் வர, ‘ஐ யாம் எஸ்கேப்’ என்றபடி தலைதெறிக்க ஸ்டுடியோவிற்குள் ஓடி மறைகிறார் கவுண்டமணி.

(இது எனது கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல...)

Thursday, March 27, 2014

குக்கூ திரைப்படம் - கோட்டோவியம்

நான் ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 2001-ல் மாணவ பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ராஜு முருகன் விகடனில் உதவி ஆசிரியராக இருந்தவர்... அவருக்கு நான் ஜுனியர்...

அவரின் படைப்புதான் தற்போது திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குக்கூ' திரைப்படம். அவருக்காக நான் வரைந்த கோட்டோவியம் இங்கே...


Friday, January 31, 2014

கல்லூத்துப்பட்டி ஆலமரம்!



உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, வானம் மேகங்களின்றி நிர்வாணமாயிருந்தது. அந்நேரத்தில் ஒருவன் ஆவேசமாய் கல்லூத்துப்பட்டியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். வழியெங்கும் பொட்டல் காடாய் கிடக்க, அவன் ஓடி வருகையில் களிமண் புழுதி, அவன் கழுத்து வரை பறந்தது. 

கல்லூத்துப்பட்டி என்றாலே பசுமை போர்த்திய வயல்வெளிகளும், வானை முட்டும் வாகை, கமுகு, தேக்கு, அரசு, ஆலம், தைல மரங்களும்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு மரத்திற்கும் நூறு வயது இருக்கும். மும்மாரி மழை பொழிவது போல் வருசம் தவறாமல் அப்பகுதிகளில் மழை பெய்து விடும். இதனால் அந்த கிராமம் எப்போதும் பசுமையாகவே இருக்கும். 200 தலைக்கட்டுக்கள் கொண்ட கிராமம் அது. தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. கல்லில் கூட நீர் ஊற்றெடுக்கும் என்பதால்தான் அந்த கிராமத்திற்கு கல்லூத்துப்பட்டி என்றே அக்காலத்தில் பெயரிட்டிருந்தார்கள். அச்சிறப்பு வாய்ந்த கிராமமே மழையில்லா காரணத்தால் வறண்டு போய்க் கிடக்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஊருக்குள்தான் அவன் காற்றைப் போல் நுழைந்து கொண்டிருந்தான்.


ஊருக்குள் நுழைந்ததுமே… “ஐய்யய்யோ…. எல்லோரும் வாங்கடா... நம்ம வீராசாமி ஐயாவை கோனேரிப்பட்டிக்காரனுவ வெட்டிப்புட்டானுகடா… எலேய்… நம்ம ஐயாவை வெட்டிப் புட்டானுகடா… வாங்கடா…” பெருங்குரலெடுத்து கத்தியபடி மேலத்தெருவுக்குள் ஓடினான். 

வீராசாமி ஐயாவின் பேரைச் சொன்ன அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஐம்பது பேர் கொண்ட கூட்டம் கத்தியும், கம்புமாக அவனைச் சூழ்ந்து கொண்டது.

அப்படி கூட்டம் உடனே கூடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட இருநூறு குடும்பங்கள் கொண்ட கல்லூத்துப்பட்டிக்கு வீராசாமி ஐயாதான் ஊர்ப் பெரியவர். அக்காலத்துப் படிப்பில் அஞ்சாங் கிளாஸ்தான் என்றாலும் அவரது சொல்லிலும், செயலிலும் ஐ.ஏ.எஸ் கூட தோற்றுப் போவார். அவ்வளவு அனுபவசாலி. இளம் வயதிலேயே அவரது மனைவி இறந்து போனாலும் கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல் ஊருக்காகவே வாழ்ந்து வருபவர். சுருங்கச் சொல்லணுமென்றால் கல்லூத்துப்பட்டியின் ஆலமரம் அவர்.

ஊருக்குள் யாருக்கேனும் பணப்பிரச்சினை என்றாலும், கல்யாணம் காட்சி என்றாலும், பஞ்சம் பிழைக்க வந்தாலும் எல்லோரும் பணம், பொருள், தானியமணி என்று அனைத்தையும் கொடுப்பவர். அதனால் அவருக்கு ஊருக்குள் எப்போதுமே தனி மரியாதை. 

அவருக்கு ஏரியை ஒட்டி இவருக்கு ஐந்து ஏக்கர் நிலமும், வற்றாத இரண்டு கிணறுகளும் இருக்கின்றன. எப்பஞ்சத்திலும் கல்லூத்துப்பட்டியிலுள்ள கிணறுகள் வற்றிப் போனதில்லை. ஆனால் இந்த வருசம் மழை பொய்த்ததால் எல்லா கிணறுகளும் வற்றி விட்டன. ஆனால் வீராசாமியின் இரண்டு கிணறுகள் மட்டும் வற்றாத அமுதசுரபியாய் இருந்தன. கல்லூத்துப்பட்டி கிராமத்தின் தாகத்தை தீர்ப்பதற்கு, தனது கிணற்றுத் தண்ணீரை தாராளமாக தந்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

ஊரில் நல்லது, கெட்டது எதுவானாலும் வீராசாமி ஐயாவின் காதுக்கு வராமல் இருக்காது. கோவில் திருவிழா... ஊர்க்கூட்டம் என எதுவானாலும் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் அங்கு எல்லா காரியமும் நடக்கும். ஊர்ப்பிரச்சினை என்றாலும் கூட அவரிடம்தான் வருவார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அப்படித்தான் ஊரே திரண்டு, அவரது ஓட்டு வீட்டிற்கு முன்பு வந்து நின்றிருந்தது. ஊர் மக்களின் சத்தம் கேட்டு, வீராசாமி தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

அறுபதைத் தாண்டிய வயது என்றாலும், வைரம் பாய்ந்த கட்டையாக இருந்தார். மீசை முதற்கொண்டு நரைத்துப் போயிருந்தாலும், மீசையை வானம் பார்க்கும்படி வளர்த்து விட்டிருந்தார். கறுத்த உடம்பு. அக்காலத்திலேயே கல்லும், சுண்ணாம்புக் கலவையுமாய்க் கிடந்த ஐந்து காணி நிலத்தை, ஒத்தை ஆளாக இருந்து சீர்படுத்தி, வெள்ளாமை செய்தவர். வேட்டியும், சட்டை இல்லாத உடம்பில் துண்டோடு திண்ணையில் அமர்ந்தார்.

“என்னப்பா விஷயம்… ஊரே ஒண்ணு கூடி வந்திருக்கீங்க?” என்றார் வீராசாமி.

“ஐயா… உங்களுக்கு தெரியாததில்ல… நம்மூரைப் பொருத்தவரைக்கும் எந்த வருசமும் மழை பொய்க்காது. இந்த வருசம் மழை பொய்ச்சிடுச்சி. ஊரே தண்ணியில்லாம காய்ஞ்சு கெடக்கு. ஊரு சனம் தண்ணிக்கு பறவா பறக்குது. இத்தனை வருசம் இல்லாம, இந்த வருசம் இப்படி ஆயிடிச்சுன்னா… ஏதோ… சாமி குத்தமோன்னு நினைக்கறோம். அதான், திருவிழா எடுக்கலாம்னு பாக்கறோம்’’ என்றார் மேலத்தெரு பொன்னுச்சாமி.

“ம்ம்ஹும்…” என்ற அசட்டு சிரிப்பு சிரித்தார் வீராசாமி.

“எதுக்கு ஐயா சிரிக்கிறீங்க?” என்றார் நாகமணி பூசாரி. 

“ஏன்யா… ஊரே பஞ்சத்துல கெடக்கு… தண்ணியில்லாம நிலமெல்லாம் வயிறு வெடிச்சி கிடக்கு… அதுக்கு ஏதேனும் வழி பண்ணுவிங்களா… காசில்லா நேரத்துல போய் சாமிக்குத்தம்… திருவிழான்னு சொல்லிகிட்டிருக்கீங்க…’’ என்று ஊர்மக்களைப் பார்த்து கேட்டுவிட்டு, பூசாரி பக்கம் தன் பார்வையைத் திருப்பி, “யாரு… நாகமணி செஞ்ச வேலையா இது..?” என்றார்.

நாகமணி தலையைக் குனிந்து கொண்டார்.

“எலேய்… கல்லூத்துப்பட்டின்னாலே கல்லுல கூட ஊத்தெடுக்கும்டா.. அப்படியாப்பட்ட ஊரு இப்போ காய்ஞ்சி போச்சு… அதுக்கு என்ன காரணம்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்கடா…

பக்கத்து கிராமமான கோனேரிப்பட்டியில போன வருசம் தொடங்குன மினரல் வாட்டர் கம்பெனி, நிலத்தடி நீரை எல்லாம் ஒண்ணுக்கு பத்து போர் போட்டு வருசம் முழுக்க உறிஞ்சிகிட்டிருக்கு… வருசம் முழுக்க உறிஞ்சி எடுத்தா பூமித்தாய் என்னதாண்டா பண்ணுவா? அவ ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி அந்த கம்பெனி, நிலத்தடி நீரை உறிஞ்சிகிட்டிருக்கு.

நம்ம கெணத்துகள்ல தண்ணி ஊறுதுன்னா… அது அவளா பாத்து கொடுக்கற கொடை. நாம எப்பவும் அவ ரத்ததை உறிஞ்சினதுல்ல. நம்ம ஏரியில எப்பவும் தண்ணி வறண்டு போனதும் இல்ல. நம்ம முப்பாட்டன் காலத்துல கட்டின ஏரி, நேத்து வரைக்கும் நம்ம கிராமத்துக்கு பசுமையை கொடுத்துச்சு, நிலத்தடி நீர் வறண்டு போகாமயும் பாத்துக்கிச்சு. இப்ப எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. 

வானம் பொய்த்தாலும் நம்ம பூமி பொய்க்காம இருந்துச்சுடா… அப்படிப்பட்ட பூமியே மலடாக்கிடுச்சி அந்த மினரல் வாட்டர் கம்பெனி. மொதல்ல அந்த கம்பெனியை நம்ம கிராமத்துல அமைக்கறதாத்தான் இருந்தானுவ. அதுக்கு அந்த ஊரு பஞ்சாயத்து பிரசிடெண்டு தூது வந்தான். ஆனா நாந்தான் இங்க அமைக்க வேணாம்னு சொன்னேன். 

அதுக்கு அவன், ‘இது நம்ம எம்.எல்.ஏ.வோட கம்பெனிதான். இந்த கம்பெனிய அமைச்சா நல்ல லாபம் கெடைக்கும். உங்க ஊரு பயலுவலுக்கும் வேலை கெடைக்கும். நீங்க சொன்னதான் இங்க இருக்க பயலுக கேப்பானுக’ன்னான்… 

நம்ம அம்மா கொடுக்கற பாலை, நமக்கே தெரியாம திருடி எடுத்து, பாட்டில்ல அடைச்சி, நம்மகிட்டயே வெலைக்கு விக்கிற வேலைய பாக்கறதுக்காக எங்கிட்ட கேட்டான். தண்ணிங்கறது நம்மோட உசுரோட கலந்த ஒண்ணு. அதை விட்டுக் கொடுத்துட்டா… நம்மையே வித்துட்ட மாதிரி… அதெல்லாம் சரிப்படாது… மீறி எங்க கிராமத்துல பண்ணணும்னு நெனச்சா… ஒருபயலக் கூட விட்டு வைக்க மாட்டோம். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்னு சொன்னேன்.

வீட்டுக்கு வர சீதேவிய வேணாம்னு சொல்றீங்க… நான் எங்க கிராமத்துலயே அந்த கம்பெனிய வச்சிக்க சொல்லிடறேன். இந்த ஊர்ல எப்பவும் தண்ணி வத்தாம இருக்குமேன்னுதான் கேட்டேன். எங்க ஊர்ல தண்ணி கெடைக்காதா என்ன? அப்டின்னுட்டு போயிட்டான்.’’ என்றார் வீராசாமி.

“அந்த கம்பெனிய இங்க அமைக்க விடாம பண்ணியது நீங்கதானா? அது இங்க அமைஞ்சிருந்தா… இப்ப இருக்க பஞ்சத்துக்கு வயல் வேலைதான் இல்ல. அந்த வேலை இருந்தாலாச்சும் பொழச்சிக்கிட்டிருக்கலாம்ல. வீணா கெடுத்துப்புட்டீங்களே பெரிசு?” என்று அந்த கிராமத்து இளவட்டப் பயல்களில் ஒருவனான கதிரேசன் கேட்டான்.

“கதிரேசா… அந்த கம்பெனிய இங்க அமைச்சிருந்தா.. அந்த கம்பெனி இங்க வந்த அடுத்த மாசமே, நம்ம ஊர் வறண்டு போயிருக்குமுடா… பக்கத்து கிராமங்கறதால ஒரு வருசம் தாக்குப் பிடிச்சிருக்கு… இதுமட்டுமில்லடா, உங்களுக்குன்னு தனியா பத்து லட்ச ரூபா வாங்கித் தரேன். வாங்கிக்கோங்க… எனக்கும் பத்து லட்ச ரூபா கெடைக்கும்… இந்த கிராமத்துலதான் தண்ணி எப்போதும் கெடைக்கும்ல.. என்ன சொல்றீங்கன்னு அப்பவே அவன் என்கிட்ட கேட்டான். நான் அதுக்கு அப்போ சம்மதிச்சிருக்கணும்ங்கறியா..?” என்றார்.

கதிரேசன் தலைகுனிந்து கொண்டான்.

மீண்டும் ஊர் மக்களைப் பார்த்து, “அந்த கம்பெனிக்காரனுங்க… போன வருஷத்துலருந்து தண்ணிய உறிஞ்சி எடுத்துகிட்டிருக்கானுங்க… நிலத்தடி நீரு கிடுகிடுன்னு இறங்கிடுஞ்சி. அதுல நம்மூரு தண்ணியும் காணாம போயிடிச்சு… நம்ம ஊரு தண்ணி பிரச்சினைக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்” என்றார்.

“அந்த கம்பெனியில நம்ம ஊர் ஆள்களும் வேலை செய்யறாங்க ஐயா. அவங்க இந்த மாதிரி ஏதும் சொல்லக் காணமே” என்றார் நடுத்தெரு முத்துசாமி.

“என்ன முத்து?, நம்மூர்க்கார பயலுக அங்க என்ன என்ஜினீயர் வேலைக்கா போறான். எடுபிடி வேலைக்குத்தானே போறான். இந்த வெவரமெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும். அதுமில்லாம, வேலை கொடுக்கறவனுக்கு விசுவாசமாதான் நம்மூர்க்கார பயலுக இருப்பானுக. அது நம்ம மண்ணோட குணம். தண்ணி பஞ்சத்துக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்னாலும், இதுக்கு இன்னும் வேற காரணங்களும் இருக்கு” என்றார். 

அது என்ன என்பது போல் முத்துசாமி மட்டுமின்றி ஒட்டு மொத்த கூட்டமே முகத்தில்  கேள்விக்குறியோடு வீராசாமியைப் பார்த்துது.
“பல நாடுகளோட சுயநல வேலைகளால வானிலை மாற்றமடைஞ்சிருச்சி. அதனாலதான் அடிக்கடி சூறாவளி, புயலு, பூகம்பம், பேய் மழை எல்லாம் பெய்யுது. சில ஊருங்க அழியுது… அதுல நம்மநாடும் விதிவிலக்கில்ல… அதுக்கு கொடுத்த விலைதான் குஜராத் பூகம்பமும், சுனாமி தாக்குதலும். இப்பகூட உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு பல ஆயிரம் பேரை பலிகொடுத்திட்டோம்… நாடுகதான் அப்படீன்னா… நம்ம அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கானுக.. அதுக்கு உதாரணம் நம்ம ஊர் எம்.எல்.ஏ.வே இருக்கான். அவன்தான் அப்படீன்னனா, நம்ம ஊர்க்காரப் பயலுகளும் அப்படித்தான் இருக்கீங்க…” என்று காட்டமாக பேசினார் வீராசாமி.
“என்ன ஐயா..? கடைசியில நம்மூர்க்காரப் பயலுகளையே கடைசீல குத்தம் சொல்றீங்க” என்றார் மருதாசலம்.

“நம்ம பயலுகளுக்கு முன்னெல்லாம், ஊரு நலம் முக்கியமா இருந்துச்சு மருது… இப்போ சுயநலம் பெருகிப் போச்சு. நம்ம ஊர்ல நிறைய மரத்த வச்சிருந்தோம். வெட்டக்கூடாதுன்னும் ஊர் கட்டுப்பாடு வச்சிருந்தோம். எவன் கேக்கறானுக, ஒருத்தன் ஏரியை தூத்து செங்க சூளை போட்டிருக்கான். இன்னும் நெறைய பேர், எங்க நெலத்துல இருக்குற மரத்தைத்தான் வெட்டப்போறோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட நாங்க எதுக்கு அனுமதி வாங்கணும்னு வெட்டி சாச்சிட்டானுங்க… இதெல்லாம் அழிவுக்குத்தான்னு எவனுக்கும் தெரியல. இன்னும் சிலர் வயல்வெளியை கூறு போட்டு வீட்டு மனையாக்கிட்டானுங்க…’’ என்று கூறியவர், தன் தோளில் கிடந்த துண்டால் முகத்தில் வழிந்த வியர்வையத் துடைத்துக் கொண்டார்.

‘வளர்ச்சியைப் போய் அழிவுன்னு சொல்லுதே பெரிசு’ என கிசுகிசுத்த மருதாசலம், “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ல வரீங்க..?” என்றார்.
“நம்ம ஊரைச் சுத்தி, நூறு வயசுக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு. அதுங்கதான் நம்ம ஊரைக் காப்பாத்தற சாமிங்க... அதை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும். மரங்களை இனி யாரும் வெட்டக் கூடாது. நம்ம முன்னோருங்க மரம் நட்டதுக்குப் பிறகு, நாம எந்த மரத்தையும் நடாம விட்டுட்டோம். இனி நம்ம கிராமத்தை சுத்தி எல்லோரும் ஆளுக்கு அஞ்சி மரம் நடணும். சிலதை மட்டும் வேரோட வெட்டி சாய்க்கணும்.” என்றார் தீர்க்கமாக.

“மரத்தை வெட்டக் கூடாதுன்னு சொன்ன நீங்களே இப்ப வெட்டணும்னு சொலறீங்க… ஏன்? இப்படி மாத்தி மாத்தி சொல்றீங்க” என்றான் கதிரேசன்.

“நம்ம ஊரைச் சுத்தி கருவேல மரம் எங்கெங்க இருக்கோ… அத்தனையும் தேடிப் பிடிச்சு, வேரோட வெட்டிச் சாய்க்கணும். அதுலயும் சீமைக் கருவேலமரம் இருக்கு பாரு, அதுகளை உருத்தெரியாம அழிச்சிரணும்.” என்றார் வீராசாமி.
“என்னங்க ஐயா… நம்ம ஊர்ல அதிகமா இருக்கிற மரமே கருவேல மரம்தான். அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே… ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு அடிக்கடி நீங்கதான் சொல்லுவீங்க… அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே..?” என்றார் கீழத்தெரு முருகேசன்.

“அது உண்மைதான் முருகேசா… ஆலும் வேலும் என்பது ஆலமரத்தையும் வேப்ப மரத்தையும் குறிக்கும். கருவேல மரத்தையும் சீமைக் கருவேல மரத்தையும் இல்ல. இந்த ரெண்டு மரமும் நம்ம நாட்டு மரமில்ல. வெள்ளைக்காரன் நம்மநாட்டுக்கு கொண்டு வந்த சனியன்கள்ல இதுகளும் உண்டு. இந்த ரெண்டு மரமும் தண்ணியே இல்லாத இடத்துல கூட வளரும். நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்துல இருந்தாலும் அவ்ளோ ஆழம் வரைக்கும் நீண்டுகிட்டுப் போய் தண்ணிய உறிஞ்சிக் குடிச்சிரும். அதனால, நெலத்தடி நீரும் சுத்தமா கொறைஞ்சிரும். 

வயலுக்கு நீர் பாச்சினம்னா, வக்கனையா வாரிச் சுருட்டிக் குடிச்சுரும். பயிருக காஞ்சிடும். வெறகுக்குன்னு அதை நம்மூர்க்கார பயலுகளே வளக்கறானுங்க. அதை மாத்தணும். இந்த மரங்க நெலத்தடி நீரையும் வெஷமாக்குதுப்பா… அந்த மரத்துக்கு கீழ வேற எந்த மரத்தையும் வளர விடாது. இந்த மரத்தால கெடுதல்தான் அதிகம் முருகேசா… இந்த வெவரமெல்லாம் எனக்கே கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. 

போன வாரம், வேளாண்மை அலுவலகத்துக்கு போனப்ப, அங்க இருந்த தோட்டக்கலை அதிகாரி இந்த வெவரத்தை சொன்னாரு. இந்த மரங்களாலதான் ராமநாதபுரம் மாவட்டமே வறட்சியா போயிடிச்சுன்னு பொதுப்பணித்துறை அறிக்கையே அளிச்சிருக்குன்னும் சொன்னாரு. நம்ம சுத்துப்பட்டு கிராமங்கள்ல எல்லாம், அதிகமா கருவேலமும், சீமைக் கருவேலமும்தான் நிறைய இருக்கு. இங்க இருக்குற கருவேல மரங்க ஒவ்வொண்ணும், பக்கத்து ஊருல இருக்கிற மினரல் வாட்டர் கம்பெனிக்கு சமம். அதையெல்லாம் வேரோட வெட்டி சாச்சிட்டு, அதுக்கு பதிலாதான் ஆளாளுக்கு அஞ்சி மரம் நடணும்னு சொல்றேன்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில மத்த ஊருக்குப் போய் வேலை செய்யறத விட்டுட்டு, நம்ம ஊர்ல இருக்கிற இந்த ஆபத்தான மரங்கள முதல்ல வேரோட வெட்டி எறிவோம். நம்ம ஊர் ஏரியை தூர் வாருவோம். செங்க சூளைய காலி பண்ணுவோம்… ஊருக்குள்ள இருக்குற குளத்தை குப்பை மேடாக்காமா பாத்துக்குவோம். ஒவ்வொரு வீட்லயும் மழைநீர் சேகரிப்பு தொட்டிய கட்டுவோம். மழையால வீணா போற தண்ணிய, குளத்துக்கு திருப்புவோம்… மரங்களை அதிகம் நட்டுவைப்போம்…. இதை எல்லாம் செஞ்சோம்னாதான் அடுத்து வர்ற காலங்கள்ல, தண்ணி பஞ்சத்துல இருந்து நம்ம ஊரு தப்பிக்கும்.

நம்ம ஊரை சுத்தம் பண்ணுற வேலைகளை நீங்க பாருங்க… அந்த மினரல் வாட்டர் கம்பெனிய, நம்ம மாவட்டத்தை விட்டே காலி பண்ணுறதுக்கான வேலைய சட்டப்படி நான் பண்ணறேன். அப்பத்தான் நம்ம தண்ணி, நம்ம மண்ணுக்கும், நம்ம உசுருக்கும் கெடைக்கும்.  

இது நம்மூர்ல மட்டுமில்ல, நம்ம தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான். இந்த நிலைய மாத்தறதுக்கு, நாம முன்மாதிரியா இருப்போம். நம்மள பாத்து நம்ம நாடே மாறணும். இழந்த பசுமையை மீட்கணும்… எல்லோரும் என்ன சொல்றீங்க?” என்று ஊர் மக்களைப் பார்த்து சத்தமாய்க் கேட்டார்.

“அப்படியே செய்யறோம் அய்யா…” என்றனர் கோரஸாக…

அன்று எடுத்த முடிவின் காரணமாக, இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆபீஸிற்கு சென்ற வீராசாமி, ‘மினரல் வாட்டர் கம்பெனியை இழுத்து மூடணும்’ என்று ஊர் மக்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த விவகாரம் எம்.எல்.ஏ.வின் காதுகளுக்குப் போகவே, வீராசாமி கோனேரிப்பட்டிக்குள் வரும்போது, ஆட்களை விட்டு அவரை வெட்டி இருக்கிறான்.

ஊருக்குள் ஒடிவந்தவன் ஆவேசமாய் கூறியதைக் கேட்ட கல்லூத்துப்பட்டி மக்கள், எல்லோரும் ஒன்றாய்த் திரண்டு கோனேரிப்ப்பட்டியை துவம்சம் செய்ய கிளம்பினர். சிண்டு, நண்டு, சிறிசு, பெரிசு என எல்லோர் கைகளிலும் கட்டையோ, கழியோ, குத்தீட்டியோ ஆயுதமாகிக் கொண்டு அவர்களோடு பயணித்தது.


கல்லூத்துப்பட்டி ஊர் எல்லையை அவர்கள் தாண்டுவதற்குள், வீராசாமி இடுப்பில் பெரிய துண்டு ஒன்றைக் கட்டியபடி, ஊரை நோக்கி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரது வெள்ளைத் துண்டு, ரத்தக் கசிவால் சிவப்பாய் மாறிப்போயிருந்தது.

“ஐயா… சாமி… உங்களுக்கா இந்த நெலமை… கோனேரிப்பட்டிக்காரனுங்களை கொன்னு கூறுபோட்டுடறோம்யா…” என ஊர் மக்களே ஒன்று சேர்ந்து கோபாவேசப்பட்டனர்.

சைகையால் எல்லோரையும் தடுத்து நிறுத்திய வீராசாமி… “டேய்… பத்துபேரு வந்து நின்னாலும் ஒத்தை ஆளா சமாளிக்கறவண்டா இந்த வீராசாமி... வெட்ட வந்தவன் ஒவ்வொருத்தன் கொடலையும் சரிச்சுட்டுதான் வந்திருக்கேன். பேடிப்பய ஒருத்தன் பின்னால இருந்து வெட்டிட்டான். அவனையும் வுட்டு வைக்கல... இது என்னோட முடிஞ்சு போகட்டும்டா...

வெவரந்தெரியாம யாரும் நீங்க சண்டைக்கு போகாதீங்க… என்னை வெட்டினது கோனேரிப்பட்டிக்காரனுங்க இல்ல… எம்.எல்.ஏ.வோட ஆளுங்கதான்… அவனுங்கள நானே சாச்சிட்டேன்... எனக்கு பிள்ளை குட்டி ஏதுமில்ல... நீங்கதான் என் பிள்ளைங்க. உங்களுக்கு எல்லாமே இருக்கு... ஊரே பஞ்சத்துல கெடக்கும் போது வெட்டு, குத்துன்னு போயி உங்க குடும்பங்களை தவிக்க விட்டுடாதீங்கடா…” என்று பேசி நிறுத்தியவர், சற்று இழுத்து மூச்சுவிட்டிக் கொண்டார். இடுப்புப் பகுதியிலிருந்து ரத்தம் மேலும் கசியத் தொடங்கியது.

அதைப்பார்த்ததும் “வாங்க ஐயா ஆஸ்பத்திரிக்கு போவோம்…” என ஊர் மக்களே கதற…

“யேய்… எனக்கு ஒண்ணும் ஆகாது… எதுக்குடா அழுவுறீங்க… அழாதீங்கடா… ஆஸ்பத்திரிக்கு நான் போனேன்னாக்கா, அந்த நேரத்துல நீங்க கோனேரிப்பட்டிக்காரனுங்கள வெட்டி சாச்சிட்டு வந்துடுவீங்க… அது ஊரு பகையாப் போயிடும்… நம்ம ஊரு மேல பழி பாவம் வந்துடும்டா... அதனாலதான் முதல்ல உங்கள பாக்க வந்திருக்கேன்… காயம் பெரிசா இல்ல… அதனால எனக்கு ஒண்ணும் ஆகாது. நான், ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க எல்லோரும் எனக்கொரு சத்தியம் பண்ணி கொடுங்க…”

“ஐயா… சொல்லுங்கைய்யா, செஞ்சி கொடுக்கறோம்…” ஒவ்வொருவர் கண்களிலும் பூமியில் விழுந்த கண்ணீர் துளிகள் பூமியை நனைத்தன.

“எக்காரணம் கொண்டும் எனக்காக யாரும் கத்தி, கபடாவை தூக்கக்கூடாது. அந்த மினரல் வாட்டர் கம்பெனிக்காரனுங்களை விரட்டி அடிக்கணும்… அதை ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா கூடி சட்டப்படி போராடினா கண்டீப்பா அது நடக்கும்… நம்ம மண்ணுக்காக நாமதான் போராடணும்… உங்களை மடக்கறதுக்காக பணத்தை கத்தை கத்தையா நீட்டுவானுங்க.. பஞ்சத்துல இருக்கோமேன்னு கைநீட்டி வாங்கிடாதீங்கடா… காசுக்கு அடிமையானா… அடுத்து வரும், நம்ம தலைமுறையே தண்ணியில்லாம, தடந்தெரியாம அழிஞ்சு போயிரும்… அழிக்க வேண்டிய மரத்தை அழிச்சி… நல்ல மரங்களை நடுங்கடா… இதை செய்யறோம் எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க…” என்றார்.

“அப்படியே செய்யறோம் ஐயா…” என்று ஊரே அழுதபடி குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே…

அதுவரை ஆலமரமாய் நின்றிருந்த வீராசாமி, தனது மீசையை முறுக்கியபடியே கீழே சரிந்தார். அவரது உடலில் இருந்து வழிந்த ரத்தம் கல்லூத்துப்பட்டி எல்லையை தாண்டாமல், அவர் ஊர் மண்ணை ஈரமாக்கத் தொடங்கியது.

Thursday, December 12, 2013

என்ன பெத்தவரு!



நேரம் அப்போது இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறி, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் எனது வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். 

திடீரென என் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. இப்போதானே தாமரையிடம் பேசினேன். ‘தாம்பரம் வந்துட்டேன்… வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்’ன்னுதான் சொல்லிட்டேனே. மறுபடியும் கூப்பிடறாளோ என்று யோசித்தபடியே பேண்ட் பாக்கெட்டில் அடைந்திருந்த என் செல்போனை எடுத்தேன். அப்பாவிடமிருந்து அழைப்பு வந்துகொண்டிருந்தது. 

இந்நேரத்தில் அப்பா போன் பண்ண மாட்டாரே..? ஏதேனும் அவசரமோ? ஏதேனும் அசம்பாவிதமோ? என மனதிற்குள் குழப்பங்கள் கேள்விகளாக முளைக்கத் துவங்க, அழைப்பிற்கு உயிர்கொடுத்தேன். 

“சொல்லுங்கப்பா… அம்மா நல்லா இருக்காங்களா? நீங்க நல்லா இருக்கீங்களா..?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஆத்தூரிலிருக்கும் அம்மாவின் இருமல் சத்தம் இங்கே கேட்டது.

“நாங்க நல்லாருக்கோம்ப்பா… தாமரை நல்லாருக்குதா? பேரனுங்க நல்லா இருக்காங்களா? வீட்லயா இருக்க?”

“இப்பதான் வீட்டுக்கு போயிட்டிருக்கேன்… எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா… என்னப்பா இந்த நேரத்துல திடீர்னு கூப்பிட்டிருக்கீங்க?”

“ஏம்பா… உன்ன நான் இந்த நேரத்துல கூப்பிடக்கூடாதா? தொந்தரவு ஏதாவது பண்ணிட்டனா?” அவர் குரலில் ஓர் ஏக்கம் தொனித்தது.

“ஐயோ… அப்படி எல்லாம் சொல்லலப்பா… எப்போதும் 8.30 மணிக்கெல்லாம் அம்மாவும் நீங்களும் தூங்கிடுவீங்களே… இந்த நேரத்தில கூப்பிட்டிருக்கீங்களே… ஏதாவது அவசரமான விஷயமான்னு கேட்க வந்தேன்பா…’’

“ஒண்ணுமில்லப்பா… தீபாவளி வரப்போகுது… குடும்பத்தோட வீட்டுக்கு வந்தீன்னா… நாங்க ரெண்டு பேரும் அன்னைக்காச்சும் சந்தோஷமா இருப்போம்”

“ஏம்பா இப்படி எல்லாம் சொல்றீங்க… நீங்க போன் பண்ணித்தான் என்னைக் கூப்பிடணுமா? நான் வரமாட்டேனா?”

“அதுக்கில்லப்பா… நீ சென்னைக்கு போய் எட்டு வருஷம் கூட ஆகல, உன்னோட முரட்டு குணத்தால 10 கம்பெனி மாறிட்ட… இப்பகூட நாலு மாசம் வேலை இல்லாம இருந்த… இப்பதான் உனக்கு வேலை கிடைச்சிருக்கு… லீவு கிடைக்கல… ஊருக்கு வரதுக்கு காசு இல்ல… அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி வராம இருந்துடக்கூடாது பாரு… அதான் இப்பவே போன் பண்ணி சொல்றேன்…”

“என்னப்பா செய்யறது… ஆபிஸ்ல மத்தவங்க செய்யற தப்பை தட்டிக் கேட்கறதால, என் சுயமரியாதையை உரசிப் பாக்கறானுங்க… வேலைய விட்டுடறேன். அதை நீங்க முரட்டுக் குணம்னு சொல்றீங்க..''

''ம்ம்ம்... விதை ஒண்ண போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்..''

''இந்த குணம் உங்கிகட்ட இருந்து வந்ததுதானப்பா.... அத போகட்டும்பா நான் பாத்துக்கறேன்... என் படிப்புக்கேத்த வேலை சென்னைலதாம்பா இருக்கு… அந்த ஒரு காரணத்துக்காக மட்டும்தான், நான் இந்த நரகத்துல இருக்கேன்… எனக்கும் உங்க கூடவே இருக்கணும்னுதாம்பா ஆசை… கூடிய சீக்கிரம் அங்கேயே வந்துடறேன்.”

“அது எனக்கும் தெரியும்பா… ஒரு நேரம் சமாதானமானாலும், இன்னொரு நேரம் பெத்த பிள்ளைங்க எங்ககூட இல்லையேன்னு மனசு ஏங்குதுப்பா… அந்த ஏக்கம் தீபாவளி, பொங்கல்ல நீங்க வரும்போது மட்டும் காணாப்போயிடும். அதான்பா போன் பண்ணினேன். காசு இல்லன்னு ஊருக்கு வராம இருந்துடாத…”

“இந்த ஆபீசுக்கு போயி ஒரு மாசம்தான் ஆகுது. லீவு எப்படின்னு தெரியலப்பா. என்னிடம் காசும் இப்போ இல்லதான்… நிலமை எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு வரேன்…”

“இந்த மாதிரி காரணம் நீ ஏதும் சொல்லக்கூடாதுன்னுதான், இந்த நேரத்துல போன் பண்ணுறேன்… எது எப்படி இருந்தாலும் ஊருக்கு வராம இருந்துடாதப்பா… ஏதாச்சும் சொல்லி ஆபீசுல லீவு கேட்டுட்டு வந்துடு… வருசம் முழுக்க அம்மாவும் நானும் அனாதையாத்தான் கெடக்கறோம்… தீபாவளிக்கும் எங்கள அனாதையாக்கிடாதப்பா…”

“ஏம்பா இப்படி எல்லாம் பேசறீங்க… கூடிய சீக்கிரம் உங்களோடவே வந்துடறேன்”

“ஆயுசு முடியும்போது நீ வந்து என்னப்பா பலன்… வயசாயிப் போச்சு… உங்களை பெத்து வளக்கறதுக்காக நாங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி ஒழைச்சோம்… வளர்ந்த பிறகு பெத்தவங்க கூட இருக்கணும்னு ஒருத்தனும் நினைக்கல… இருக்கல… ஓய்வெடுக்கக்கூடிய வயசு வந்தும், இன்னும் ஒழைச்சிகிட்டுதான் இருக்கோம்… ஒழைக்கிறத பத்தி எங்களுக்கு கவலை இல்லப்பா… புள்ளைங்க ஒண்ணு கூட எங்களோட இல்லையேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு…''

''அண்ணன்தான் பக்கத்துத் தெருவுலதானப்பா இருக்கான்...''

''யாரு உன் அண்ணனா... ம்ஹும்... அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அவன் பொண்டாட்டி, உன் அம்மாகிட்ட சண்டை போட்டதால, அவன் தனிக்குடித்தனம் போயிட்டான். நீ மேல படிக்கப்போறேன்னு சென்னைக்குப் போன, படிச்சு முடிச்சதும். காதல்ன, உடனே கல்யாணம்ன… உன்னிஷ்டம் போல செஞ்சு வச்சோம். கல்யாணம் பண்ணுன மறுநாளே நீயும் சென்னைக்கு உன் பொண்டாட்டியோட போயிட்ட. உன் தம்பியாச்சும் எங்ககூட இருப்பான்னு பாத்தோம். அவனும் கல்யாணம் முடிஞ்சதும், மாமியார் வீடே கதின்னு போயிட்டான்… நாங்க ரெண்டு பேரும் தனியாத்தான கெடக்கறோம்… பெரியவன் பக்கத்து தெருவுல இருந்தும் இல்லாத மாதிரிதான். உன் தம்பி எங்கள சுத்தமா மறந்துட்டான். நீ ஒருத்தன்தான் அப்பா, அம்மா இருக்காங்கன்னுட்டு தீபாவளி, பொங்கல்னாதான் வீட்டுக்கு வர… எது எப்படியோப்பா… நீங்க எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும். அப்படியே அந்த சந்தோஷத்தை ரெண்டு நாளைக்காச்சும் எங்களுக்கும் கொடுப்பா… அடுத்த தீபாவளிக்கு நாங்க உசிரோட இருக்கமோ, இல்லையோன்னு தெரியாதுப்பா… வயசாயிடிச்சில்ல… அதான் வந்து ரெண்டு நாளாச்சும் இருந்துட்டுப் போன்னு சொல்றேன்…”

“அப்பா இப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா… மனசுக்கு கஷ்டமா இருக்கு…”

“உம் மனசு கஷ்டப்படணும்னு சொல்லலப்பா… நீ எங்க வராம இருந்துடுவியோங்கற எங்களோட மனக்கஷ்டத்ததாம்பா உங்கிட்ட சொல்றேன்…”

“கண்டீப்பா ஊருக்கு வரப் பாக்கறேன்பா… பட்டாசு எல்லாம் பஸ்ஸில, டிரெயின்ல எடுத்துட்டு வரக்கூடாதுங்கறாங்க… முடிஞ்சா உங்க பேரன்களுக்கு பட்டாசு வாங்கி வையுங்கப்பா…”

“சரிப்பா… அத நான் பாத்துக்கறேன்… நீ பத்திரமா குடும்பத்தோட வந்துருவல்ல…”

“வரப் பாக்கறேன்பா.. நீங்க போனை அம்மாகிட்ட குடுங்கப்பா பேசறேன்…”

“அம்மாவுக்கு ரொம்ப இருமலா இருந்துச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மருந்து கொடுத்தேன்… அரைத் தூக்கத்துல இருக்கா… காலைல அம்மாவ பேசச் சொல்றேன்பா… வீட்டுக்கு போனதும் மருமகளையும் பேரன்களையும் நான் கேட்டதா சொல்லுப்பா… நான் போனை வச்சிடறேன். பத்திரமா வீட்டுக்கு போப்பா” 

அப்பா போனை வைத்துவிட்டார். ‘அனாதையா இங்கே கெடக்கறோம்பா.. ரெண்டு நாளாச்சும் வந்து தங்கிட்டு போ… அடுத்த வருஷம் நாங்க இருக்கிறோமோ இல்லையோ…’’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தது. கனத்த மனதோடு வீட்டிற்குப் போனேன்.

“தாமரை… தாமரை… என குரல் கொடுக்க, என் மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்தாள். குழந்தைங்க தூங்கிட்டாங்களா?” என்று கேட்டபடி உள்ளே சென்றேன்.

“ம்ம் ஆதித்தன் முன்னமே தூங்கிட்டான்… சின்னவன்தான் உங்களுக்காக எதிர்பார்த்துகிட்டிருந்தான்… 'அப்பா துப்பாக்கி வாங்கி வரேன்னு சொன்னாரு.. பட்டாசு வாங்கிட்டு வரேன்னு சொன்னாரு'ன்னு காத்துகிட்டிருந்தான்… உங்களுக்காக தூங்காமா இருந்தவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தூங்கினான்… அது சரி... ஏன் இவ்ளோ லேட்டு… ஏன் உங்க முகம் வாடிப்போயிருக்கு… துப்பாக்கி வாங்கிட்டு வரலயா…” கேள்விக்கணைகளை சரமாரியாக வீசினாள்…

“சம்பளம் இன்னும் போடலம்மா… அதான் வாங்கி வரல…” என்றேன். சற்று இடைவெளி விட்டு “அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் பேசினாரு… தீபாவளிக்கு கண்டீப்பா ஊருக்கு வரச்சொல்றாரு…” என்றேன்.

“அப்பாவுக்கு நம்ம நிலமை தெரியாதா? இப்பதான் வேலையே கெடச்சிருக்கு. நாம வாங்கற 13,000 ரூபாய் சம்பளத்துல… நாலு மாச மளிகை கடை பாக்கி, பால் பாக்கி, வாடகை பிரச்சினை, ஸ்கூல் பீஸ், குழந்தைகளுக்கு டிரெஸ் என ஏகப்பட்ட செலவு இருக்கு… எப்படிங்க ஊருக்கு போறது… இவ்ளோ கஷ்டத்துல ஏங்க போகணும்… அடுத்த வருஷம் போயிக்கலாம்” என்றாள்.

“எனக்கும் அது தெரியும்… ஆனா, நிலமை அங்க நல்லா இல்ல… அம்மாவுக்கு உடம்பு சரியில்ல… அப்பாவுக்கும் உடம்பு முடியல போல … அவங்க என்னிடம் காசு பணம் கேக்கலம்மா… ரெண்டு நாள் குழந்தைங்களோட எங்க கூட இருந்துட்டு போங்கன்னுதான் சொல்றாங்க… ஏதாச்சும் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். போயிட்டு வந்துடலாமே…” என நான் அவளிடம் கெஞ்ச, அரை குறை மனதோடு என் மனைவியும் சம்மதித்தாள். 

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன… நண்பனிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். தீபாவளிக்கு முதல் நாள் இரவு மனைவி, மகள், மகனோடு தாம்பரத்திலிருந்து ஆத்தூருக்கு பஸ்ஸில் புறப்பட்டு விட்டோம். கூட்டம் நிரம்பி வழிந்த அந்த பஸ்ஸில் இடம்பிடிப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.



அன்று மாலையிலிருந்து இரவிற்குள் அப்பா நான்கு முறை போன் செய்து விட்டார். ‘ஊருக்கு கிளம்பிடுவல்ல?’, ‘ஊருக்கு வரதுக்கு காசில்லன்னு இருந்துடாத… எங்கேயாச்சும் காசு பொரட்டிகிட்டு வந்துடு… இங்க வந்ததுக்கப்புறம் நான் கொடுத்தனுப்பறேன்…’, ‘சீக்கிரமா கிளம்பி வா…’ என அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தார். பஸ் ஏறிவிட்டோம் என்ற தகவலைச் சொன்ன பிறகே அவர் குரலில் ஒரு நிம்மதி வந்ததை தெளிவாக என்னால் உணர முடிந்தது. பஸ் ஆத்தூரை நோக்கி போய்க்கொண்டிருந்தது.

தாம்பரத்திலிருந்து ஆத்துருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால், குறைந்தது 6 மணிநேரம் பயணம் செய்தாக வேண்டும். இரவில் கிளம்பியதால் பஸ்ஸில் ஏறியதும் தாமரையும் குழந்தைகளும் தூங்கிப்போனார்கள். நான் மட்டும் தூங்காமல் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

அப்பாவும், அம்மாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். பணக்கார குடும்பத்தில் பிறந்த என் அப்பா, எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் அம்மாவை கரம் பிடித்தார். வெயிலே தெரியாமல் வளர்ந்த என் அப்பா, எங்களுக்காக வெயில், மழை எனப்பாராமல் கூலிவேலைக்குப் போனார். கிடைக்கும் சொற்ப கூலியில் என் அப்பாவும் அம்மாவும் சிரமப்பட்டு எங்கள் மூன்று பேரையும் வளர்த்து ஆளாக்கினர். வறுமை காரணமாக அண்ணன் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட, தம்பிக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு அவனும் வேலைக்குப் போய் விட்டான். நான் மட்டுமே படித்தேன். எங்களுக்காக இளம்வயதில் வேலைக்கு போக ஆரம்பித்தவர், இன்று வரை வேலைக்கு போவதை நிறுத்தவில்லை. 

என் அண்ணன் பெற்றோரை மதிப்பதில்லை என்பதால், தம்பியிடம் படித்து படித்து சொல்லியிருந்தேன். ‘அண்ணன் சரியில்ல. அவன் அப்பா, அம்மா கூட இருக்க மாட்டான். நானோ படிப்புக்கேத்த வேலைன்னு சென்னைக்கு வந்துட்டேன். நீதான்டா அப்பா, அம்மா கூட இருக்கணும்’னு சொல்லியிருந்தேன். நான் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டினான். கல்யாணம் ஆனதும் அவன் பொண்டாட்டிக்காக தலையாட்டியவன், இன்றுவரை பெற்றவர்கள் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை.

யார் எப்படிப் போனாலும் தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து குடும்பத்தோடு ஆத்தூருக்கு வந்துவிடுவேன். பெற்றவர்களுடன் இந்த நாட்களிலாவது ஒன்றாக இருக்கிறோமே என்ற ஆத்ம சந்தோஷம் எனக்கு. என் குழந்தைகளுக்கும் தாத்தா, பாட்டி என்ற உறவுகளின் பாசத்தை உணர்த்தும் திருநாட்கள் அது என்ற மனத் திருப்தி. பழைய நினைவுகளில் மூழ்கிப்போனவன், இரவு ஒரு மணிக்கு மேல் எனை அறியாமல் தூங்கிப் போனேன். 

சரியாக அதிகாலை 5 மணிக்கு எனது செல்போன் அடித்து எழுப்பத் துவங்கியது… அப்பாதான் போனில் எனை எழுப்பிக் கொண்டிருந்தார். எடுத்தேன்… “எங்கப்பா வந்திருக்க… நேத்து ஆபிசுக்கும் போயிட்டு, வீட்டுக்கு வந்துட்டு, பிள்ளைங்களை கூட்டிகிட்டு பஸ்ல ஏறி, கூட்டத்துல கஷ்டபட்டிருப்ப… உன்னை அறியாம அசந்து தூங்கி, நம்ம ஊரை தாண்டி பஸ் போயிடிச்சின்னா என்ன பண்ணறது.. அதான் போன் பண்ணினேன். எங்கப்பா வந்திருக்க…?”

அப்பாவின் குரல் கேட்கும் போதே, தீபாவளி பிறந்து விட்டதற்கான அறிகுறியாய், தூரத்தில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டன. 

“இருங்கப்பா… எங்க வந்திருகேன்னு பாக்கறேன்…” என்றபடி, பஸ் கண்ணாடியை உயர்த்திவிட்டு, வெளியே பார்த்தேன். பஸ் அம்மம்பாளையம் வந்துவிட்டிருந்தது. அடுத்து ஆத்தூர்தான். அப்பா எழுப்பவில்லையென்றால் கண்டீப்பாக ஆத்தூரைத் தாண்டி, சேலத்தில்தான் எழுந்திருந்திருப்பேன் எனத் தோன்றியது.

“எங்கப்பா வந்திருக்க” என அப்பாவின் குரல் மறுபடியும் எனை உசுப்ப… “அம்மம்பாளையம் வந்துட்டேன்பா… அவ்ளோதான்… இன்னும் பத்து நிமிஷத்துல ஊருக்கு வந்துடுவேன்” என்றேன்.

தாமரையையும் குழந்தைகளையும் எழுப்பினேன்… அரைத் தூக்கத்தில் இருந்த சின்னவனை தூக்கிக் கொண்டேன். பெரியவனை தாமரை எழுப்பிவிட்டாள். ஆத்தூர் முகப்பிலிருக்கும் ஊழவர் சந்தை ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன்.

உழவர் சந்தை ஸ்டாப்பில் பஸ் வந்து நின்றது. ஒரு கையில் சின்னவனோடும் மறுகையில் டிராவல் பேக்கோடும் இறங்கினேன். பின்னாடியே என் மனைவியும், பெரியவனும் இறங்கினர். அங்கே எங்களுக்காகவே அப்பா காத்திருந்தார். 

அப்பாவை பார்த்தபோது முன்பை விட மிகவும் மெலிந்திருந்தார். 60-களைத் தாண்டிய தேகம் என்பதால் தலை எல்லாம் நரைத்துப் போயிருந்தது. உடலில் ஒரு தளர்ச்சி தென்பட்டது.

தளர்ச்சி உடலில் இருந்தாலும், எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ‘வாப்பா… வாம்மா…’ என்று வரவேற்றபடி என்கையிலிருந்த பேக்கை வாங்கி, தன் சைக்கிளில் வைத்துக் கொண்டார். சைக்கிளில் இருந்த குட்டி சீட்டில் ஆதித்தனை தூக்கி உட்கார வைத்தார். அந்த குட்டி சீட், புத்தம் புதிதாய் இருந்தது.

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்காக அப்பா வாங்கி வைத்த குட்டி சீட் அது. நாங்கள் வளர்ந்த பிறகு சீட்டை எடுத்துவிட்டிருந்தார். தற்போது அவரது சின்னப்பேரனுக்காக புதிதாய் வாங்கிப் பொருத்தியிருக்கிறார் என்பதை, அதன் பளபளப்பிலிருந்தே தெரிந்து கொண்டேன்.

“ஆதித்தா… நல்லா இருக்கியாப்பா…” என்று தன் மூத்த பேரனின் தலையைக் கோதினார். “நல்லாருக்கேன் தாத்தா” என்றான் ஆதித்தன். சின்னவனைப் பார்த்தார். “அகிலன் தூங்கிகிட்டிருக்காம்பா…” என்றேன். “சரி வாப்பா போவோம்” என்றபடி சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தார். 

ஐந்து நிமிடத்தில் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். 30 வருடங்களுக்கு முன்பு கட்டிய ஓட்டு வீடு என்பதால், வீடு சற்றே சிதிலமடைந்திருந்தது.

வீட்டிற்குள் அம்மா எங்களுக்காக காத்திருந்தார். அவரைப் பார்க்கையில் எனக்கு திக்கென்று இருந்தது. அம்மா எலும்பும் தோலுமாய் ஆகி விட்டிருந்தார். இருவருக்கும் வயதாகி விட்டது என்பதை அவர்களது உடல்நிலை பூரணமாய் காட்டிக் கொடுத்தது.

தெருவிற்குள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பட்டாசு சத்தம் கேட்டு அகிலன் விருட்டென்று எழுந்து கொண்டான். எழுந்ததும் தாமரையிடம் போய் ஒட்டிக் கொண்டான்.

“வாம்மா… வாப்பா!” என்றார் அம்மா. “நல்லாயிருக்கீங்களாம்மா? என்று தாமரை கேட்டாள். “நல்லாருக்கேம்மா…” என்றவர், “ஆதித்தக் குட்டி… இங்க வாய்யா…” என்றார்.

“பாட்டி… உனக்கு நான் சேலை எடுத்துகிட்டு வந்திருக்கேன்” என்றான் ஆதித்தன்.

வருடா வருடம் அம்மாவிற்கு சேலை எடுத்துக் கொடுத்து விடுவேன். இந்த வருடமும் எடுத்து வந்திருந்தேன். ஆதித்தன் கையில் சேலையை கொடுத்து பாட்டியிடம் கொடுக்க சொன்னேன்.
 
“எனக்கு எதுக்குப்பா இதெல்லாம். நானென்ன வெளியவா போகப் போறேன். உழவர் சந்தை, வீடுன்னு கெடக்கிறேன்.” என்றார்.

“வாங்கிக்கோங்கம்ம்மா…” என்றாள் என் மனைவி. 

அம்மா வங்கிக் கொண்டார். அப்பா, எங்களிடம் எதுவும் வாங்கிக் கொள்ள விரும்ப மாட்டார். வருடா வருடம் அவருக்கு கம்பிக் கடையிலிருந்து வேட்டி, சட்டை வந்து விடும். ஆதலால் எனக்கு எதுவும் வேண்டாம் என்று விடுவார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, உள்அறைக்குள் சென்று பேண்ட், சர்ட் ஒன்றை எடுத்து வந்தார் அப்பா. என்னிடம் கொடுத்து, “போட்டுக்கோப்பா. உனக்கேத்த சைஸ்தான்” என்றார். “எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்..? உங்களுக்கு வேட்டி சட்டை எங்கப்பா?” என்றேன்.

“அதுஒண்ணுமில்லப்பா.. வேட்டி சட்டை கொடுக்கறேன்னுதான் கடைக்காரன் சொன்னான். எனக்கு உன் ஞாபகம்தான் வந்துச்சி. போன வருஷம் கடைக்காரன் கொடுத்த வேட்டி, சட்டை அப்படியேதான் பொட்டியில கிடக்கு. நீ ஆபீஸ் போறவன்… உனக்கு தேவைப்படுமேன்னு பேண்ட், சட்டைய கொடுடான்னு கேட்டேன். கொடுத்துட்டான். நீ போட்டுக்கோப்பா’’ என்றார்.

மறுக்க முடியவில்லை வாங்கிக் கொண்டேன். எனது நண்பன் பிரேம் 2 ஆயிரம் ரூபாய் தீபாவளிக்கென்று கொடுத்திருந்தான். அம்மாவுக்கு, தாமரைக்கு, குழந்தைகளுக்கு டிரெஸ் எடுக்க 1400 செலவாகிவிட்டது. மீதமுள்ள 600 ரூபாயில், 500 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு சரியாகப் போய்விட்டது. நூறு ரூபாயை வைத்துக் கொண்டுதான் ஊருக்கு வந்திருந்தேன். அந்த நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தேன். 

“நீ வச்சிக்கப்பா… எனக்கெதுக்கு..’’ என்றபடி வாங்க மறுத்துவிட்டார்.
மீண்டும் உள்ளே சென்றவர், பட்டாசு பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்து, ஆதித்தனிடமும் அகிலனிடமும் நீட்டினார்… “ஹையா பட்டாசு என்று உற்சாகமாய் கூவிக்கொண்டே இருவரும் பட்டாசுப் பெட்டியை ஆவலாய் பிரிக்க ஆரம்பித்தனர். என் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகம் சந்தோஷத்தில் பூரித்துப் போயிருந்தது. அவரும் ஒரு குழந்தை போல் மாறிப் போயிருந்தார். என் அம்மாவைப் பார்த்தேன். அவர் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

வீட்டை விட்டு வெளியே வந்தேன் தெருவிலுள்ளோர் ஒவ்வொருவரும் அன்போடு விசாரித்தனர். நன்கு விடிந்து விட்டிருந்தது. அப்பா சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைப்பக்கம் போய்விட்டார்.



அவர் திரும்பி வரும்போது ஆட்டுக் கறி, கோழி கறி, மீன் அனைத்தையும் வாங்கி வந்திருந்தார். பேரன்களும், மருமகளும் சாப்பிட வேண்டுமென்று அத்தனையும் வாங்கி வந்தார். நான் சைவம் என்பதால், எனக்கானதை அம்மா கவனித்துக் கொள்வார். 

தீபாவளி அன்று என் அப்பாவும் அம்மாவும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். நாங்கள் வந்த மகிழ்ச்சி அது. அந்த தீபாவளி எங்களனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாய்ப் போனது.

மறுநாள் பொழுது விடிந்தது. அப்பாவும் அம்மாவும் அதிகாலையிலேயே எழுந்து, உழவர் சந்தைக்கு போய்விட்டிருந்தனர்.8 மணிக்குமேல் எழுந்து வெளியே வந்தேன். தாமரையும் குழந்தைகளும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர். 

வெளியே போவதற்காக எனது செருப்பைத் தேடினேன். ஒரு செருப்பு மட்டுமே இருந்தது. மற்றொன்றைக் காணோம். ‘காசில்லாத நேரத்தில.. இது என்ன புதுப்பிரச்சனை’ என்று யோசித்தபடியே, வீட்டிற்குள்ளும் வெளியேயும் பார்த்தேன் செருப்பைக் காணவில்லை. 

எனது கால் மிகவும் பெரியது என்பதால் யார் செருப்பும் எனக்கு சேராது. வெறும் காலோடு வெளியே போய்விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் காணமல் போன எனது செருப்பு, நாயால் குதறப்பட்டு, அறுந்து கிடந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த நாயை சபித்துக் கொண்டே செருப்பைப் பார்த்தேன். தைத்துப் போட முடியாத அளவிற்கு செருப்பு சிதைந்து போயிருந்ததால், ‘இனி அந்த செருப்பு உதவாது’ என வருத்ததுடன் வீட்டை நோக்கிச் சென்றேன்.

அதற்குள் அப்பா வீட்டிற்கு வந்து விட்டிருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், நான் எங்கள் தெருவில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டை நெருங்கினேன். “எங்கப்பா செருப்பு கூட போடாம வெளிய போயிட்டு வர?” என்றார் அப்பா.

“இல்லப்பா.. செருப்பு நல்லதாம்பா இருந்துச்சு. காலைல எந்திரிச்சி பாக்கறேன். ஒரு செருப்ப காணோம். வர வழிலதான் பார்த்தேன். அந்த செருப்பை நாய் எடுத்துகிட்டு போய், குதறி வச்சிடுச்சி. அத இனிமே போட்டுக்கவும் முடியாதுப்பா… அதான் வெறும் காலோட போயிட்டு வந்தேன். ஆபீஸிற்கு எதைப் போட்டுகிட்டு போகப்போறேன்னு தெரியல’’ என்றேன்.

சற்று யோசித்தவர். “சரி விடுப்பா… செருப்பில்லாம வெளிய போகாதே… நீ வீட்லயே இரு… நான் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அரை மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தவர், “என் கையில் 1,000 ரூபையைத் திணித்தார். இதுல செருப்ப எடுத்துக்க… மீதிப் பணத்தை ஊருக்கு போக வச்சிக்கப்பா…” என்றார்.

பணத்தை வாங்கிக் கொண்டு முதல் வேலையாக செருப்புக் கடைக்கு போனேன். எனது சைஸிற்கு ஏற்ற தோல் செருப்பை தேடிப்பிடித்து, 400 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். வரும் வழியில் தாமரையும் குழந்தைகளும் எதிரில் வந்தனர். 

“எல்லோரும் எங்கே போயிட்டு வர்றீங்க…” என்றேன்.

“கடைக்கு போயிட்டு வரோம்… ரெண்டு பேரும் ஸ்நாக்ஸ் வேணும்னு ஒரே அடம்…” என்றாள் தாமரை.

“சரி வாங்க போவோம்…” என்றபடி நான்கு பேரும் வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டை நெருங்கியதும், பக்கத்து வீட்டுகாரம்மா எனது மனைவியை வழிமறித்துப் பேசத் துவங்க, அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் குரல் வெளியே கேட்டது.

“மாவு வாங்கிட்டு வரச் சொல்லி எப்ப சொன்னேன். இப்போ வரீங்க… என்னாச்சு உங்களுக்கு…” – இது அம்மாவின் குரல்.

“அது ஒண்ணுமில்ல புள்ள… காலைல பணம் தரேன்னு சொன்ன மேஸ்திரி, திடீர்னு, பணம் வர்றதுக்கு மூணு நாளு ஆகும்னுட்டான். அத நம்பித்தான், பையன் ஊருக்கு போகறதுக்கு காசு தரேன்னு சொல்லிருந்தேன். கடைசி நேரத்துல கைய விரிச்சுட்டான். அதுவுமில்லாம பையன் செருப்பு ஒண்ணை நாய் தூக்கிட்டு போயிடுச்சு.. பையன் வெறுங்கால்லயா நடப்பான். பார்த்தேன், சைக்கிளை எடுத்துகிட்டு போய், ஜெயபால் கடையில அடகு வச்சேன். 1,200 ரூபாய் கொடுத்தான். பையன்கிட்ட 1,000 ரூபாய கொடுத்துட்டேன். 200 ரூபாய நம்ம செலவுக்கு வச்சிருக்கேன். சைக்கிள் இல்ல பாரு… நடந்தே போய் மாவு வாங்கிட்டு வந்தேன். அதான் நேரமாயிடிச்சு…’’ இது அப்பாவின் குரல்.

என் மனைவி, அதற்குள் பேசி முடித்து விட்டிருந்தாள். “வாங்க போவோம்” என்றாள். ‘இரு கொஞ்ச நேரம்’ என்று அவளை நிறுத்தினேன்.

“சரி சரி இத இத்தோட விடு புள்ள… மருமகளோ, மகனோ வந்துடப் போறாங்க…” என்றார் அப்பா. இது என் மனைவியின் காதிலும் விழுந்தது.

“ஏங்க இப்படி பண்ணறீங்க… நீங்க வேலைக்கு வெளிய போக வர இருந்ததே, அந்த சைக்கிள் ஒண்ணுதான். அதையும் இப்போ அடகு வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றீங்களே. பையன் வந்து கேப்பானே சைக்கிள் எங்கப்பான்னு…? அவனுக்கென்ன பதில் சொல்லுவீங்க…’’

“அட விடு புள்ள... நம்ம பையன் செருப்பில்லாம நடந்தா, நமக்குத்தானே வலிக்கும். அவன் கையில காசில்லன்னு அவன் பொலம்பக் கூடாது பாரு. வீட்டுக்கு வந்த மருமகளுக்கும், பேரன்களுக்கும் ஏதாச்சும் வேணும்னா, அவன் யாருகிட்ட போய் நிக்கறதுன்னு யோசிக்க கூடாது பாரு. அதான் சைக்கிளை அடகு வச்சிட்டேன். அவன் படிக்கிறப்போ முதல் முறையா அடகு வச்சேன். இப்போ அவனுக்காகத்தான அடகு வச்சிருக்கேன். இன்னும் மூணு நாள்ல மேஸ்திரி பணம் வந்துடும்னு சொல்லியிருக்கான். பணம் வந்ததும் சைக்கிளை வாங்கிக்கலாம். அதுவுமில்லாம சாயந்திரமான, கண்ணு வேற சரியா தெரியமாட்டேங்குது. சாயந்திரத்துக்கு மேல சைக்கிளை நான் ஓட்டிகிட்டு வர மாட்டேன். தள்ளிகிட்டுதான் வீட்டுக்கு வரேன். அதனால ஒண்ணும் பிரச்சினை இல்ல. பையன் கேட்டா… மேஸ்திரி சைக்கிளை வாங்கிட்டு போயிருக்காப்லன்னு நான் சொல்லி சமாளிச்சிக்கறேன். நீ வாய வச்சிகிட்டு சும்மா இரு” என்றார்.

அதற்கு மேல் அம்மா சமையல் கட்டில் பாத்திரங்களை எடுக்கும் சத்தம் கேட்கவே, நாங்கள் வீட்டினை நெருங்கினோம்.

வீட்டு வாசலில், எனது புது செருப்பை கழட்டி விட்டேன். பக்கத்தில் கிடந்த என் அப்பாவின் ரப்பர் செருப்பு மிகவும் தேய்ந்து போய், குதிகால் பகுதியில் ஓட்டையாகிக் கிடந்தது.

அதைப் பார்த்ததும் எனையறியாமல் கண்ணீர் துளிகள் அந்த ஓட்டையில் விழ ஆரம்பித்தன.