Saturday, September 01, 2007

வைரவிழா சுதந்திர தினக் கவிதை

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!

வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
சுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
முமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

று விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!

-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

No comments: