Monday, March 07, 2016

உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!



 
உலகில் மொத்தம் 205-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இத்தனை நாடுகளில் எத்தனை பெண்கள் அதிபராகவோ, பிரதமராகவோ இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் 16 பேர் காணக்கிடைத்தார்கள். உலகில் சரிபாதி பெண்கள்தான். 205 நாடுகளில் 16 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதாவது, உலகிலுள்ள நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் எண்ணைக்கையை கணக்கிட்டால் ஆறரை சதவீதம் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள். மீதம் 93 சதவீதம் பேர் ஆண்களாகவே இருக்கிறார்கள்… இனி அந்த பதினாறு பெண் தலைவர்களைப் பார்க்கலாம்…

ஏஞ்சலா மெர்கல் (Anjelo merkel) அதிபர், ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஏஞ்சலா மெர்கல். இவர், இந்நாட்டின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னதாக, 2005, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் இவர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்படவர்.

எல்லன் ஜான் ஸன் சர்லீப், (Ellen Johnson Sirleaf) அதிபர், லைபீரியா
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-இல் தேர்ந் தெடுக்கப்பட்டவர் எல்லன் ஜான் ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். 2011-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப் பரிசினை வென்றவர். இந்நாட்டின் 42-வது அதிபராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

டாலியா கிரிபவுஸ்கைடே, (Dalia Grybauskaitė) அதிபர், லித்துவேனியா
வட ஐரோப்பா பகுதியில் உள்ள நாடு லித்துவேனியா. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதிபராக இருக்கும் இவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்நாட்டினரால் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர் கராத்தேவில் ‘கறுப்பு பட்டை’ பெற்றவர்

தில்மா ரூசெப், (Dilma Rousseff) அதிபர், பிரேசில்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் 36-வது அதிபராக பதவி வகித்து வருகிறார் தில்மா ரூசெப். இந்நாட்டின் முதல் பெண் அதிபரும் இவர்தான். 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் இவர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மாகணத்தின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அடிபெடே ஜஜாகா, (Atifete Jahjaga) அதிபர், கொசோவோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நான்காவது அதிபரும், அந்நாட்டின் முதல் பெண் அதிபருமான அடிபெடே ஜஜாகா,  முன்னதாக அந்நாட்டு காவல் துறையில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் எப்பிஐ அகாதெமியில் படித்து பயிற்சி பெற்றவர் இவர்.

பார்க் ஷியுன் ஹை, (Park Geun-hye) அதிபர், தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் பெண் அதிபராக பதவி வகித்து வரும் பார்க் ஷியுன் ஹை, கிராண்ட் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டின் அதிபரான முதல் நபரும் இவரே. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் இவர். கிழக்காசிய நாடுகளில் வலிமைமிக்க பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

மிச்செல் பேச்லெட், (Michelle Bachelet) அதிபர், சிலி
இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக 2006-லிருந்து 2010 வரை பதவியிலிருந்தவர். பின்னர், .நா. பெண்கள் அமைப்பின் தலைவராக இருந்த அவர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும், அரசியலுக்கு வந்தார். 2014 முதல் மீண்டும் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.

கொலிண்டா கிராபர் கிட்ரோவிக் (Kolinda Grabar-Kitarović), அதிபர், குரோஷியா

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று குரோஷியா. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு பிப்ரவரியில் பதவி ஏற்றுக் கொண்டவர். குரோஷியக் குடியரசின் நான்காவது அதிபர், மிக இளம் வயதிலேயே அதிபர் ஆனவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கன்சர்வேட்டிவ் குரோஷியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

அமீனா குயூரிப், (Ameenah Gurib) அதிபர், மொரீஷியஸ்
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் சென்ற ஆண்டு பதவி ஏற்றார். சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான இவர், மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

பிந்த்யா தேவி பண்டாரி, (Bidhya Devi Bhandari) அதிபர், நேபாளம்
உலகின் மிக உயரமான சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம். இந்நாட்டின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் வித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு அக்டோபரில் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதிபர் வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் மன்னர் ஞானேந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தார். அவரது பெருமுயற்சியால் மன்னரின் சர்வாதிகார ஆட்சி 2008ல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகு வித்யா தேவி நேபாளத்தின் இரண்டாவது அதிபராக ஆகியுள்ளார்.

ஹில்டா ஹெயினே, (Hilda Heine) அதிபர், மார்ஷல் தீவுகள்
 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி மார்ஷல் தீவுகள். 72,000 பேர் வசிக்கும் இத்தீவின் தலைநகரம் மஜுரோ. 29 பவளத் தீவுகளை உள்ளடக்கியது இந்த மார்ஷல் தீவுகள். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக, இரு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றிருக்கிறார் ஹில்டா ஹெயினே. அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.


ஷேக் ஹசீனா, பிரதமர், வங்கதேசம்
நமக்கு அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இந்நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரகுமானின் முதல் மகள் இவர். 1981-லிருந்து வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவரும் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக, 1996-ல் பதவியேற்றார். மீண்டும் 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், இன்று வரை பொறுப்பில் இருக்கிறார். இந்நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் காலிதா ஜியா.

போர்டியோ சிம்ப்ஸன் மில்லர் (Portia Simpson-Miller), பிரதமர், ஜமைக்கா

கரீபியின் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவின் முதல் பெண் பிரதமராக இருப்பவர் போர்டியோ சிம்ப்ஸன் மில்லெர். ஜமைக்காவின் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர், முதன்முதலாக 2006-ல் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டுக்குள் தேர்தல் வந்துவிடவே இவரது பதவிக்காலம் முடிந்து போனது. மீண்டும் 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், தற்போது வரை பொறுப்பில் இருக்கிறார்.

பீட்டா ஸசிட்லோ, (Beata Szydło) பிரதமர், போலந்து

மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில் சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்து வருகிறார் பீட்டா ஸசிட்லோ. இந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இவருக்கு முன்னதாக, ஹான்னா சுச்சோக்கா, ஈவா கொப்பாக்ஸ் ஆகியோர் பெண் பிரதமர்களாக இருந்துள்ளனர். பீட்டா ஸசிட்லோவுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் ஈவா கொப்பாக்ஸ்.

சாரா கூகொங்கெல்வா, (Saara Kuugongelwa) பிரதமர், நமீபியா 

தென்மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடு நமீபியா. தென்னாப்ரிக்க நாட்டிடமிருந்து அதிகார பூர்வமாக 21 மார்ச் 1990-ல் இந்த நாடு குடியரசானது. அந்நாட்டில், முதல் பெண் பிரதமராக, தற்போது பதவி வகித்து வருகிறார் சாரா கூகொங்கெல்வா. இந்நாட்டின் நான்காவது பிரதமர் இவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், அந்நாட்டின் திட்ட கமிஷன் துறையின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். 2003-ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் ஸ்வபோ பார்ட்டி என்று அழைக்கப்படும் தென்மேற்கு ஆப்ரிக்க மக்களின் கூட்டமைப்புக் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எர்னா சோல்பெர்க், (Erno Solberg), பிரதமர், நார்வே

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் பிரதமராக இருக்கிறார் எர்னா சோல்பெர்க். இந்நாட்டின் 28-வது பிரதமர் மற்றும் இந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் இவர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் இவர், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சி அதிகாரம் மற்றும் மண்டல வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார் எர்னா. 

(படம் உதவி: புதிய தலைமுறை கல்வி வார இதழ்)

No comments: