Sunday, October 11, 2020

குழந்தைகளுக்கென புதிதாய் ஒரு மாத இதழ் - சுட்டி யானை வெளிவந்துவிட்டது!


நேற்று இரவு வீட்டிற்குள் நுழைந்தபோது, நூலால் கட்டப்பட்ட ஏ4 பிரவுன் நிற கவர் என்னை வரவேற்றது. இதுக்கு எதுக்கு நூலைக்கட்டணும். பசையைத் தடவி நன்றாக ஒட்டி அனுப்பியிருந்தாலே போதுமே... என்று நினைத்தபடி அனுப்புநர் முகவரியைப் பார்த்தேன்.

சுட்டி யானை சிறுவர் இதழ் என்று இருந்தது... அடடே... சிறார்களுக்கு என்று... குறிப்பாக யானைகளுக்கு என்றே ஒரு தனி மாத இதழா..? என்று ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை அடைந்தேன். இதழின் பெயரையும் குட்டியானையின் உருவத்திலேயே பொறித்திருந்தது அசத்தலாக இருந்தது.

34 பக்க புத்தகம் இது. அட்டைப்பக்கம் வழுவழு தாளிலும், உள்பக்கங்கள் தரமான தாள்களிலும் அச்சிட்டிருக்கிறார்கள். (பத்திரிகையாளன் என்பதால் இதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவேன்). தரமான தாள்களைப் பயன்படுத்தினால், புத்தகம் நீண்டகாலத்திற்கு அழியாமல் இருக்கும். படங்கள் தெளிவாக, அழகாக அச்சிட்டுவரும். அது வாசகரை அந்த புத்தகத்தோடு ஒன்றிப்போகச் செய்யும். அதனால்தான் தாள்களின் தரத்தைப்பற்றி இங்கே சொன்னேன்.
அடுத்து அதன் கருப்பொருளைக் கவனித்தேன். அதாவது அந்த புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது. எது அதன் மையக்கருப்பொருளாக இருக்கிறது என்பதற்காக ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்கொண்டே வந்தேன். முதல் பக்கம் யானை. இரண்டாம் பக்கம் யானை... மூன்று, நான்கு, ஐந்து என அனைத்து பக்கங்களிலும் யானையைப் பற்றிய தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார்கள்.
குழந்தைகள் வண்ணம் தீட்டி மகிழ, புள்ளிகளை ஒன்றிணைத்து ஓவியம் வரைய என்றாலும் அதிலும் யானைகள்தான். சுட்டி யானை என்ற பெயருக்கு ஏற்றாற்போல... யானைகள்தான்.
இப்போது நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும். இது முழுக்க முழுக்க யானைகளைப் பற்றி தகவல்களைத் தரும் புத்தகம் என்று...
யானையின் மூதாதைகள் யார்? யானை தொடர்பான தாவரங்கள், செடிகொடிகள், யானையின் பெயர் கொண்ட செடி, கொடி, விதை வகைகள் என பொது அறிவுத் தகவல்களும், பாட்டி சொன்ன கதை, யானை பற்றிய கதை என்று கதைப்பக்கங்களும், யானையைப் பற்றிய சிறார் பாடலும் இதில் இருக்கின்றன...
சிறுவர்களுக்கான இதழ் என்று சொல்லி அச்சிட்டுத் தருபவர்கள், சிறிய அளவிலான எழுத்து வடிவத்தையே புத்தகம் முழுக்க பயன்படுத்துவார்கள். குழந்தைகளாயிற்றே... சற்றே பெரிய எழுத்து வடிவத்தை பயன்படுத்துவோம் என்று எண்ண மாட்டார்கள்.
அதையும் நுணுக்கமாக கருத்தில் கொண்டு, பெரிய எழுத்து வடிவில் கட்டுரை, கதை, பாடல் என அனைத்தையும் சுட்டி யானை கொண்டிருப்பது சிறப்பான முன்னெடுப்பாகக் கருதுகிறேன்.
புத்தகத்தை திறந்ததும், தும்பி சிறார் இதழின் வடிவமைப்பை நினைவுபடுத்தின. ஆயினும் சிறப்பாகவே இருந்தது. ஒருபுறம் ஆசிரியர் குழு குறித்த விவரங்கள் (Imprint என்று பத்திரிகை உலகில் சொல்லுவோம்), மறுபக்கம் இதன் ஆக்கத்திற்கு பேருதவி புரிந்த நல்லுள்ளங்களின் பெயர்களைப் பொறித்து, அவர்களுக்கு நன்றியறிவித்திருந்தது. இதில் எனக்கு நன்கு பரிச்சயமான நண்பர் இயக்குநர் குழந்தை வேலப்பனின் பெயரும் இருந்தது ஆச்சர்யம் கலந்த உவகையைத் தந்தது. திரைத்துறையைச் சார்ந்த படைப்பாளி, இந்த தளத்திலும் இயங்குகிறாரே என்ற உவகைதான் அது. நம் பெயர் இல்லாமல் போயிற்றே என்ற வருத்தமும் மேலிட்டதை பதிவு செய்யாமல் போனால் என் மனசாட்சி என்னை மன்னிக்காது.
புத்தக்கத்தை வரிவிடாமல் படிக்க வேண்டும். படித்தால் அதில் பல நன்மைகள் உண்டு என்பதையும் இப்புத்தகத்தைப் படித்தபின் தெரிந்து கொண்டேன். அது எப்படின்னு கேக்கறவங்க மட்டும்? தொடர்ந்து படிங்க... வேண்டாம்னு நினைக்கறவங்க அடுத்து வரும் மூன்று பத்திகளை தாண்டி, படித்துக்கொள்ளலாம்.
அடுத்த இரு பக்கங்களும்... சுட்டியானை ஆசிரியர் குழுவின் அறிமுகம்... ஏன் இந்த இதழ்? எதற்காக? எப்படி? உள்ளிட்ட தகவல்கள் இருந்தன. அதன் கடைசி வரியில் ஒரு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தோடு காய்கறி விதை பொட்டலமும் வைத்திருக்கிறோம். உங்கள் வீட்டில் விதையுங்கள் என்று கொடுத்திருந்தது.

என்ன... காய்கறி விதைகளா..? அதுவும் மரபுக் காய்கறி விதைகளா? புத்தகத்தை வெளியே எடுத்ததும் பிரவுன் கவரை தூக்கிப்போட்டதை தேடி எடுத்து உள்ளே கையை விட்டுப்பார்த்தால், மரபுக் காய்கறி விதைகள். உள்ளே என்னென்ன விதைகள் என்று பார்க்கவில்லை. அதற்கு தொட்டிகள் வேண்டுமே என்றுதான் சிந்தனை ஓடியது. விதைக்காக மூன்று தொட்டிகளை வாங்கிவிட வேண்டியதுதான் என முடிவு செய்துகொண்டேன்.
விதைகளைப் பார்த்ததும் உள்ளத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு வாரங்களுக்கு முன்பு மரபு சார் காய்கறி விதை தேடி, பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் அலைந்து திரிந்தது நினைவுக்கு வந்தது. கிடைத்த விதை களை வாங்கி மொட்டைமாடியில் கத்தரியையும், வெண்டையையும் விதைத்தேன். இப்போதுதான் தழைத்துவளர ஆரம்பித்திருக்கிறது. வரி விடாமல் படித்ததால்தான் காய்கறி விதை இதனுள் இருப்பது தெரிய வந்தது. இல்லையெனில் குப்பையோடு குப்பையாக போயிருக்கும். இதற்காகவே இந்த சுட்டி யானை ஆசிரியர் குழுவை மேடை போட்டு பாராட்டலாம். நூலால் கட்டியிருந்தன் காரணமும் புரிந்தது.
ஒரு யானை, தான் சாப்பிடும் உணவில் 60 சதவீதம் செரித்தும், 40 சதவீதம் செரிக்காமலும் வைத்துவிடும். செரிக்காதவை பல்வேறு ரசாயன மாற்றங்களோடு, வீரியம் பெற்று, யானையின் சாணத்தின் வழியே வெளியே வந்துவிழும். அந்த சாணத்தில் இருந்து பல்வேறு செடி, கொடி, மரங்கள் முளைத்து, குட்டி வனமாக மாறும். அப்படி ஒரு செயல்பாட்டை சுட்டியானை விதைக்க ஆரம்பித்திருக்கிறது.
இதன் ஆசிரியர் குழுவில் உள்ள ஆற்றல் பிரவின்குமார் நானறிந்த முகநூல் நண்பர். அவர்தான் இந்த இதழை எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் ஆசிரியர் குழுவில் உள்ள அத்தனை உள்ளங்களுக்கும் பத்திரிகையாளனாக மட்டுமின்றி, சிறார் எழுத்தாளனாக மட்டுமின்றி, முதலில் ஒரு வாசகனாக நன்றி கூறிக்கொள்கிறேன். சிறுவயதில் வறுமையின் உழன்ற எனது உலகத்தை உயிர்ப்போடு வைத்திருந்தது பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணிகாமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஞானபூமி போன்ற சிறார் இதழ்கள்தான்.
இன்று அவையெல்லாம் கால வெள்ளத்தில் காணமல்போய்விட்டன. அடுத்து வந்த சுட்டிவிகடனும் மறைந்துவிட்டான். தும்பி, பொம்மி, பஞ்சுமிட்டாய் என நம்பிக்கை கீற்றுகள் ஆங்காங்கே தென்படும்போது, மற்றொரு ஒளிக்கீற்றாய் வெளிவரும் சுட்டியானையை என்னிரு கைகளை விரித்து அணைத்து, வாஞ்சையோடு வரவேற்கிறேன். வாடா என் சுட்டியானைப் பயலே... உனது புத்தகத்தில் நிச்சயம் எனது எழுத்துக்களும் அவ்வப்போது வாலாட்டும் என்று இப்போதே வாக்கு தந்துவிடுகிறேன்.
கடைசி பக்கத்தில் ஆசிரியர் குழு கொடுத்த சுட்டியானை இதழ் குறித்த வாசக(விளம்பர)ம் அசர வைத்தது.


தினம் 1 ரூபாய் சேமித்து, மாதம் 30 ரூபாயில் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்...
குழந்தைகளுக்கு அன்பளிப்பாக சுட்டி யானையைக் கொடுங்கள்
நீங்கள் படித்த பள்ளிகளுக்கு சுட்டி யானையை பரிசளியுங்கள்...
என்று குறிப்பிட்டிருந்தது. வாழ்த்துகள்.
புத்தகம் வேண்டுவோர்...
சுட்டி யானை மாத இதழ்,
7.கதித்த மலை சாலை,
ஊத்துக்குளி - 638751,
திருப்பூர் - மாவட்டம்.
அலைபேசி: 9500125125,
மின்னஞ்சல்: chuttiyaanai@gmail.com
திருப்பூரில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் அச்சிட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சுட்டியானையை இயல்வாகை வெளியிடுகிறது.
கொரோனாவால் ஆறுமாத காலம் முடங்கிப்போயிருந்த மனிதகுலம், இப்போதுதான் மெல்ல மெல்ல நம்பிக்கையோடு எழ ஆரம்பித்திருக்கிறது. இதே காலத்தில் சிறுவர்களுக்கு நம்பிக்கையூட்ட, சுட்டியானை துள்ளிக்குதித்து வர ஆரம்பித்துவிட்டது.
இந்த புத்தகத்திற்காக செயல்படும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பேரன்பும் பெருவாழ்த்தும்...
இனி ஒவ்வொரு மாதமும் சுட்டி யானை, கம்பீர நடைபோட்டு வர இருக்கிறது. வரவேற்கத் தயாராகுங்கள் குழந்தைகளே...
மிக்க அன்புடன்
உங்கள்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#chutti_yaanai #சுட்டி_யானை #வாலு_டிவி

No comments: