Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

No comments: