Tuesday, June 26, 2012

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 9 (உண்மைச் சம்பவம்)

தே நேரம் நவநீதன் இருக்கும் தெருவிற்கு, அடுத்ததாக இருக்கும், குமணன் தெருவில் சிலர் வெளியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் கார்த்தியும் ஒருவன். அவனுக்கு வயது 17 இருக்கும். சங்கருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினன் ஆவான். அவன் வீட்டு வாசலில், கயிற்றுக் கட்டிலைப் போட்டு,   அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை வெள்ளையாய் ஒரு உருவம் தட்டி எழுப்பியது. அரை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பியது போல், தூக்க கலக்கத்தினூடே கண்விழித்துப் பார்த்தான்.

அந்த உருவம் அவனை கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது. சற்று நேரம் கழித்து, அவனது வயிற்றுப் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டது. அவனைப் பார்த்து கோரமாய் சிரித்தபடி அவனது கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது.



கார்த்திக்கின் தூக்கம் கணப்பொழுதில் கரைந்து போனது. திகிலும் பயமும் அவனது நெஞ்சில் அறைய, அந்த உருவத்தை கீழே தள்ள முயன்றான். முடியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளோரை உதவிக்கு கூப்பிடலாமென்று வாயைத் திறக்க முயன்றும் அவனால் முடியவில்லை.

அந்த உருவத்தை கீழே தள்ளவும் முடியவில்லை. உதவிக்கு கூப்பிட நினைத்தாலும் தன்னால் பேசமுடியவில்லையே என்று நொடிப்பொழுதில் யோசித்தவன், விரைந்து ஏதேனும் செய்யவில்லை என்றால், இன்னும் சற்று நேரத்தில் தனது சப்தநாடியும் அடங்கிவிடும் என்பதை நினைத்து, அலறத் தொடங்கினான். அவன் அலறினானே தவிர, அவனது குரல் வெளியே யாருக்கும் கேட்கவில்லை. உதவிக்கு அவன் அம்மாவை கூப்பிட்டான். அவனுக்குள்தான் அந்த குரல் கேட்டதே தவிர, வெளியே யாருக்கும் கேட்கவில்லை

திடீரென்று எங்கிருந்து அவனுக்கு தைரியம் வந்ததோ தெரியவில்லை. அந்த உருவத்தின் கழுத்தை எட்டிப் பிடித்துக் கொண்டான். கட்டிலுக்கு கீழே கிடந்த செருப்பை எடுத்து, அந்த உருவத்தை பலங்கொண்ட மட்டும் அடிக்கத் தொடங்கினான்.

வெள்ளை உருவத்தின் பிடி தளரத் தளர, இவனது குரல் மெல்ல மெல்ல வெளியே கேட்கத் துவங்கியது.

‘’என்னை விட்டுட்டு போயிடு… யாருகிட்ட வந்து விளையாடற… ..ஆஆஆஆஆஆஆஆ’’ என்று உச்சகட்ட குரலில் கத்தினான். இவனது குரல் தூங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நவநீதன் காதுகளில் விழுந்தது.

'யாருடா இது... இந்த நேரத்துல இப்படி காட்டுக் கத்து கத்தறது…' என மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தவன், அப்படியே தூங்கிப் போனான்.

கார்த்திக்கின் சத்ததைக் கேட்டு அந்த தெருவில் படுத்திருந்தவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்து, அவனையே பார்த்தனர்.

கார்த்திக் காற்றில் செருப்பை வீசிக்கொண்டிருப்பது அவர்களது கண்களுக்கு புலப்பட்டது


கார்த்திக்கின் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவனது அம்மா "என்னடா கார்த்திக் ஆச்சு? என்னடா செருப்பை காத்துல வீசிகிட்டு இருக்க? ஏன் இப்படி சத்தம் போட்ட…" என்று பதற்றத்தோடு கேட்க ஆரம்பித்தார். நடந்த விஷயத்தை அவன் சொல்லவும் "நீ வெளியில படுக்காதடா… வா உள்ள வந்து படு" என்றபடியே அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

அடுத்த நிமிடத்தில் அந்த தெருவில் வெளியே படுத்திருந்தவர்கள் அத்தனை பேரும் ‘’நான் அப்பவே சொல்லல… இங்க பேய் நடமாடுதுன்னு…’’ என்று அவரவர்களும் முணுமுணுத்தபடியே வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டனர். சில மணித்துளிகளில் குமணன் தெரு வெறிச்சோடிப்போனது

வானத்தில் வீதி உலா வந்து கொண்டிருந்த வெண்ணிலவும் இந்த சம்பவத்தைக் கண்டு பயந்து போனதைப் போல் மேகங்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டு, கதிரவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கியது.

காலைக் கதிரவன் தன் கதிர்களை பூமியெங்கும் விசாலமாக பரப்பி சோம்பலை முறித்துக் கொண்டான். நவநீதன் எழுவதற்குள் அவனது அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். அது ஏழு மணி முப்பது நிமிடங்களைக் காட்டியது. அம்மாவைக் கூப்பிட்டு பார்த்தான். பதில் வராமல் போகவே, ‘ஓ இன்னிக்கு சனிக்கிழமை… அப்ப ரெண்டு பேரும் சிவன் கோயிலுக்கு போயிருப்பாங்க’ என மனதில் நினைத்துக் கொண்டவன், இன்று தனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதையும் நினைத்துக் கொண்டான்.

ப்ரஷ்ஷில் பேஸ்ட்டை பிதுக்கி வைத்து, பல்லைத் துலக்கிக்கொண்டே, பக்கத்துத் தெருவில் இருக்கும் சங்கரின் வீட்டிற்குப் போனான். சங்கரின் தம்பி மோகன் வெளியே இருக்கவும், மோகன்... சங்கர் எப்டிடா இருக்கான்.

"அண்ணன் தூங்கிக்கிட்டுதான் இருக்கான். இன்னும் எழுந்திரிக்கல. அப்பாவும், அம்மாவும் இன்னும் தூங்கிக்கிட்டுதான் இருக்காங்க. ராத்திரி அவங்க வீட்டுக்கு வர நடுராத்திரியாகிடுச்சு.” என்றான் மோகன்.

"சரிடா... நான் காலேஜ் போகணும்... ஈவ்னிங் வந்து பாக்கறேன்” என்றான் நவநீதன். 

சங்கரின் வீட்டிலிருந்து, தனது வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் அவனது வேலைகளை முடித்து, குளித்து ரெடியாகி விட்டான். அம்மா சமைத்து வைத்திருந்த இட்லியை சாப்பிட்டு முடித்துவிட்டு, காலேஜிற்கு தேவையான புத்தங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான். அது மணி 8.50 என காட்டியது.

9.00 மணிக்கு பஸ் பிடித்தால் போதும் சரியான நேரத்தில் காலேஜிற்கு போய்விடலாம் என்று மனதிற்குள் கணக்கு போட்டபடியே, பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான். சில விநாடிகளுக்குள் பஸ் வரவே ஏறிக் கொண்டான்.

அடுத்த 20 நிமிடத்தில் கல்லூரி முன் வந்து நின்ற அந்த பஸ், நவநீதனை இறக்கி விட்டுச் சென்றது

நவநீதன்  நேரே வகுப்புக்கு சென்றான். அவனது நண்பர் நண்பிகள் நலவிசாரிப்பு முடிந்தது. வகுப்புக்கு ஆசிரியர்கள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்க, மாலை 3 மணி வரை கல்லூரியில் மூழ்கிப் போனான்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு போக பஸ் ஏறினான். ஒரு சீட் காலியாக இருக்கவே, அங்கு உட்கார்ந்து கொண்டான். அவனது மூளை நாளைய பொழுதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. ‘நாளை ஞாயிற்றுக்கிழமை, கண்டீப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். பக்கத்து ஊர் டீமுக்கும் நமக்கும் மேட்ச் இருக்கிறது. நம்ம இடத்தில் வந்து வந்து விளையாடற டீமை பஞ்சராக்கிடணும். ச்சே... சங்கர் இருந்தான்னா டீமுக்கு ரொம்ப பலமா இருக்கும். அவன் இன்னிக்குள்ள சரியாகிடுவானா? சரியாகிட்டானா ஒரு ஆல்ரவுண்டர் பலம் நம்ம டீமுக்கு கிடைக்கும். என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனை, ஒரு கை இழுத்துப் பிடித்தது.

யாரென்று திரும்பி பார்த்த நவநீதனின் கண்களுக்கு கார்த்திக் தெரிந்தான். “என்னடா கார்த்திக்… இந்த பஸ்ஸுல வர…’’ என்றான் நவநீதன்.

"தலைவாசல்ல இருக்கிற மாகாளி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரேன்" என்றான் கார்த்திக்.

"என்னடா குன்றத்தூர்ல இல்லாத கோவிலாடா..? தலைவாசல்ல இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வர. ஏதேனும் வேண்டுதலா..?"

"வேண்டுதல் எல்லாம் ஒண்ணும் இல்லண்ணே... நேத்து நைட்டு எங்க தெருவுல ஒரு பிரச்சினை ஆயிடுச்சிண்ணே.? அதானால மாகாளி கோவிலுக்கு போயிட்டு வான்னு எங்க அம்மா சொன்னாங்க. அதான் போயிட்டு வரேன்."

"ஆமாண்டா… நேத்து நைட்டு உங்க தெருவுல இருந்து யாரோ கத்தின மாதிரி சத்தம் கேட்டுச்சி… ஆனா நான் தூக்கத்துல இருந்தனா..? எனக்கு ஒண்ணும் தெரியலடா… என்னடா ஆச்சி… யார் கத்தினா..?"

" அப்படி  கத்தினதே நான்தான்… தெரியுமா உங்களுக்கு?"

திடுக்கிட்டு நிமிர்ந்த நவநீதன்… "உனக்கு என்னடா ஆச்சி.. ஏண்டா கத்தின..?"



நேற்று இரவு நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொல்லி முடித்த கார்த்திக் "எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி… அதான் என் அம்மா மாகாளி கோயிலுக்கு போயிட்டு வரசொன்னாங்க…" என்றான் கார்த்திக்

"டேய்... பேயெல்லாம் ஏதுமில்லடா.. எல்லாம் சும்மாடா…" என்றான் நவநீதன்.

"அண்ணே… அப்போ நேத்து நான் பாத்தது எல்லாம் பொய்யின்னு சொல்றீங்களா…"

"ஆமாம்… நீ கனவு ஏதேனும் கண்டிருப்ப… சரி… நேர்ல பார்த்தேன்னு சொல்றியே… நீ அந்த உருவத்தை கீழே தள்ளி விட்டேன்னு சொல்றியே… தள்ளிவிட்டதுக்கப்புறம் அந்த உருவத்தை பார்த்தியா..?"

"இல்லண்ணே… அதுக்கப்புறம் நான் பார்க்கல…"

"உலகத்தில பேயும் இல்ல... பிசாசும் இல்ல. அதான் உண்மை… ஆமாம்… யாராச்சும் உன்னிடம் பேய் கதை ஏதாச்சும் சொன்னாங்களா..?"

"இல்லண்ணே"

"நேத்து நைட்டு, தூங்கறதுக்கு முன்னாடி ஏதாச்சும் படம் பார்த்தியா..?"

"ஆமாம்ணே…"

"என்ன படம்டா பார்த்த…"

"ஈவில் டெட் படம் பார்த்தேன்… ஸ்டார் மூவிஸ்ல…"

"நீ பேயை பார்த்தேன்னு சொல்றதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு… அது ஒரு பேய் படம்… படம் முழுக்க திகிலாத்தான் இருந்திருக்கும்… நேத்து எத்தனை சீன்ல பயந்து போனன்னு சொல்லு..?"

"படம் முழுக்க பயம்தாண்ணே… எந்திருச்சி வெளிய கூட வரல. உச்சா போகக்கூட எழுந்திருக்கல. டிவியை ஆஃப் பண்ணக்கூட தைரியம் இல்ல. அவ்ளோ பயமா இருந்திச்சி…"

"இதுதான் நீ பேயைப் பார்த்தேன்னு சொல்றதுக்கான காரணம். அதாவது உன் ஆழ்மனசுல… நேத்து பார்த்த படம் பதிஞ்சி போயிருச்சி… நீ நல்ல தூக்கத்துல இருக்கும் போது, உன் ஆழ்மனசு விழிச்சிருக்கு. நேத்து நைட்டு பார்த்த படம் கனவா வந்திருக்கு… அவ்ளோதான்… இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. புரியுதாடா..." என்றான் நவநீதன். 

"அண்ணே... பேய் இல்லன்னு சொல்றீங்களா... நான் பார்த்தது பொய்னு சொல்றீங்களா?"

"நீ பார்த்தது பொய்னு சொல்லடா. அது உன் மனப்பிரமை. அவ்ளோதான். புரிஞ்சுதா..?”

"
புரிந்தும் புரியாமல் போல் விழித்தான் கார்த்திக். அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அப்போது கண்டக்டரின் குரல் அவர்களின் கவனத்தைக் கலைத்தது.

"குன்றத்தூர் எல்லாம் இறங்குங்க… குன்றத்தூர்…என கண்டக்டர் அழைக்கவே, இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர்.

இறங்கியவர்கள் தங்களது வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்… அப்போது கிரிக்கெட் விளையாடும் நண்பர்களில் ஒருவனான பெரியசாமி பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாக ஓடிவந்தான்.





அவனை தடுத்து நிறுத்திய நவநீதன்"ஏண்டா இப்படி வேகமா ஓடிவர..?என்று கேட்டான்.

அவன் வேகமாய் ஓடி வந்ததற்கான காரணத்தைச் சொன்னான்.அதைக் கேட்ட நவநீதன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க… கார்த்திக் மயங்கி விழுந்தான்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த நவநீதனின் மூளையில், பெரியசாமி சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

"அண்ணே... சங்கரை பேய் அடிச்சு கொன்னுடிச்சிண்ணே... சங்கர் செத்துப்போயிட்டாண்ணே”
(தொடரும்)

++++++++++++++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...
முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

Tuesday, August 16, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 (உண்மைச் சம்பவம்)

ஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது.

சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறியது மட்டுமின்றி, முகமும் இருண்டு போனது.

ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார் “அரே சைத்தான்... நீயா... இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடலாம், யாருகிட்ட விளையாடுற என்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே வைத்தபடி, ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தார்.

பாயின் முகத்தை, அந்த ஆவி பயத்தோடு பார்த்தது.

மந்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சட்டென்று எழுந்து சங்கரின் உச்சிமுடியை எட்டிப் பிடித்தார் பஷீர். பிடித்ததுமே அவர் இன்னும் வேகமாக மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.

சங்கரின் மேல் இருந்த ஆவி, ஐயோ... என்னை விடுங்க, வலிக்குது பாய்... என அலறியது.

வேதாசலத்தை சைகை மூலம் அருகில் அழைத்த பாய், சங்கரின் முடியை கண்ணால் காட்டி இந்த முடியில ஒரு முடி கூட பிரிஞ்சிடக் கூடாது. அப்படியே கெட்டியா பிடிச்சுக்குங்க என்றார்.

சங்கரின் அருகே வந்த வேதாசலம், பஷீர் சொன்னபடியே சங்கரின் உச்சி முடியை, பயம் கலந்த பார்வையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

விட்டுடுங்க பாய்.. நான் போயிடறேன்...வேணாம் பாய் என்னை விட்டுடுங்க.. நான் எங்கயாச்சும் ஓடிப் போயிடறேன். மாமா என்னை விட்டுடுங்கஎன்று ஆவி கத்திக்கொண்டே இருந்தது.

அதன் குரலை சிறிதும் சட்டை செய்யத பஷீர், அருகிலிருந்த தாயத்து டப்பாவிலிருந்து, கத்தரிக்கோலை கையிலெடுத்தார். வேதாசலம் பிடித்திருந்த உச்சி முடியை நறுக்கென்று கத்தரித்தார்.

சங்கரின் உச்சி முடி கத்தரிக்கப்பட்டதும் சங்கரின் மீதிருந்த ஆவியின் குரல் அடங்கிப் போய்விட்டது. சங்கர் மயக்கமானவன் போல் கீழே விழப்போனான்.

ஒரு கையில் சங்கரின் உச்சிமுடியைப் பிடித்துக் கொண்டிருந்த வேதாசலம், மறுகையால் அவனைத் தாங்கிப் பிடித்தார்.

அவரது கையிலிருந்த உச்சி முடியை மிகவும் பத்திரமாக வாங்கிய பஷீர், சில மந்திரங்களை முணுமுணுத்தபடி அதை தாயத்துப் பெட்டியில் வைத்து பத்திரமாக மூடினார்.

ஏற்கெனவே மந்திரித்து வைத்திருந்த தாயத்தை எடுத்து, சங்கரின் வலது கையில் கட்டி விட்டார். சங்கர் ஆழ்ந்த உறக்கத்திற்ப் போனவன் போல் தெரிந்தான்.

வேதாசலத்தைப் பார்த்து இனி பிரச்சினை இல்லை. பயப்படாம உங்க பையன நீங்க கூட்டிகிட்டு போகலாம். நான் மந்திரிச்சு கொடுக்கறதை வாங்கிக்கிட்டு, நான் சொல்றதை மட்டும் மறக்காம செஞ்சுடுங்க என்றார் பஷீர்.

அதற்குள் கமலம்மாளும், சங்கரின் சித்தி அலமேலுவும் வந்து, அவனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டனர். சங்கரிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. 

வேதாசலத்தை தனியே அழைத்துச் சென்ற பஷீர் பாய், அவரிடம் எதையோ ரகசியமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.

கமலம்மாள் பஷீரைப் பார்த்து பாய்.. எம்பையன ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போகலாமா என்றார்.

ம்ம்... தாரளமா கூட்டிகிட்டு போங்க... பயப்பட வேண்டாம் என்றுவிட்டு, மீண்டும் வேதாசலத்திடம் ரகசியமாய் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.

அதுவரை ஓரமாக நின்று கொண்டிருந்த ராமுவையும், வெள்ளியங்கிரியையும் கூப்பிட்ட கமலம்மாள் சங்கரை ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போங்கப்பா என்றார்.

தயக்கத்தோடு வந்த ராமுவும், வெள்ளியங்கிரியும் சங்கரை 

ஒரு வித பயத்தோடு கைத்தாங்கலாகபெ பிடித்துக் கொண்டனர்.

ராமுவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த நவநீதனைப் பார்த்து நவநீ, நீயும் எங்கக்கூட வாயேன் என்றான் வெள்ளியங்கிரி.

‘இனிமேல் கிளம்ப வேண்டியதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, நவநீதனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

ஐந்து நிமிடம் கழித்து வேதாசலம் தனது கையில் மூன்று எலுமிச்சம்பழம், யந்திரத் தகடு என சில மந்திர சமாச்சாரங்களை எடுத்து வந்தார்.

வேதசலத்திற்காக காத்திருந்தவர்கள், அவர் வந்ததும், குன்றத்தூரில் இருந்து வரும்போது எப்படி ஆட்டோவில் உட்கார்ந்திருந்தார்களோ, அதே இடங்களில் இப்போதும் உட்கார்ந்து கொண்டனர்.

ராமுவும் வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
ஆட்டோ கிளம்பியது. கமலம்மாள் தனது மடியில் சங்கரை கிடத்திக் கொண்டார். சங்கரின் சித்தி மறுபுறம் அமர்ந்திருக்க, அவருக்கு பக்கத்தில் நவநீதன் உட்கார்ந்திருந்தான்.

வேதாசலம் பின்புறம் உட்கார முயல, ஆட்டோ டிரைவர் உதறலோடு கூப்பிட்டான்.

அண்ணே... முன்னாடி என்னோட வந்து உட்காருங்க... எனக்கு தனியா முன்னாடி உட்கார்ந்திருக்க பயமாயிருக்கு என்றான்.

அடச்சே.. நல்ல ஆம்பளடா நீ... என்று அவனை திட்டியவாறு, ஆட்டோ டிரைவரோடு முன்புறம் உட்கார்ந்து கொண்டார்.

"அட போண்ணே... நான் இந்த மாதிரி... என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. உங்க பையன் ஆவி பிடிச்ச மாதிரி இருந்தான். திடீர்னு நல்லாயிட்ட மாதிரி தெரிஞ்சான். மறுபடியும் ஆவி வந்து பிடிச்சுக்கிச்சு... இதெல்லாம் நான் பார்த்ததே இல்லண்ணே... அங்க என்னால நிக்கவும் முடியல... அங்கிருந்து நகரவும் முடியல... எனக்கு பேயின்னாலே பயம்ணே... ஆட்டோவுக்கு கூட காசு வேணாம்.. பத்திரமா என்னை குன்றத்தூர்ல போய் விட்டுட்டீங்கன்னா அதுவே போதும்ணே...” என்றான்.

”அடப்பாவி... எல்லாம் சரியாயிடுச்சிடா... நீதான்டா எங்களை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும். பயந்து தொலையம, ஒழுங்கா ரோட்டை பாத்து வண்டிய ஓட்டு” என்றார் வேதாசலம்

அதுக்குத்தாண்ணே உங்களை என் பக்கத்திலயே உட்காரச் சொன்னேன்… என்றபடி ஆட்டோவை குன்றத்தூரை நோக்கி விரட்டினான்.

வேதாசலமும், ஆட்டோ டிரைவரும் பேசிக்கொண்டு வந்ததை, கேட்டுக்கொண்டிருந்த நவநீதன் தனது கடிகாரத்தைப் பார்த்தான். அந்த அவனது ரேடியம் வாட்ச், மணி இப்போது 11.30 என்று தெளிவாய்க் காட்டியது.   

அந்த நள்ளிரவு வேளையில், தேசிய நெடுஞ்சாலையில் சுத்தமாய் ஜனநடமாட்டமில்லை. பெரிய பெரிய டேங்கர் லாரிகளும், அரசு விரைவுப் பேருந்துகளும், தனியார் டீலக்ஸ் பேருந்துகளும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்டோவை கடந்து சென்றன.

ஆட்டோவானது குன்றத்தூரிலுள்ள வேதாசலம் வீட்டிற்கு போய்ச்சேரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை.

வேதாசலம் வீட்டின் முன்பு ஆட்டோ வந்து நின்றது. பின்னாடியே ராமுவும், வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.


ஆட்டோவின் சத்தம் கேட்டதும், ஜிம்மி நாய் குலைக்க ஆரம்பித்தது. டேய் ஜிம்மி... என்று வேதசாலம் அதட்டவும், ஜிம்மி அமைதியானது.

சங்கரை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து வந்தனர். அதுவரை அவர்களுடன் இருந்த நவநீதன், நேரே வேதாசலத்திடம் சென்று நான் போயிட்டு வர்றேங்க என்றான்.

"நீ எங்க கூட வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா நவநீ... உங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்திருந்தாலும் கூட, அத மனசில வச்சிக்காம, இந்த அர்த்த ராத்திரியில எங்க கூட வந்தியே... என்கூட கூட்டிக்கிட்டு வந்தவனுங்க தொடைநடுங்கிகளா போயிட்டானுங்க. நீயும் வரலன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும். உனக்கு ரொம்ப நல்ல மனசுப்பா... போய்ட்டு வாப்பா’’ என்றார்

"அட ஏங்க, பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, அவன் என்னோட பிரண்டு... சரி நான் வர்றேங்க..?" என்று விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டை நோக்கிப் போனான் நவநீதன்.

ஒரு நிமிட நடையில் வீட்டை அடைந்தான் நவநீதன். வீட்டிற்கு வெளியே நவநீதனின் அம்மாவும், அப்பாவும் தூங்கிக் கொண்டிருக்க, சத்தம் காட்டாமல் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்த்தும் டியூப் லைட்டை எரிய விட்டான். மணி 12 என்பதற்கு அடையாளமாக சுவர் கடிகாரம் மெல்லிசை ஒன்றை இசைக்க விட்டு, சில மணித்துளிகளில் அமைதியானது.

சில நிமிடங்களில் லுங்கிக்கு மாறியவன், பாயை விரித்து படுத்துக் கொண்டான். அவன் மனதில், இன்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற சம்பவங்கள் வந்து போயின.

அடுக்கடுக்காய் கேள்விகளும், குழப்பங்களும் அலைகழித்தன.
இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டே இருந்தவன், எப்படியோ தூங்கிப் போனான்.

Monday, July 18, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 (உண்மைச் சம்பவம்)

வநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான்.

அவன் மனதை அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்... என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல... ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்களா?. ஆளுதான் வளர்ந்திருக்கானுங்களே தவிர அறிவு வளரலயே...’ என குழப்பமாய் யோசித்துக் கொண்டே வந்தான்.

அதற்குள் கடை வந்து விடவே, நூறு ரூபாயை நீட்டி “ஒரு பெப்ஸி, நாலு முறுக்கு கொடுங்க...” என்றான்.

“சில்லறை இல்ல தம்பி... வேணும்னா ஒரு பாக்கெட் முறுக்கும் பெப்ஸியும் வாங்கிக்கோங்க… சில்லறை தரேன்” என்றார் கடைக்காரர்.

“சரி... அப்படித்தான் கொடுங்க...” என்றவன், கடைக்காரரைப் பார்த்து “ஏங்க... இந்த பஷீர் பாய் எப்படிப்பட்ட ஆளுங்க... பேய் ஓட்டுவாரா..? இல்ல எல்லாம் சும்மா ஏமாத்து வேலையா..?”

“எனக்கு தெரியாது தம்பி, என்னோட அண்ணனோட கடை இது. அவர்தான் தினமும் இந்த கடையில இருப்பார். நான் இன்னிக்குத்தான் இந்த கடைப்பக்கமே வரேன்…” என்றார்.

கேட்ட தகவல் கிடக்காமல் போனதில் மனதிற்குள் சற்று வருத்தப்பட்டாலும், கடைக்காரர் கொடுத்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும், மீதி சில்லறையும் வாங்கிக் கொண்டு, அந்த இருண்ட சந்தினுள் நவநீதன் திரும்பி வந்தான்.

நவநீதன் வரும் வரை அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆவி, நவநீதன் கையில் தான் கேட்ட பொருள்கள் இருப்பதை பார்த்து, முகத்தைப் பிரகாசப் படுத்திக் கொண்டது.

அதே சமயத்தில் “டேய்... கடைக்கு போனவன்... முழுசா திரும்பிட்டான்டா” என்று அருகிலிருந்த நண்பனின் காதில் கிசுகிசுத்தான் வெள்ளியங்கிரி. அந்த கிசுகிசுப்பு ஆவியின் காதில் விழவே... சடாரென தன் தலையைத் திருப்பி வெள்ளியங்கிரியை முறைக்கவே... வெலவெலத்துப்போனான் வெள்ளியங்கிரி. குப்பென வியர்த்து வழியத்தொடங்கியது அவன் முகம்.

நவநீதன் தன்னிடமிருந்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும் பாயிடம் கொடுத்து விட்டு, எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ, அந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.

நவநீதன் கொடுத்த பொருட்களை வாங்கிய பஷீர் பாய், ஆவியிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்துக் கொண்டார்.

தன்னிடம் உடனே கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ஆவி, பாயின் இந்த செய்கையால் ஏமாற்றமடைந்ததால், பஷீரை ஏக்கத்துடன் பார்த்தது.

“என்ன பாக்கற... இதெல்லாம் உனக்கு தரலன்னா..?”

‘உம்’ என்பது போல் தலையை ஆட்டியது ஆவி.

“தரேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு... இதெல்லாம் வாங்கி சாப்பிட்டதும், இந்த பையனை விட்டு விட்டு போயிடறேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும். இந்த பையன் உடம்பை விட்டு போயிடணும்... இதெல்லாம் செய்யறேன்னு சொல்லு தரேன்...” என்றார்.

“ம்ம்... நீங்க சொன்ன படி சத்தியம் செய்யறேன்...” என்றது ஆவி.

“உன்னை நம்பறேன்... ஏமாத்து வேலை ஏதாச்சும் பண்ணினா, உன்னை எங்கயும் போக முடியாதபடி பண்ணிடுவேன்... ஜாக்கிரதை...” என்ற படியே பஷீர் முறுக்கு பாக்கெட்டையும், பெப்ஸியையும் ஆவியிடம் கொடுத்தார்.

“ம்ம்... இந்தா தின்னுட்டு.... சத்தியம் பண்ணிட்டு ஓடிப்போ...” என்றார் பஷீர்.

முறுக்கு பாக்கெட்டை ஆவலாக வாங்கிய ஆவி, அடுத்த சில நிமிடத்திற்குள் அனைத்தையும் காலி செய்தது. முறுக்கு சாப்பிடும் போது எழுந்த  “நறுக்... முறுக்...” சப்தம், அங்கிருந்தவர்களின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுந்தது. அடுத்ததாக பெப்ஸியை எடுத்த ஆவி, ஒரே மூச்சில் கடக்... முடக் என குடித்து விட்டு வெறும் பாட்டிலை கீழே வைத்தது.

இத்தனையும் 5 நிமிடத்தில் ஆவி சாப்பிட்டதைப் பார்த்த நவநீதனுக்கு, ஏதோ ஐந்து நாள் பட்டினி கிடந்தவன் அரக்க பரக்க சாப்பிட்டதைப் போல் தெரிந்தது.

‘ம்... சாப்பிட்டு விட்டேன். இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு’ என்று கேட்பது போல் பஷீரின் முகத்தை ஆவி பார்த்தது.

“என்ன பாக்கற.. நான் சொல்ற மாதிரி, சொல்லி சத்தியம் பண்ணிட்டு ஓடிப் போயிடணும்... செய்வியா..?” என்றார்.

“நான் என்னான்னு சொல்லணும்... சொல்லுங்க..?”என்றது ஆவி.

“பஷீர் பாய் மீது சத்தியமா, நாகூர் ஆண்டவர் மீது சத்தியமா, இன்ஷா அல்லா மீது சத்தியமா இந்த பையன விட்டு ஒடிப் போயிடறேன். இனி இந்தப் பையன மட்டுமில்ல, யாரையுமே பிடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்” என்றார் பஷீர்.

நம்மை போகச் சொல்றாங்களே என்பது போல் ஒரு பரிதாபமான பார்வையை ஆவி பார்த்தது.

“டேய்... நீ கேட்டத வாங்கிக் கொடுத்தாச்சு... தின்னதும் பையனை விட்டுட்டு போயிடறேன்னு சொல்லியிருக்க.. இப்ப நீ சத்தியம் பண்ணறியா... இல்ல என் வேலையை காட்டட்டுமா?” என்றபடி, கட்டில் மேல் வைத்திருந்த எருக்கங்குச்சியை கையிலெடுத்தார் பஷீர்.

எருக்கங் குச்சியைப் பார்த்த ஆவி... “இல்ல வேணாம். நான் சத்தியம் பண்ணிடறேன்” என்றபடி, பஷீர் சொன்னது போல் சொல்லி, தரையில் மூன்று தரம் கையால் அடித்து சத்தியம் செய்தது.

அடுத்த சில வினாடிகளில் சங்கரின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் அப்படியே விலக ஆரம்பித்தது. திடீரென்று சங்கர் பேச ஆரம்பித்தான் “தோ போவுது... அங்கே போவுது...” என்றான்.

பஷீர் பாய் சங்கரிடம் கேட்டார் “யாருப்பா போறது.. சொல்லு”

“வெள்ளையா ஒரு உருவங்க.. அது என்ன பாத்துகிட்டே போகுது. ரோட்டோரமா இருகிற புளியமரத்தை நோக்கி போகுது…” என்றான் சங்கர்.

சங்கர் தெளிவாகப் பேசியதைக் கேட்ட உடனே வேதாசலத்தின் முகத்திலும், கமலம்மாளின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை பூத்தது.

அதற்குள் பஷீர் பாய் சொம்பிலிருந்த நீரை எடுத்தார். தன் வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, அந்த தண்ணீரை சங்கரின் மீது தெளித்தார்.

தண்ணீர் உடல் மேல் பட்டதும்.. “ம்ம்.. ப்ச்...” என்றபடியே ஒரு விதமாக உடலை சிலிர்த்துக் கொண்டான் சங்கர்.

அதுவரை அமைதியாக இருந்த வேதாசலம் மெல்ல சங்கரை அழைத்தார். “சங்கரு... யப்பா சங்கரு...”

சங்கரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

இதைக் கண்ட பஷீர் பாய், மறுபடியும் தண்ணீரை எடுத்து மந்திரமொன்றை முணுமுணுத்தபடியே சங்கரின் முகத்தில் தெளித்தார்.

“ம்ம்...ப்ச்சே...” என்றான் சங்கர்.

“தம்பி… தம்பி... ஏன் பேச மாட்டேங்கற…” என்று சங்கரைப் பார்த்து பஷீர் பாய் கேட்டார்.


“அந்த வெள்ளை உருவம், புளிய மரத்து மேல உக்காந்துகிட்டு என்னையே பார்த்து சிரிக்குது…” என்றான் சங்கர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நவநீதன், சங்கர் காட்டிய திசையில் தன் பார்வையை தீர்க்கமாக ஓடவிட்டான். அவன் சொன்னது போல் எந்த ஒரு உருவத்தையும் காணோம். தூரத்தில் புளியமரம் தேமே என்று நிற்பதும், அதன் ஊடே கருமை நிறம் இருப்பதும்தான் அவனுக்குத் தெரிந்த்து. ‘எதைப் பார்த்து விட்டு, இவன் உருவங்கறான்..’ என்று யோசித்தான்.

அவனது யோசனையை பஷீரின் குரல் கலைத்தது.

“அத விடு தம்பி... நான் பாத்துக்கறேன்...” என்றவர், அருகிலிருந்த வேதாசலத்தைக் காண்பித்து “யாரு இவரு..?” என்று பாய் கேட்டார்

அதுவரை பஷீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சங்கர் , முதல் முறையாக வேதாசலத்தை திரும்பிப் பார்த்து “எங்கப்பா” என்றான்.

அருகிலிருந்த கமலம்மாளை காண்பிக்கவும் “எங்கம்மா” என்றான்.

வேதாசலம் முகத்தில் சந்தோஷம் இன்னும் அதிகமாக வந்து ஒட்டிக்கொண்டது. பஷீர் பாயை நோக்கி “நீங்கதான் பாய்… எம் பையன காப்பாத்திய தெய்வம்…” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்

அதற்கு பஷீர் பாயிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அப்போது நவநீதன், “டேய் சங்கர்…” என்றான்

நவநீதன் பக்கம் திரும்பிய சங்கர் “என்னடா நவநீ” என்று பதிலளிக்கவும், நவநீதன் மனதில் ஆயிரம் டன் ஆச்சர்யம் கிளம்பியது. ‘அட பரவால்லயே தெளிவா பேசறான்’ என நவநீதன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சங்கரின் சித்தி இடைமறித்து கேட்டாள் “சங்கரு.. எப்படிப்பா இருக்க..?”

அவள் பக்கம் திரும்பிய சங்கர் “நல்லா இருக்கேன் சித்தி…” என்றான்.

நவநீதன் சங்கரை உற்றுப் பார்த்தான். சங்கருடைய முகம் இப்போது மிகவும் தெளிவாக இருந்தது. பஷீர் பாய் அதற்குள் பெட்டியில் வைத்திருந்த, தாயத்து ஒன்றை கையிலெடுத்து, கண்ணை மூடியபடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் சங்கரை நோக்கி தம்பி உன் சோத்தாங்கைய நீட்டு என்றார்.

அதுவரை அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சங்கரின் முகம் அஷ்ட கோணலாகியது. கையை நீட்டாமல் தலையை ஒரு பக்கமாக சாய்த்தபடி பஷீரைப் பார்த்தான்.



"அடி செருப்பால.. சைத்தான் கி பச்சா... யாருகிட்ட விளையாடுற... பஷீர்கிட்டயே விளையாடுறியா... இந்த பையன விட்டுட்டு போறேன்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு, மறுபடியும் இவன் மேலேயே வந்து உக்காந்துகிட்டியா..? விடமாட்டேன் உன்னை..." என்று கோபாவேசமாக கத்தினார் பஷீர் பாய்.

அதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியின் உறைந்து நின்றார்கள்.