Saturday, June 28, 2008

கற்பின் விலை..? (குறுங்கவிதைகள்)

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

--*--*--*--*--*--*--*--

எருது

மனிதர்களின் வாழ்க்கை
வண்டியை ஓட்ட
நான் சுமக்கிறேன் பாரத்தை..!

--*--*--*--*--*--*--*--

இசை

ஐந்தறிவு மாக்களையும்
வசப்படுத்த
ஆறறிவாளன் கண்டுபிடித்த
அற்புத சக்தி..!

--*--*--*--*--*--*--*--

கங்காரு

கர்ப்பப்பையில் சுமந்தது
போதாதென்று
வயிற்றுப்பையிலும் சுமக்கும்
உத்தமத்தாய்..!

--*--*--*--*--*--*--*--

அரசின் அறிவிப்பு

இன்று உலக
எயிட்ஸ் ஒழிப்பு தினம்
கடைபிடியுங்கள்
காண்டத்தோடு..!

--*--*--*--*--*--*--*--

மழை

பூமிப்பெண்ணைப்
பார்த்து
வானமகன்
விடும் ஜொள்..!

--*--*--*--*--*--*--*--

முகில்

பூமிப்பந்தை
குளிர்விக்க
இயற்கையளித்த இலவச
குளிர்சாதனக் கருவி..!

--*--*--*--*--*--*--*--

விதவை

பிறருக்கு
வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி....

--*--*--*--*--*--*--*--

Friday, June 27, 2008

ஹைக்கூ கவிதைகள் அல்ல குறுங்கவிதைகள்..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ', கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான வள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான். வித்தியாசம் எனெனவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன்.

இனி எனது குறுங் கவிதைகள்...

--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--

Saturday, June 21, 2008

நிலத்தின் அளவீடுகள்

நடுத்தர வர்க்கத்தினரும், ஏழையும் வேண்டுவது குடியிருக்க ஒரு வீடு. இப்போது வீடு வாங்குவது நடக்கின்ற காரியமா? நிலம் வாங்குவோம் என்பவர்களுக்கு நிலத்தின் அளவீடுகள் சரிவரத் தெரிவதில்லை (நான் உள்பட) அதற்காக இந்த பதிவு...

1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்

1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி

1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்

1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்

1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet)

@இதில் என் அறிவிற்கு எட்டியவரை சரியாகத் தந்திருக்கிறேன். பிழையிருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

('காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதி குறிப்பிட்ட நிலத்தின் அளவு இதை நான் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்)

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)

Monday, June 16, 2008

புரட்சித் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...

மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...

- மோ. கணேசன்.

Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

வரம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
மதிநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோகம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
அசரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
உன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!

Tuesday, May 27, 2008

எனது நண்பனுக்கு திருமண வாழ்த்து...



சு
கமான சுமைகளை சுமக்கப் போகும்
எங்கள் அருமை நண்பர்களே..! - ஈ
ரேழு ஜென்மங்கள் நிலைத்திருக்கும் திருமண
பந்தத்தில் இணையவிருக்கும் நல் இதயங்களே..!
ஷ்டமும் கஷ்டமும் நிறைந்தது வாழ்க்கை
அதில் இனிமையைக் காண்பது உங்கள் வேட்கை..!

கட்டுப்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில்
புரட்சி மணம் செய்கின்ற வைரங்களே..!
வினைகள் பல உண்டு திருமண வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்ந்தால்
தாழ்வில்லை உங்கள் வாழ்வில்..! - என்றென்றும்
தொடரட்டும் உங்கள் பந்தம்... வாழ்க நீவீர்..!

-அன்பு நண்பா... உன் திருமண வாழ்வில் உன்னத நிலையை அடைய எனது நல்வாழ்த்துகள்..!



என்றென்றும் நட்பு'டன்'

மோ. கணேசன்.

(எனது நண்பரின் பெயர் சுரேஷ். அவரது மனைவியின் பெயர் கவிதா. நான் எழுதிய வாழ்த்து மடலில் இவர்களிருவரின் பெயரும் முதலெழுத்தாக வரும்படி எழுதியிருக்கிறேன். கண்டுபிடித்தாயிற்றா...)

Thursday, May 08, 2008

எனது முதல் வசன கவிதை!

(மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்.., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின் முதல் முயற்சி இந்த 'ஏற்றத்தாழ்வு என்னும் பிணி' )

ஏற்றத்தாழ்வு எனும் பிணி

பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...

அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...

என்னென்று வினவினார்
மருத்துவர்

ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...

மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?

ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...

அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?

காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...

பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...

தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...

ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...

சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...

அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.

மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.

வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...

டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...

இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...

பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...

காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...

நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...

பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு

உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...

தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...

மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...

செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...

இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...

ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?

செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?

இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?

இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!

முடிகின்ற காரியமா இது?

எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?

இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?

அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?

மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?

உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!

(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)

Tuesday, January 01, 2008

எனது மகன் க. ஆதித்தனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

செல்வன். க. ஆதித்தன்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

அன்பைக் கொடு..!
ஆணவம் அழி..!
இன்பத்தை நுகர்..!
ஈகையை வளர்..!
உவகையைப் பெருக்கு..!
ஊக்கத்தை உயர்த்து..!
எளிமையைப் புகுத்து..!
ஏற்றம் பெற உழை..!
ஐயம் நீங்கப் பயில்..!
ஒழுக்கம் நிறை..!
ஓயாமல் சேவை செய்..!
ஓளவை சொல் கேள்..!
ஃதே உமக்கு உயர்வு தரும்..!


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2008

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோ. கணேசன்.

Monday, December 31, 2007

Happy new year - 2008

H ours of happy times with friends and family
A bundant time for relaxation
P rosperity
P lenty of love when you need it the most
Y outhful excitement at life's simple pleasures

N ights of restful slumber (you know - don't worry be happy)
E verything you need
W ishing you love and light

Y ears and years of good health
E njoyment and mirth
A angels to watch over you
R embrances of a happy years!

2008

Saturday, September 29, 2007

பெருந்தலைவர் காமராசர்


இந்தியாவின் 'கிங் மேக்கர்' என்றும், 'கருப்பு காந்தி' என்றும் அழைக்கப் பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்த கர்ம வீரர். எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அரசியல் என்ற அகராதியில் இவர் ஓர் அத்தியாயம்.

யானையம்மா யானை..!


யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

Tuesday, September 11, 2007

மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி

புரட்சிக் கவி பாரதி நினைவு நாள் கவிதை


பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!

கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!

எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
-மோ. கணேசன். 11.09.2007

Saturday, September 08, 2007

ஆதித்தனுக்கு ஆத்திச்சூடி


அன்பின் மிகுதியில்
ஆதித்தா நீ மலர்ந்தாய்..!
இன்றோடு நீ பிறந்து

ஈராண்டு முடிந்தாலும்
உந்தன் வளர்ச்சிக்கு
ஊட்டமாய் உன் அன்னை..!
எதிலும் நீ வெற்றி காண
ஏணியாய் உன் தந்தை..!
ஐயங்கள் அகற்று..!
ஒற்றுமையைக் கற்றுக் கொள்..!
ஓய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
ஃதே உனக்கு ஆயுதம்..!

Sunday, September 02, 2007

நிழற்படக் கவிதைகள்...

('நீரின்றி அமையாது உலகு' - திருக்குறள்.)


(விதியை மதியால் வெல்லலாம் - பழமொழி)

நிழற்படத்தினுள்ளே கவிதைகள்...

Saturday, September 01, 2007

கோட்டுக் கிறுக்கல்கள்

தாயும் சேயும்

தாயும் அவள் சேயும்



கள்ளமில்லாத வயது



குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...







சிறுமியும்
அவளது நாய்குட்டியும்


நான் ரசித்து வரைந்த ரதி...


அழகிய வாத்து



(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)



தமிழ்ப் பெண்



முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)



(நான் ரசித்த ஓவியங்களை, கோடுகளால் கிறுக்க முற்பட, இறுதியில் கிடைத்தவைகள்தான் இவை...)

வைரவிழா சுதந்திர தினக் கவிதை

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!

வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
ஆசுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
தமுமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாதமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேதமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீரங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மனமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

ஊறு விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!

-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Monday, July 16, 2007

கும்பகோணம் பள்ளி தீவிபத்து

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து மூன்றாமாண்டு நினைவு நாள் (16.07.2007) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...