Monday, September 28, 2020

இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் அணி! – விரட்டி அடித்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி!


மோ.கணேசன்

நேற்று,  சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 9-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

தான் ஆடிய இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பஞ்சாப் அணியும், தான் விளையாடிய ஒரு தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் ராஜஸ்தான் அணியும் இப்போட்டியில் களமிறங்கின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கவில்லை. எந்த மாற்றமும் இன்றி பஞ்சாப் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த்து. கடந்த போட்டியில் விளையாடிய யாஷ் ஜஸ்பால், டேவிட் மில்லர் ஆகியோருக்கு பதிலாக இப்போட்டியில் அங்கித் ராஜ்புத்தும், ஜாஸ் பட்லரும் களமிறங்கினர்.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாகத் தொடங்க, மறுபுறம் மயங்க் அகர்வால் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசத் தொடங்கினார். சார்ஜா மைதானம் சற்று சிறியது என்பதால் நாலாபுறமும் பந்துகள் பறந்தன.

பஞ்சாப் அணி 4.3 ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டது அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்களைக் கடந்தார். கே.எல்.ராகுலும் வேகம் காட்ட, பஞ்சாப் அணி 8.4 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

35 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 17-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். இருவரும் ராஜஸ்தான் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் வீதம் வந்துகொண்டே இருந்தது.  13.2 ஓவரில் 150 ரன்களைக் கடந்தது. 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த ராகுல், அங்கித் ராஜ்புத்தின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுல்-அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையையும் பெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே வாணவேடிக்கை காட்டி வந்த மயங்க் அகர்வால் 45 பந்துகளில், 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் ஐபிஎல்லில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். இவர் 106 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் கர்ரண் பந்துவீச்சில் சஞ்சு சாம்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல்லும், நிக்கோலஸ் பூரனும் தங்கள் பங்குக்கு வாணவேடிக்கை காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் 8 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை விளாசி 25 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்ட களமிறங்கியது ராஜஸ்தான் அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும் ஸ்டீவ் ஸ்மித்தும் களமிறங்கினர். ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் அடித்து ஆடினால்தான் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கயதால் ஜாஸ் பட்லர் அடித்து ஆட முயற்சிக்க,  4 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷெல்டன் காட்ரெல் பந்துவீச்சில் சர்ப்பிராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து ஸ்டீவ் ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் கைகோர்த்தார். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர். ஸ்மித் ஒரு புறம் பவுண்டரிகளாக விளாச, மறுபுறம் சஞ்சு சாம்சன் சிக்ஸர்களாக விளாச ஆரம்பித்தார். 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் ஐபிஎல் தொடரில் தனது 10-வது அரை சதத்தை எட்டிய ஸ்டீவ் ஸ்மித், ஜிம்மி நீஷம் பந்துவீச்சில் முகம்மது ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களாக இருந்தது. 11 ஓவரில் 124 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. அதாவது 66 பந்துகளில் 124 ரன்கள். கைவசம் எட்டு விக்கெட்டுகள்.

சஞ்சு சாம்சனுடன் விளையாட ராகுல் திவேட்டியா களமிறக்கப்பட்டார். ஒரு புறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் கடந்து, ஐபிஎல் தொடரில் தனது 12-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறம் ஆடிய ராகுல் திவேட்டியா நிறைய பந்துகளை வீண்டித்து ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்துக்கொண்டிருந்தார். இதனால் வெறுத்துப்போன சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிற்கெல்லாம் ஓடாமல் தவிர்த்துவிட்டு, அவரே ஸ்டிரைக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 150 ரன்களைத் தொட்டது. சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருக்க, திவேட்டியாவோ 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

30 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராஜஸ்தான் அணி அவ்வளவுதான் என்றே ரசிகர்கள் முடிவுகட்டினர்.

அதற்கு ஏற்ப, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்திருந்தபோது முகம்மது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 161 ரன்கள். 23 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராபின் உத்தப்பா திவேட்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். அவரும்

17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த்து. 18 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. 18-வது ஓவரை வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் கார்ட்டெல் வீசினார். அந்த ஓவரை திவேட்டியா எதிர்கொண்டார். அப்போது அவர் 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். கார்ட்ரெல் வீசிய ஓவரில் திடீரென விஸ்வரூபம் எடுத்த திவேட்டியா முதல் நான்கு பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டு ஆச்சர்யப்படுத்தினார். 5 பந்தில் ரன் எடுக்க முடியவில்லை என்றாலும், 6வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடித்து, தன்னை பேட்டிங் இறக்கியது சரிதான் என்று காட்டினார். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்து அசத்தினார் டிவேட்டியா. 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

19வது ஓவரை முகம்மது ஷமி வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் ராபின் உத்தப்பா 9 ரன்கள் எடுத்திருந்தபோது நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் தன் பங்கிற்கு அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாச, திவேட்டியா ஒரு சிக்ஸர் விளாசினார். ஷமி வீசிய கடைசி பந்தில்  திவேட்டியா மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது கணக்கில்  31 பந்துகளில் 7 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் அடங்கும்.

கடைசி ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் பந்து டாட், இரண்டாவது பந்தில் ரியான் பராக் தனது ஸ்டம்புகளைப் பறிகொடுக்க டென்ஷன் எகிற ஆரம்பித்தது. 4 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய டாம் கர்ரண் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, அணியை வெற்றிபெற வைத்தார். ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் தொடரில் 215 ரன்களை சேஸ் செய்ததே மாபெரும் சாதனையாக இருந்தது. இந்த சாதனையைச் செய்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஐபிஎல் தொடரின் முதல் சீஸனி (2008)ல், கொல்கத்தா அணிக்கு எதிராக 215 ரன்களை சேஸ் செய்து அசத்தியது ராஜஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையே மீண்டும் அதே அணி முறியடித்திருக்கிறது. மயங்க் அகர்வாலின் சதம் வீணாய்ப்போனது.

மேன் ஆப் தி மேட்ச் விருது ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.

தோல்விக்குப்பிறகு பேசிய கே.எல்.ராகுல், “எல்லா துறைகளிலும் சிறப்பாகவே செயல்பட்டோம். பீல்டிங்கில் ஜாஸ் பட்லர் அசத்தினார். சிக்ஸருக்கு போன பந்தை அற்புதமான பீல்டிங் திறமையால் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்து பந்தை உள்ளே தள்ளியதை பார்த்திருப்பீர்கள். பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது என்றாலும் ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பாக ஆடியது. இது எங்களுக்கு தோல்விதான் என்றாலும் அடுத்த போட்டியில் கம்பீரமாக மீண்டு வருவோம்” என்றார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மிம் “சஞ்சு சாம்சனின் அதிரடி அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்த்து. நானும் சஞ்சுவும் இணைந்த அமைத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீர்ர்கள் பயன்படுத்தி வெற்றி தேடித்தந்தனர். திவேட்டியாவினை களமிறக்கியது தவறு என்று எல்லோரும் நினைத்திருப்பீர்கள். அவர் நெட் பிராக்டீஸின்போது எப்படி விளையாடினார் என்பதை கணித்துதான் அவரை களமிறக்கினோம். அதை சிக்ஸர்களாக பறக்கவிட்டு, தன்னை களமிறக்கியது சரி என்று நிரூபித்தார். சிறப்பான வெற்றி. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 250 ரன்கள் அடித்தால்கூட விரட்டிப் பிடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

#IPL2020 #RRvsKXIP #ஐபிஎல்2020

No comments: