Saturday, September 26, 2020

பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: டெல்லி அணியிடம் தோற்றபின்பு தோனி பேட்டி


நேற்று துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட்ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 7-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டை ஆனாலும், சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணியிடம் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணியிடம் தோல்வி கண்டு, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி, வழக்கம்போல பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முந்தைய போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேஸில்வுட்டுடன் சென்னை அணி களமிறங்கியது. டெல்லி அணி கடந்த போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான் ஆகிய வீர்ர்களோடு களமிறங்கியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவாண் ஆகியோர் முதல் பவர்பிளேவில் மிக நிதனமாக ஆடி விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்த்து. பவர் பிளே முடிந்ததும் இருவரும் மட்டையை சுழற்ற ஆரம்பிக்க பவுண்டரிகளாகப் பறந்தது.
ஷிகர் தவாண் 27 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லாவின் சுழலில், எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். அப்போது டெல்லி அணி 10.4 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் பிரித்விக்கு தோள்கொடுக்க, அதிரடி காட்டிய பிரித்வி 35 பந்துகளில் அரை சதம் எட்டியவர், ஐபிஎல் தொடரில் தனது 5-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மேலும் அதிரடியாக விளையாடிய பிரித்வி 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லா வீசிய பந்தை இறங்கி அடிக்க முயன்றபோது, தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அவரது கணக்கில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
ரிஷப் பண்டுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்க்க, அணியின் ஸ்கோர் சீராக உயரத் தொடங்கியது. ஸ்ரேயாஸ் 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, சாம் கர்ரண் வீசிய வேகப்பந்தில், பேட்டின் விளிம்பில் பட்டு தோனியின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 37 ரன்களுடனும், மார்க்கய்ஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்ஸன், முரளி விஜய் ஆகியோர் வழக்கம்போல சொதப்பினர். முதல் விக்கெட்டாக ஷேன் வாட்ஸன் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் சுழலில் சிம்ரன் ஹெட்மயரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முரளி விஜய் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது நோர்ட்ஜெ பந்துவீச்சில் காகிசே ரபடாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய பாப் டூபிளஸிஸ் ஒரு புறம் போராடினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. நான்காவது வீரராக தோனி களமிறங்கி இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
முரளி விஜய் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 6 ஓவருக்கு 34. பாப் டூபிளஸிஸும், ருதுராஜ் கெய்க்வாட்டும் டெல்லி அணியின் சுழல்வீச்சை சந்திக்க முடியாமல் தடுமாறினர்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பந்துகளை வீணடித்தது போல, ருதுராஜும் தன் பங்கிற்கு பந்துகளை வீணடித்து 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து, தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.1 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது. 5-வது வீர்ராக தோனி களமிறங்குவார் என்று பார்த்தால், கேதர் ஜாதவ் அந்த இடத்தில் களமிறங்கினார்.
ஆரம்பத்தில் தடுமாறிய ஜாதவ் பிறகு கொஞ்சம் வேகம் காட்ட முயன்றார். டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், பீல்டிங்கும் சென்னை அணி வீரர்களை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. கேதர் ஜாதவ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணியின் எண்ணிக்கை 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது.
26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இருக்கும்போது தோனி களமிறங்கினார்.
பாப் டூபிளஸிஸ் ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 20 ரன்கள் எடுத்திருந்தபோதும், 41 ரன்கள் எடுத்திருந்தபோதும் சிம்ரன் ஹெட்மயரின் தடுமாற்றத்தால் கேட்ச்சில் இருந்து தப்பினார். அந்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.
கேப்டன் தோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டத்தின் கடைசி பந்தில் ரபடா பந்துவீச்சில் அமித் மிஸ்ராவிடம் கேட்ச்கொடுத்து 12 ரன்களோடு ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழக்க, சென்னை அணியின் ஆட்டம் 131 ரன்களோடு முடிந்துபோனது.
44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேன் ஆப் தி மேட்ச் விருது பிரித்வி ஷாவிற்கு வழங்கப்பட்டது.
தோல்விக்குப்பிறகு பேசிய தோனி, “அணியின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. அதை சரி செய்தாக வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பரிசோதனைகள் செய்து பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு விளையாடுவார். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்க வேண்டும்” என்றார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர் ஹைதரபாத் அணியை, அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன் @ மோகனன்



No comments: