Sunday, September 27, 2020

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!


நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற
, 8-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைக் கண்டிருந்த சன்ரைஸர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கின.

டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சன்ரைஸர்ஸ் அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, விரித்திமன் சாஹா, கலீல் அஹமது ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணி கடந்த போட்டியில் விளையாடிய நிகில் நாயக், சந்தீப் வார்ரியர் ஆகியோருக்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகிய வீர்ர்களோடு களமிறங்கியது.

சன்ரைஸர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான டேவிட் வார்னரும், ஜானி பாரிஸ்டோவும் களமிறங்கினர். பேட் கம்மின்ஸின் அற்புதமான இன்ஸ்விங்கரில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் பாரிஸ்டோவ். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே வார்னருடன் இணைந்து மெல்ல மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது, வருண் சக்கரவர்த்தியின் சுழலில் அவரிடமே எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மணீஷ் பாண்டேவுடன் விரித்திமன் சாஹா கைகோர்த்தார்.

இருவரும் நிதானமாகவும் தேவையானபோது அடித்தும் ஆடினர். சிறப்பாக ஆடிய பாண்டே அரை சதம் அடித்தார். 38 ரன்களில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆந்த்ரே ரஸ்ஸலின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது எண்ணிக்கையில் மூன்று பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

சாஹா 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சன்ரைஸர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. முகமது நபி ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணியில் 7 வீரர்களை பந்துவீசப் பயன்படுத்திய தினேஷ் கார்த்திக், சன்ரைஸர்ஸ் அணியின் ரன் வேகத்தை திறமையாக கட்டுப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்தவில்லை என்றாலும் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்காமல், பீல்டிங்கையும் சிறப்பாகச் செய்தது கொல்கத்தா அணி.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

ரன் ஏதும் எடுக்காமல் சுனில் நரைன் நரைன் கலீல் அஹமது பந்துவீச்சில், வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுப்மன் கில்லுடன் நிதீஷ் ராணா ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் சுப்மன் கில் நிதானமாக ஆட, நிதீஷ் ராணா 12 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி எதிரணியை திணறடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷீத் கானின் சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கில்லுடன் இயான் மோர்கன் கை கோர்த்தார். இருவரும் வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தனர்.

18வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை ருசித்த்து.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில், 62 பந்துகளில் 2 சிக்ஸர்கள். 5 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்தும், 29 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் குவித்த இயான் மோர்கனும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்துள்ளது. சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேன் ஆப் தி மேட்ச் விருது கொல்கத்தா அணியின் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டது.

தோல்விக்குப்பிறகு பேசிய டேவிட் வார்னர், “டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனாலும் கொல்கத்தா அணியினர் பந்துவீச்சில் எங்களை கட்டுப்படுத்திவிட்டனர். பேட்டிங்கில் கூடுதல் கவனம் வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பி இருக்கும்” என்றார்.

முதல் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் “அனைத்து துறைகளிலும் கடினமாக உழைத்த்தற்கு பலன் கிடைத்திருக்கிறது. அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது கூடுதல் பலம். இளம் வீரர்கள் அதிக உத்வேகத்துடன் பங்களித்திருக்கிறார்கள். கமலேஷ் நார்கோட்டி போன்ற இளம் வீர்ர்கள் அணிக்கு பலம். சுப்மன் கில் பேட்டிங்கின்போது எந்த வித அழுத்தமும் இன்றி சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தார். கேப்டனாக இருப்பதில் பெருமைப்பட்டாலும், எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்தவேண்டும். சிறப்பான வெற்றி” என்றார்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன் @ மோகனன்

#IPL2020 #KKRvsSRH

No comments: